‘ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் சரியில்லை’ என ஆர்.எஸ்.எஸ். முகாமிற்குள் குரல்கள் வலுவாக எழுந்திருக்கிறது.
“தமிழக பா.ஜ.க. தலைவர் ஹனிடிராப்பிங் செய்வது போல ஆளுநரையும் தடுமாற வைத்திருக்கிறார்” எனப் புலம்புகிறார்கள் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள். இந்த சனிப்பெயர்ச்சியில் அண்ணாமலைக்கு அஷ்டமச்சனி. “அஷ்டமத்தில் சனி பகவான் வந்தால், அவர் செய்வதெல்லாம் அவரை அறியாமலேயே அவருக்கு எதிராகப் போகும்” என ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.
சபரிமலை போய்விட்டு வந்த கையோடு, மதுரையில் பொதுக்கூட்டம் போட்ட அண்ணாமலை, சட்டசபையில் கவர்னருக்கு எதிராக முதல்வர் பேசியது பற்றி அறிக்கை விட்டார். அது பெரிதாக சோபிக்கவில்லை. Honey Trapping செய்கிறார் அண்ணாமலை என காயத்ரி ரகுராம் சொல்லும் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மேலிடம் சீரியஸாகவே எடுத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை Honey Trapping செய்து கே.டி.ராகவன், காயத்ரி ரகுராம், சூர்யா சிவா போன்றவர்களை சிக்க வைத்துவிட்டார் என பொதுமக்களும் பா.ஜ.க.வினரும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அதனால் டென்ஷனான அண்ணாமலை, பத்திரிகையாளர் சந்திப்பில் ஏடாகூடமாக நடந்துகொண்டார். ஒட்டுமொத்த மீடியாக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார்.
அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைந்தது. அதனால் அவர் ஆளுநரைப் பயன்படுத்த அவரது வார் ரூமை பயன்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஆளுநருக்கு அட்வைஸ் செய்ய மூன்று பேரை நியமித்திருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை ஆளுநருக்கு எடுத்துச் சொல்வார்கள். அவர்களைப் பிடித்தார் அண்ணாமலை. இந்தி என்கிற வடநாட்டு மொழியை வளர்த்து, அதன் உடன்பிறந்த கொல்லியாக சமஸ்கிருதத்தை கொண்டுவருவது தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை.
தமிழ் மட்டுமல்ல... இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளையும் அழிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே போலீஸ்... என எல்லாம் ஒரே என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் பழைய நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கூட்டணிக் கட்சிகளை உடைப்பது, அதிகாரிகளை அரசியலில் இறக்கி படம் காண்பிப்பது, ரஜினி போன்ற நட்சத்திர நடிகர்களை வைத்து பா.ஜ.க.வை வளர்ப்பது, இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவது, ராமர் கோயில் கட்டுவது போன்றவை அரதப்பழசாக மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகிவிட்டது. அதனால் புதிய டெக்னிக்குகளை உபயோகப்படுத்தச் சொல்வதுதான் ஆளுநர்களுக்கென நியமிக்கப்பட்ட ஆலோசகர்களின் வேலை.
இதில் ஆளுநர் ரவி, காவல்துறையில் உயர் பதவியில் இருந்தவர். அவருடைய புத்திசாலித்தனம் மிகவும் கூர்மையானது என்பதால் அண்ணாமலை சொல்லும் செய்திகளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில இந்திய பிரதிநிதியும் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகியுமான பி.எல்.சந்தோஷின் பெயரை பயன்படுத்திச் சொல்வாராம் அண்ணாமலை. அதில் ஆளுநருக்கு சந்தேகம் வந்தால் பி.எல்.சந்தோஷிடம் சொல்லி, அவரையே பேச வைப்பார்கள். இவர்கள் கொடுத்த ஆலோசனையில்தான் சனாதன தர்மம், தமிழகம்... என கவர்னர் உளறித் திரிந்தார்.
இந்த ஆலோசகர்கள், தமிழகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கம். அவர்களில் ஒருவர் நிதித்துறை அதிகாரியான முருகானந்தம் ஐ.ஏ.எஸ். முதல்வரின் முக்கிய அதிகாரியான பவர்ஃபுல் உதயநிலா அதிகாரிக்கு மிக நெருக்கமானவர் நிதித்துறை முருகானந்தம். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை மாற்றலாமா? என ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். ஆலோசகர்கள் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்க... அவர்கள் சம்மதிக்கவில்லை.
ஆனால், அண்ணாமலை சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசி, ஆளுநர் உரையில் அச்சிட்டதை ஆளுநர் தவிர்க்கலாம் எனச் சொல்ல, அண்ணாமலையின் அட்வைஸை ஏற்ற ஆளுநர், மாற்றிப் பேசினார். சட்டசபையில் நடந்த விஷயத்தைப் பற்றி ஜனாதிபதிக்கு ரிப்போர்ட் அனுப்பிய ஆளுநர், “அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுத்தான் பேசினேன்” எனச் சொல்லியுள்ளார். ஆளுநர், ஆளுநர் உரையை மீறுகிறார் என கண்டுபிடித்த துரைமுருகன், அச்சடித்த ஆளுநரின் உரைக்கு எதிர் உரையை தயார் செய்து தர, முதல்வர் சட்டமன்றத்தில் ஸ்கோர் செய்து எதிர்வினையாற்றியுள்ளார்.
இப்படி அண்ணாமலையின் ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது மட்டுமல்ல... திராவிட எதிர்ப்பு தமிழகத்தில் எடுபடாது என ஆளுநருக்குப் புரிந்ததால், நான் அண்ணாமலை சொல்லித்தான் செய்தேன் என பா.ஜ.க. தலைவர்களிடம் ஆளுநர் ரவி புலம்பியிருக்கிறார். ஊடகங்களில் அதிகாரிகள் என்னை தவறாக வழிநடத்திவிட்டார்கள் என லீக் செய்திருக்கிறார்.
டெல்லியில் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக பிரதிநிதிகள் குடியரசு தலைவரை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடிதத்தைக் கொடுத்து முறையிட்டனர். ஏற்கனவே பாரதியார் உருவம் பொறித்த வண்டியை சுதந்திர தின அணிவகுப்பில் ஏற்காதது மோதலாகிப் போனதைப் போல சட்டமன்ற விவகாரமும் மத்திய அரசுடன் நேரடி மோதலுக்கு வித்திட்டுவிட்டது.
இந்த மோதலைத் தொடர்ந்து... வருமானவரித்துறை, புலனாய்வுத் துறைக்கு ஒரு பிராமண அதிகாரியை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அண்ணாமலையோ, இன்னமும் சளைக்கவில்லை. பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மேல் ஏகப்பட்ட ஆபாச புகார் கடிதங்களைத் திரட்டி, அவரை பெட்டிப்பாம்பாக தனது காலடியில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.