தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (19.05.2024) மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடப்படுகிறது. அதே போன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (20.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.