திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் புனித நீராடிவிட்டு தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருகின்றன, இதனால் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடல் பாதுகாப்பு குழுவினரும், காவல்துறையினரும் கடலில் குளிக்கும் பக்தர்களை அறிவுரை கூறி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை, வைகாசி முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் திருச்செந்தூர் கோயிலில் அதிகப்படியான பக்தர்கள் குவிந்துள்ளனர். இத்தகைய சூழலில் கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னதாக வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் இன்று (19.05.2024) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.