Skip to main content

கூட்டணிக் கணக்குதான் தமிழக அரசியல்!

Published on 04/12/2017 | Edited on 04/12/2017



தமிழகத்தில் மக்களவைக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்ற கடைசித் தேர்தல் என்று 1996 தேர்தல் கூறப்படுகிறது. அப்போதிருந்து தமிழகத்தில் மக்களவைக்கு ஒரு நேரத்திலும் சட்டமன்றத்துக்கு ஒரு நேரத்திலும் தேர்தல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கான காரணம் இந்த அத்தியாயத்தில் அடுத்தடுத்து தெரியவரும். அதற்கு முன்னதாக, அதிமுக அரசில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஊழல்களையும் அவற்றை அம்பலப்படுத்திய மீடியாக்களின் துணிச்சலையும், தமிழ்நாட்டிற்கு கேடு வரும் நிலை ஏற்பட்டால் அதை பத்திரிகைகள் எப்படி முறியடித்தன என்பதையும் தெரிந்துகொண்டால் இன்றைய தலைமுறைக்கு மீடியாக்களின் முக்கியத்துவம் புரியும் என்று நினைக்கிறேன்.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சியில் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமில்லாத கொள்ளை நடைபெற்றது. யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது. பத்திரிகைகள் தனது கால்தூசுக்குச் சமம். மக்கள் எல்லோரும் தான் தூக்கி வீசுகிற ரூபாய் நோட்டுக்கு வாலை ஆட்டும் நாய்கள் என்று ஜெயலலிதாவும் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலாவும் துச்சமாக நினைத்து செயல்பட்டனர்.

ஜெயலலிதாவை எதிர்ப்போர் மிக கேவலமாக அவமானப்படுத்தப்பட்டனர். சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளை ஒடுக்க மன்னார்குடி கும்பல் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் தயாராக இருந்தது.

ஜெயலலிதாவின் இந்த ஆடம்பரப் போக்கு மக்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அப்போதுதான் தொடங்கப்பட்டு பாப்புலர் ஆன சன் டிவியும், பத்திரிகைகளும் இருந்தன. எந்த பயமும் இல்லாமல் அரசு செய்யும் ஊழல்களை பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.

வேலைக்கு செல்வோரில் இருந்து, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வரை ஜெயலலிதாவின் ஆடம்பரத்தால் பாதிக்கப்பட்டனர். மக்களை புழுப்போல நினைத்து ஜெயலலிதாவும் சசிகலாவும் செயல்பட்டனர்.






1993ல் வைகோ திமுகவை பிளந்து தனிக்கட்சி தொடங்கிய நிலையில் ஜெயலலிதா தனக்கு எதிரியே இல்லை என்று கருதத் தொடங்கிவிட்டார். அதேசமயம், திமுகவின் உறுதி சற்றும் குலையவில்லை. உதயசூரியன் சின்னத்தை வைகோவால் முடக்க முடியவில்லை. திமுகவின் சட்டதிட்டங்கள் அந்த அளவுக்கு உறுதியாக இருப்பதாக அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தெரிவித்திருந்தார்.

வைகோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து அரசு எதிர்ப்பில் உறுதியாகத்தான் இருந்தார். குமரிமுனையிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டார். அந்தப் பயணம் குறித்து வைகோ அப்போது பேசிய வசனம் பயணத்தில் அவருடன் நடந்தவர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.

"இந்த பயணம் சென்னைக்குள் நுழையும், போயஸ் தோட்டத்தை முற்றுகையிடும், கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழக மக்களிடம் சேர்ப்பிக்கும்" என்று வைகோ ஆவேசமாக முழங்கினார்.

ஜெயலலிதா மீதான மக்கள் வெறுப்பு அதிகரித்த நிலையில் 1996 ஆம் ஆண்டு மக்களவைக்கும் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் ஆதரவை பெற அதிமுக முயற்சி மேற்கொண்டது. ஆனால், ராஜிவ் காந்தியின் கொலையால் எழுந்த அனுதாப அலையில் ஜெயித்த ஜெயலலிதா, தனது செல்வாக்கால்தான் வெற்றி பெற்றதாக கூறி, காங்கிரஸை உதாசீனப்படுத்தியவர் என்று ஜி.கே.மூப்பனாரும் மூத்த தலைவர்களும் கூறினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக குமரி அனந்தன் இருந்தார். தேர்தல் உடன்பாடு குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் கட்சியின் மேலிடம் என்ன நினைக்கிறது என்று அறிய காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுகவுக்கு எதிராக வலுவான அணி அமைய வேண்டும் என்று பல்வேறு நடுநிலையாளர்களும், தொழில் அதிபர்களும் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனுக்குள் நடிகர் ரஜினிகாந்தே போகமுடியாத நிலை இருந்தது. எனவே அவரும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தார்.







இந்நிலையில் ரஜினியின் ஆதரவைப் பெற வைகோ விரும்பினார். அவரும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியைச் சந்தித்து அரசியலை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில்தான் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி என்று குமரிஅனந்தனிடம் கூறி அனுப்பினார்.

இதையடுத்து, சத்தியமூர்த்தி பவன் ரணகளமாகியது. நரசிம்மராவ் உருவப்படத்தை மூப்பனார் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர். தீவைத்துக் கொளுத்தினர்.

மூப்பனார் தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சி உதயமாகியது. ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.

அடுத்தநாளே திமுக தலைவர் கலைஞரை மூப்பனார் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு நடிகர் சோ ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டணி அமைந்தவுடன், கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்த்தும் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடு்த்தார்.

எனவே, தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுகவும், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய லீக், பார்வர்ட் பிளாக்கில் சந்தானம் பிரிவு ஆகியவை இணைந்து போட்டியிட்டன.

மதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

பாட்டாளி மக்கள் கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது.

பாஜக தனித்தும், சுப்பிரமணியசாமி தலைமையிலான ஜனதாக் கட்சி, கிருஷ்ணசாமியின் புதியதமிழகம் கட்சியோடு இணைந்தும் போட்டியிட்டது.






தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திமுக அணியில் திமுக 173 தொகுதிகளையும், தமாகா 39 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றாலும், மதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை.

இந்தத் தேர்தலில் முக்கிய அம்சமாக பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா சுகவனம் என்ற இளைஞரிடம் தோல்வியடைந்தார்.

அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சு.திருநாவுக்கரசர் அதிமுகவிலிருந்து விலகி எம்ஜியார் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதலில் போட்டியிட்டு சுமார் 15 லட்சம் வாக்குகளை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. 1991 சட்டசபைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு 1 சட்டசபைத் தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. 1996 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு 4 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன்பிறகு அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடவே இல்லை.

சட்டமன்றத்தை அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றிய திமுக, மத்திய அரசை அமைப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.

மக்களவைத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த 40 தொகுதிகளும் மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான எண்ணிக்கையாக இருந்தது.






பாஜக முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக வந்தது. ஆட்சியமைக்க தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் வாஜ்பாயை தலைவராக தேர்வு செய்திருந்தனர். அந்தக் கட்சியும் பெர்ணான்டஸின் சமதாக் கட்சி, சிவசேனா, ஹிமாச்சல் முன்னேற்றக்கட்சி ஆகியவை இணைந்த கூட்டணியும் 161 இடங்களைப் பெற்றிருந்தன.

ஆனால், ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, தெலுங்குதேசம், இடதுசாரி முன்னணி, திமுக, தமாகா, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்தஐக்கியமுன்னணிக்கு 192 உறுப்பினர்கள் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி 140 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.






இந்நிலையில் வாஜ்பாயை ஆட்சி அமைக்க வரும்படி குடியரசுத்தலைவர் சங்கர்தயாள் சர்மா அழைப்பு விடுத்தார். 18 நாட்கள் பிரதமராக பொறுப்பு வகித்த வாஜ்பாய் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ராஜினாமா செய்தார். அந்த அளவுக்கு பாஜகவை அனைத்து கட்சிகளும் வெறுத்து ஒதுக்கின.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். ஐக்கிய முன்னணி சார்பில் பிரதமராக மேற்கு வங்க முதல்வராக இருந்த தோழர் ஜோதிபாசுவின் பெயரை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், அந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஏற்கலாம் என்று ஜோதிபாசு தெரிவித்த கருத்தை ஒரு பிரிவினர் ஆதரித்தனர். ஆனால், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த பிரகாஷ் காரத் இதை எதிர்த்தார். அவருடைய கருத்து பெரும்பான்மையை ஆதரவைப் பெற்றிருந்ததால் ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு தவறிப்போனது. இதை இமலாயத் தவறு என்று தோழர் ஜோதிபாசு குறிப்பிட்டார்.

இதையடுத்து, கர்நாடகத்தை சேர்ந்த தேவகவுடா பெயரை கலைஞரும், மூப்பனாரும் முன்மொழிந்தனர். எனவே, தேவகவுடா பிரதமர் ஆனார்.

(ஐக்கிய முன்னணி ஆட்சிக் கவிழ்ப்பு, 1998 மக்களவை இடைத்தேர்தல், வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு, வாஜ்பாய் அரசு கவிழ்ப்பு, மீண்டும் திமுக ஆதரவுடன் வாஜ்பாய் அரசு அமைப்பு பற்றி வியாழக்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதிகள்: 

சார்ந்த செய்திகள்