தமிழகத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏதோ ஒரு விநோத பழக்கங்கள் இன்றளவும் இருந்து கொண்டுதான் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகர் பழங்குடியினர் காலனியில் குலதெய்வ வழிபாடாக செவ்வாய்க்கிழமை இரவு பெருமாள் பூஜையுடன் திருவிழா தொடங்கி புதன் கிழமை பால்குடம், காவடி எடுப்பும் அன்றிரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.
மறுநாள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை குலதெய்வமான காளிக்கு எருமை, ஆட்டுக் கிடாக்கள் வெட்டும் பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்போது, இளைஞர்கள் வரவேற்பு பதாகை வைத்து அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் பெரிய காளி கோயில் முன்பு வந்து ஒரு கலர் (குளிர்பானம்) கொண்டு வந்து வணங்கிவிட்டு பாட்டிலை திறந்து தரையில் ஊற்றிச் சென்ற நிகழ்வு நம்மை இழுத்தது.
குளிர்பானம் ஊற்றிக் கொண்டிருந்தவர்களிடம் என்ன இது என்று கேட்க.. நம்மிடம் பேசிய அவர்கள், வருஷத்துக்கு ஒரு முறை எங்களை காக்கும் குலதெய்வம் காளிக்கு எருமை, கிடா வெட்டி ரத்தம் குடிச்சு பூஜை போடுவோம். அந்த பூஜை போட முதல்ல முத்து போட்டு உத்தரவு கேட்போம். உத்தரவு கிடைத்ததும் பூஜைக்காக எருமை, ஆட்டுக் கிடாக்கள் வாங்கி வந்து கோயில் வாசலில் கட்டிய பிறகு முரப்பாடு (முரண்பாடு) தீர்க்கிறதுக்காக 10 ரூபா கலர் வாங்கி வந்து தரையில ஊத்துவோம்.
அதாவது காளி பூஜை முடிஞ்சதும் எங்களுக்குள்ள ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை வரும்போது கோபத்தில் அம்மா தாயே காளி நீ இருந்தா கேளுனு சொல்றது பழக்கம். அப்படி தெரிஞ்சோ தெரியாமலோ நாம் சொல்லி இருந்தால் இப்ப பூஜையில் ஒருத்தருக்கு ஒருத்தர் முரப்பாடு (முரண்பாடு) இருக்கும். முரப்பாடு இருக்கும் போது ஒற்றுமையா பூஜை போட முடியாது. அடுத்தவங்க வீட்ல சாப்பிட முடியாது. சாமி குத்தமாகிடும். அதனால பூஜைக்கு முன்னால முரப்பாடு தீர்க்கனும். அதுக்காக எங்க குல வழக்கப்படி 10 ரூபா கலர் (குளிர்பானம்) வாங்கி வந்து காளிக்கு முன்னால நின்று தெரிஞ்சோ தெரியாமலோ யாரையாவது கூடக் குறையப் பேசி இருந்தால் எங்களை மன்னிச்சு எல்லாரையும் ஒத்துமையா பூஜையில் கலந்துக்க வையினு வேண்டிக்கிட்டு காளி எல்லைக்குள்ள எங்காவது ஒரு இடத்தில் தரையில் கலரை ஊற்றினால் போதும், மொத்த முரப்பாடும் தீர்ந்துடும். அதைத் தான் இப்ப செய்றோம்.
கலர் ஊத்திட்டாலே முரப்பாடு தீர்ந்து யாரும் யார் வீட்லயும் சாப்பிடலாம். ஒற்றுமையா பூஜையும் போடலாம். நாடும் நாமலும் ஒற்றுமையா இருக்கனும். மழை பெய்து வெள்ளாமை விளையனும். எல்லாத்துக்கும் சேர்த்து தான் எங்க காளிக்கு கிடா வெட்டி ரத்தபலி கொடுத்து பூஜை போடப் போறோம் என்றனர்.
சாதாரண மக்கள் தங்களுக்குள் ஒற்றுமை முக்கியம் என்பதை ரொம்ப சாதாரணமாக 10 ரூபாய் குளிர்பானத்தை தரையில் ஊற்றி ஒற்றுமையை நிலைநாட்டுவது எவ்வளவு பெரிய செயல். இது போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டாலே ஒற்றுமை சீர்குலையாது.