கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் திங்களன்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த உத்தரவுக்குப்பிறகு, நிர்மலாதேவி தனியாக ஒரு போலீஸ் வாகனத்திலும், முருகனும் கருப்பசாமியும் வேறொரு போலீஸ் வாகனத்திலும் மதுரை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து முருகன், கருப்பசாமி சென்ற போலீஸ் வாகனம் கிருஷ்ணன்கோவில் என்ற ஊரை அடைவதற்கு முன்பாக, எதிர் திசையில் வந்துகொண்டிருந்த நாச்சியார் மில் வேன், போலீஸ் வாகனத்தில் நேருக்கு நேர் மோதுவது போல் மிக வேகமாக வந்தது. அதனால் நிலைகுலைந்துபோன போலீஸ் வாகனம், எதிரில் வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் (பச 67 ஃ 5830) வாகனத்தின் பக்கவாட்டில் உரசியபடி மோதி சாலையின் வலதுபுறத்தில் பிரேக் அடித்து நின்றது. இந்த திடீர் விபத்தால், முருகன், கருப்பசாமி மற்றும் உடன்சென்ற எஸ்கார்ட் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் முருகானந்தத்திடம் எஸ்கார்ட் காக்கிகள், “"பாருடா... சைடுல உன் வண்டி மோதி ஸ்க்ராட்ச் ஆயிருச்சு. ஒழுங்கு மரியாதையா... சரிபண்ணிக் கொடுத்திரு...'’என்று சவுண்ட் விட, பதிலுக்கு முருகானந்தம் "சார்... தப்பு உங்க மேலதான். ரைட் எடுத்து என் வண்டிமேல உங்க வேன் மோதி, என் வண்டியும் டேமேஜ் ஆயிருச்சு. நியாயமா பார்த்தா, நீங்கதான் எனக்கு பணம் தரணும்'’’ என்று நியாயத்தை எடுத்துரைக்க... அந்த இடம் ஒரே கூச்சலும் குழப்பமும் ஆனது.
அந்த நேரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் முருகனைப் பார்த்துவிட்டு இன்டிகா காரில் மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அவருடைய கொழுந்தியாள் சுவீதா, இந்த விபத்து ஸ்பாட்டைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். அவர் போலீஸ் வேனிலிருந்து இறங்கி நின்ற முருகன் பக்கத்தில் சென்று பேச... அவரிடம் "மயிரிழையில் உயிர் தப்பிச்சேம்மா...'’என்று உடல் நடுக்கத்துடன் கண் கலங்கினார் முருகன்.
சம்பவ இடத்தில் சுவீதா நம்மிடம் ""ஏற்கனவே எங்க மாமா (முருகன்) உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நாங்க கேள்விப்பட்டதை சொல்லிக்கிட்டிருக்கோம். இப்ப பாருங்க. வேணும்னே எங்க மாமா இருந்த சைடுல மோத வந்திருக்குது ஒரு வேன். அந்த வேனைக்கூட பிடிக்காம விட்ருச்சு போலீஸ். ஒரு தவறும் செய்யாத நிரபராதிகளை எட்டு மாசமா சிறையிலேயே வச்சிருக்காங்க. ஜாமீனும் தரல. ஜெயில்ல வச்சே விசாரிச்சு வழக்கை முடிக்கணும்கிறது கோர்ட் உத்தரவு. அடுத்தமுறை, கோர்ட்டுக்குக்கூட ஜெயிலைவிட்டு வெளிய வரவிடாம, ஜெயிலுக்குள்ளேயே விசாரிக்கிறதுன்னு யாரோ முடிவு பண்ணிட்டாங்க. எங்களுக்கு சந்தேகமாத்தான் இருக்கு. எங்க மாமாவைக் கொல்லுறதுக்கு யாரோ சதி பண்ணுறாங்க''’என்று புலம்பினார். திகிலூட்டும் திடீர் திருப்பமாக இருக்கிறது இந்த விபத்து!