சேலத்தில், முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு தொகை திருப்பித்தரப்படும் என்று ஆசை வலை விரித்து பல கோடி ரூபாயை நூதன முறையில் சுருட்டிய கணவன், மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (38). இவருடைய மனைவி இந்துமதி (32). மணிவண்ணன், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன்பார்க் அவென்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பில் ஆர்எம்வி குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார்.
தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், 100 நாள்களில் முதலீட்டுத் தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்காக திருப்பித் தரப்படும் என்றார். அத்துடன், தான் நடத்தி வரும் மசாலா, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு பகுதிவாரியாக முகவர் உரிமை வழங்கப்படும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆணை பெற்றுத்தரப்படும் என்றெல்லாம் ஆசை வலை விரித்தார். இரட்டிப்பு மடங்கு தொகையுடன் கூடுதலாக 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மணிவண்ணனின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பிய பலர், அவருடைய நிறுவனத்தில் போட்டிப்போட்டு முதலீடுகளைக் கொட்டினர்.
இது தொடர்பாக அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தியும், பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் செய்து வந்தார். இவற்றின்மூலம் சமூகத்தில் தன்னை ஒரு பெரிய மனிதராக சித்தரித்துக் கொண்டார். இந்நிலையில், சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2017ல் மணிவண்ணன் நடத்தி வந்த நிறுவனத்தில் 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் மணிவண்ணன் உறுதி அளித்தபடி அந்தப் பெண்ணுக்கு இரட்டிப்பு மடங்கு தொகையோ, விற்பனை உரிமையோ வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
காவல்துறை விசாரணையில் மணிவண்ணன் நிறுவனத்தில் மேலும் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து இருப்பதும் தெரிய வந்தது. சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவர் 2.82 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவரையும் ஏமாற்றி இருக்கிறார் மணிவண்ணன். குகை பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வரும் கார்த்திகேயன் என்பவர், 3.53 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அவரிடம் மணிவண்ணன் 120 நாள்களில் முதலீட்டைக் காட்டிலும் இரு மடங்கு பணம் தருவதாகவும், மாதந்தோறும் லாபத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதி அளித்து இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டு கார்த்திகேயன் நெருக்கடி கொடுக்கவே, மணிவண்ணன் கூலிப்படை கும்பலை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.
சேலம் 5 சாலை அருகே அச்சகம் நடத்தி வரும் ஒருவரிடம் தன்னுடைய நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனம் என்று கூறி, 34.60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதில் ஒருவழியாக போராடி, அந்த முதலீட்டாளர் 7 லட்சம் ரூபாயை வசூலித்து விட்ட நிலையில், 27.60 லட்சம் ரூபாயை மணிவண்ணன் கடைசி வரை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நூதன மோசடி எல்லாவற்றிலும் மணிவண்ணன் மட்டுமின்றி அவருடைய மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி மற்றும் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மோசடி தம்பதியினரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (அக். 18) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், 13 செல்போன்கள், பிஎம்டபுள்யூ, ஹோண்டா ஜாஸ் ஆகிய இரு சொகுசு கார்கள், பத்து பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில போலி ஆவணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மணிவண்ணன் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 350 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முதலீடு செய்தவர்களில் சிலர், பணம் திரும்பக் கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளன. மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததும், நட்சத்திர ஹோட்டல்களில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், இதுபோன்ற போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளைக் கண்டு முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் குமார் (அன்னதானப்பட்டி), விஜயகுமாரி (மத்திய குற்றப்பிரிவு), சதீஸ் (கொடுங்குற்றப்பிரிவு), உதவி ஆணையர் சரவணன் (வடக்கு சரகம்) மற்றும் காவலர்களை ஆணையர் பாராட்டியுள்ளார்.