ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து விழாக்கள் நெருங்கி வரும் வேளையில் சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான்கு மண்டலங்களையும் ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் பணிகளை மைய அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த மாநகராட்சியில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அரசு ஊழியர்களைப்போல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உள்பட அனைத்து சலுகைகளும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொருந்தும். என்றாலும், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வீடுகள், தனியார் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகளின் மீது விதிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய், வாகன நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாகங்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைக் கொண்டே ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அலுவலகங்களுக்கான பராமரிப்பு, சாதல்வார் செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 2011 முதல் 2016 வரை உள்ளாட்சி அமைப்பு அமலில் இருந்தபோது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் வைத்த அடாவடி செலவினங்கள், புதிய வருவாய் மூலங்களை உருவாக்காதது உள்ளிட்ட காரணங்களால் சேலம் மாநகராட்சியின் கஜானா தொடர்ந்து கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
அத்தோடு, பிரம்மாண்டமான உயர்மட்டப்பாலங்கள் முதல் சாதாரண கழிப்பறை வரை வித்தியாசம் பார்க்காமல் திறந்து வைக்க சளைக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக சேலத்திற்கு வந்து செல்கிறார். அதுபோன்ற காலங்களில் முதல்வருடன் பயணிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகளுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து என அனைத்து வகையான உபசரிப்பு செலவினங்களும் மாநகராட்சி தலையில் கட்டப்பட்டு விடுவதாகவும், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அம்மா உணவக பராமரிப்பும், பெரும் நிதிச்சுமைக்கு மற்றொரு காரணம் என்கிறார்கள்.
இப்படி கணக்குவழக்கில்லாமலும், வெட்டிச்செலவுகளை எந்தக்கணக்கில் சேர்ப்பது என்று தெரியாமலும் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்களால், வியர்வை சிந்தி உழைக்கும் ஊழியர்களுக்கே மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு சேலம் மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது.
''அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான 30 அல்லது 31ம் தேதியில் அவரவர் வங்கிக்கணக்கில் சம்பள பணம் இசிஎஸ் முறையில் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். அதுபோல் நாங்களும் மாதத்தின் கடைசி நாளில் அந்த மாதத்திற்குரிய சம்பளத்தைப் பெற்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அசோகன் என்பவர் சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது அப்படியொரு அதிசய நிகழ்வு நடந்தது,'' என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
இன்னும் சிலரோ, பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் மாநகராட்சி நிர்வாகம் எங்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என்கிறார்கள்.
''ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இந்தாண்டு முதல் பண்டிகை முன்பணம் 5000ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாத சம்பளமே இன்னும் நிர்வாக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் சேலம் மாநகராட்சி இழுத்தடிக்கிறது. இப்போதுதான் முதல்கட்டமாக துப்புரவு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் ஊதியம் வழங்கி இருக்கிறார்கள். கிளர்க், பில் கலெக்டர்கள், ஆர்ஐக்கள், ஏஆர்ஓக்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட நிர்வாக ஊழியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் என இரண்டு மாத சம்பளம் தராமல் உள்ளனர்.
ஆணையர் சதீஸிடம் சம்பளம் பற்றிய பேச்சை எடுத்தால், கடும் நிதி நெருக்கடி என்கிறார். அதையே காரணம்காட்டி பில் கலெக்டர்களுக்கு தினமும் வரி வசூலுக்கு டார்கெட் நிர்ணயிக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனாலும், அவர் நிர்ணயம் செய்த இலக்கை எட்டவில்லை என்றால் கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் உங்களை சஸ்பெண்ட் செய்தால் பொண்டாட்டி, புள்ளைங்க எல்லாம் நடுத்தெருவில் நிற்பார்கள்... பரவாயில்லையா... என மன உளைச்சல் ஏற்படும் வகையில் திட்டுவார்.
இப்போதுகூட ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் அனைத்து பில் கலெக்டர்களும் வரி வசூலில் ஈடுபடுகிறோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... வரி செலுத்தும் நபர்கள் எங்கள் கண்ணில் பட்டுவிட்டால், அது சலூன் கடையாக இருந்தாலும், இரவுக்காட்சி ஓடும் தியேட்டராக இருந்தாலும் சரி அப்போதும் வரி செலுத்துவது குறித்து பேசி விடுகிறோம். ஆனால் இதெல்லாம் ஆணையருக்கு எங்கே தெரிய போகிறது? ஆணையர் சதீஸூக்கு, அரசாங்கம் ஊதியம் வழங்குகிறது. அதனால் அவருக்கு எங்களின் வலியும், வேதனையும் தெரியவில்லை.
சேலம் மாநகராட்சி கமிஷனராக செல்வராஜ் இருந்தபோது மாதந்தோறும் 15ம் தேதிக்குள் சம்பளம் கிடைத்தது. அப்போது இருந்தே இந்த மாநகராட்சி நிர்வாகம் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டது. இப்போது இரண்டு மாதம் ஆனாலும் சம்பளம் கொடுக்க மாட்டேன்கிறார்கள். பில் கலெக்டர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் மாதிரி ஆகிவிட்டோம்,'' என்று புலம்பித் தள்ளினர் சில பில் கலெக்டர்கள்.
கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்கிறது பகவத் கீதை. ஆனால், வேலை செய்; சம்பளம் கேட்டுவிடாதே என்கிறது சேலம் மாநகராட்சி.