உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கரோனா நிதியில் வெளிப்படை தன்மை தேவை என்று சமூக செயற்பாட்டாளர் பியுஸ் மனுஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, " அனைவருக்கும் வணக்கும். அய்யா மோடிஜி அவர்கள் பி.எம். கேர் ஃபண்ட் என்று இந்த கரோனா தொற்றுக்காக வங்கி கணக்கு ஆரம்பித்துள்ளார். அதில் பலரும் பணம் அனுப்புவதாக தினமும் சொல்கிறார்கள். ஜோகோ உரிமையாளர் 25 கோடி கொடுத்தார், நடிகர்கள் இவ்வளவு கொடுத்தார்கள் என்ற செய்தி தினமும் வருகின்றது, அப்படி வந்தால் நல்லது. ஆனால் அந்த நிதி மக்களுக்கு எப்படி தினந்தோறும் செலவிடப்படுகிறது என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்ததாக வேண்டும். அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
இந்த இக்கட்டான நிலையில்கூட, பல கூட்டங்களை காணொளி காட்சி மூலம் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். அது வரவேற்கத்தக்க ஒன்று. நீங்கள் தட்டை வைத்து எப்படி தட்ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தீர்கள், விளக்கேத்தி எப்படி கரோனா வைரஸை விரட்டலாம் என்று கற்றுக்கொடுத்தீர்கள். இந்த மாதிரி விஷயங்களில் உலகத்துக்கே நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். நீங்கள் லாக் டவுன் செய்ய சொன்னீர்கள், நாங்கள் எல்லாம் லாக் டவுன் ஆகிவிட்டோம். நாட்டு நல்லதுக்காகத்தானே பிரதமர் சொல்கிறார் என்றுதான் நாங்கள் நினைத்தோம். தற்போதும் நிறைய பேர் அந்த வங்கி கணக்கில் பணம் போடுவதாக செய்திகள் வருகிறது. நான்கூட 50 ரூபாய் அனுப்புகிறேன். ஆனால் செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களிடம் காட்டினால் நன்றாக இருக்கும். அதை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.