2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. உள்துறை அமைச்சர் பதவி முன்னால் பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டது. அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனதில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் அதிரடியாகவே உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததில் இருந்து தற்போது பா. சிதம்பரம் கைது வரை அனைத்திலும் அதிரடி காட்டியவர் அமித்ஷா. நீண்ட நாட்களாகவே ஏன் அமித் ஷா இந்த பொறுப்பிற்கு வந்தார் என்ற சந்தேகம் இருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை செய்தார். அப்போது அனைத்து இந்துத்துவ இயக்கங்களும் அவரை எதிர்த்து பேச முடியாமல் மௌனம் சாதித்தனர். ஆனால் அவர் இறந்த பிறகு பா.ஜ.க வின் அடிமை ஆட்சியான அ.தி.மு.க வின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது. பல்வேறு இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் நீடித்து வந்த நிலையில் அக்டோபர் 08, 2019 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த மாவட்ட கண்கானிப்பாளர் செல்வராஜிடம்l அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க வின் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளரை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க வின் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைதியாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்காக மாவட்ட எஸ்.பி செல்வராஜிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால் அவர் கடைசி நேரத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஆகையால் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-ஐ உடனடியாக பணியிடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தோம். சில அரசியல் காரணத்திற்காக இது போன்று மறுப்பது ஏற்புடையது அல்ல" என்றனர். இதில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தார். மதுரையில் ஊர்வலம் நடத்தத் தயாராகும் தருவாயில் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் கைது செய்யப்பட்டார். அது போன்ற சமயத்தில் கூட எந்த ஒரு கடிதமும் மத்திய அமைச்சர்களுக்கோ, பிரதமருக்கோ அனுப்பி வைக்கப்படவில்லை. அப்போது கடிதம் அனுப்பினால் தற்போது மோடி 50 மேற்பட்ட பிரபலங்கள் மீது வழக்கு தொடுத்தது போல் மீதும் வழக்கு பாய்ந்திருக்கும் என்ற பயம் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது. வெளியே தெரிந்த நிகழ்வு இது ஒன்று தான். இது போல எத்துனை கடிதம் அனுப்பப்பட்டது என்பது பா.ஜ.க-வினருக்குதான் வெளிச்சம். இது போல பாஜக, ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்கத்தான் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக பா.ஜ.க நியமித்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ்.பியிடம் கேட்டபோது "இதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் என்ன ஆகப் போகிறது? வரும் 20ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்தவும் அனுமதி அளித்துவிட்டேன்" என்றார். "நாங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்தினோம். மேலும் இது போன்ற நல்ல இயக்கங்களின் செயல்பாடுகளை நிறுத்தியதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மேலும் இக்கடிதம் கட்சி சார்பாக அனுப்பப்பட்டது கிடையாது. அது ஒரு தனி நபர் முடிவு" என்றார் பா.ஜ.க-வின் மாநில பொது செயலாளர் வசந்த ராஜன். இது போன்று நடக்கும் நிகழ்வுகள் ஆட்சி அதிகாரத்தின் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக மாற்றுகிறது. ஒரு வரை பணியிட மாற்றம் செய்ய சொல்லி கடிதம் வெளிப்படையாக எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-அஹமத் அலி.