இந்தியப் பிரிவினை வலிகள்... ஒரு ஃப்ளாஷ்பேக்!
இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளின் குடும்பங்களின் வாழ்க்கை பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது. ஆனால், 1947க்கு பிறகு அத்தனையும் மாறிவிட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா!
கி.பி.1600களில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி தனது வர்த்தக மையங்களை பல இடங்களில் நிறுவியது. அத்துடன் இந்த கம்பெனி பெரிய அளவில் நவீன ஆயுதங்களுடன் கூடிய பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களைக் கொண்ட ராணுவத்தையும் வைத்திருந்தது.
1857 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் அவர்களுக்கு கீழ் இருந்த ராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டே இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு நேரடியாக பிரிட்டிஷ் ராணியின் நேரடி அதிகாரத்தின் கீழ் வந்தது.
பிரிட்டிஷ் அரசு அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தை இந்தியாவுக்கு அளித்தது. இந்த ஆட்சியை எதிர்த்து ரத்தம் தோய்ந்த போராட்டங்களை இந்தியர் நடத்தினர்.
பிரிவினையின் வேர்கள் - வெள்ளையனே வெளியேறு போராட்டம்!
1858ம் ஆண்டு பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து மக்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்க வசதியாக பிரிட்டனில் உள்ளது போல அரசியல் கட்சிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 1885ம் ஆண்டு அகில இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும், மதசார்பற்ற தன்மையுடைய இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர்களாக பலர் பொறுப்பு வகித்தனர். மக்களுக்குத் தேவையான பொருளாதார, சமூக உரிமைகளுக்காக போராடியது. இதன்மூலம் பல்வேறு உரிமைகள் இந்தியர்களுக்கு உறுதி செய்யப்பட்டன.
கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. காந்தி தலைவரான பிறகு அகிம்சை வழிப் போராட்டம் தொடர்ந்தது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் சர்ச்சில் கேட்டுக்கொண்டார்.
சொந்த நாட்டில் இந்தியர்களை பிரிட்டன் அடக்கி ஒடுக்கும்போது, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்க முடியாது என்று காந்தி மறுத்தார். 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை காந்தி தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத அமைப்பு என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அடு்ததநாள் காந்தி, நேரு உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முற்றிய பிரிவினை சிந்தனை!
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு இயங்கிய காலகட்டத்திலேயே, 1906ம் ஆண்டு வாக்கில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்திய முஸ்லிம்களில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துவோர் இந்த அமைப்பை உருவாக்கியிருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மதரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியோடு இந்த அமைப்பை கையாண்டு வந்தது.
1930ம் ஆண்டு வாக்கில் காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீகிற்கும் இடையே நம்பகத்தன்மை குறைந்து வந்தது.
1940 ஆம் ஆண்டு முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற யோசனையை தனது கொள்கையாக பிரகடனம் செய்தது.
வடமேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளைக் கொண்டு இரு பகுதிகளாக தனிநாடு உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
PAKISTAN என்ற பெயரும் முன்மொழியப்பட்டது. இந்த பெயரில் ஆங்கில I விடுபட்டிருந்தது. இந்த பெயருக்கு உருதுவில் தூய்மையான நிலம் என்று அர்த்தம். ஆங்கில எழுத்து வாரியாக, P என்றால் பஞ்சாப், A என்றால் ஆப்கானிஸ்தான், K என்றால் காஷ்மீர், S என்றால் சிந்து, TAN என்றால் பலுசிஸ்தான் என்று விளக்கம் சொல்லப்பட்டது.
வந்தார் மவுண்ட்பேட்டன்!
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரிவினைவாதமும், மதவெறிக் கூச்சலும் அதிகரித்தது. இந்த நிலையில் மவுண்ட்பேட்டன் பிரபுவை 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பியது பிரிட்டன். எவ்வளவு சுமுகமாக அதிகாரத்தை மாற்றித்தர முடியுமோ அந்த அளவுக்கு இந்தியாவுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவருக்கு அதிகபட்சக் கால அவகாசம் ஒரு ஆண்டு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெளியேறியது பிரிட்டன்!
இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற பிரிட்டனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 1947ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவை பிரிக்கும் திட்டத்தை மவுண்ட்பேட்டன் அறிவித்தார். இதற்கான சமரசத்திட்டத்தை முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவும், காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தியப் பிரிவினை வரைபடம்!
இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து புதிய வரைபடத்தை உருவாக்க பிரி்ட்டிஷ் நீதிபதி சிரில் ராட்க்ளிஃப் அழைக்கப்பட்டார். பஞ்சாப், வங்கம் என்ற இந்தியாவின் சக்திவாய்ந்த இரண்டு மாகாணங்களை துண்டாக்கி மேற்கு மற்றும் கிழக்குப் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. அவசரகதியிலான இந்த பிரிவினை அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு பெருந்துயரத்தை கொண்டுவந்தது.
உதயமானது பாகிஸ்தான்!
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் தனது விடுதலையைக் கொண்டாடியது. பெரும்பகுதி முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து முறைப்படி பிரிந்து தனிநாடாக மாறியது. அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக முகமது அலி ஜின்னாவுக்கு மவுண்ட்பேட்டன் பிரபு கராச்சி நகரில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவின் விடுதலை!
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவு இந்தியா தனது விடுதலையைக் கொண்டாடியது. மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. முதல் பிரதமராக நேரு பதவியேற்ற நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விழி்த்திருந்து கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டங்களில் தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தி பங்கேற்கவில்லை. அந்த தினத்தை கொல்கத்தாவில் இந்து வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களோடு கழிக்க விரும்பினார்.
தான் விரும்பிய இந்தியா இது இல்லை என்று அவர் கூறிவிட்டார். சில வாரங்களுக்கு முன் வரையப்பட்ட பாகிஸ்தானுடைய எல்லைகள் இரண்டு நாட்கள் கழித்தே வெளியிடப்பட்டன.
திகிலூட்டிய வன்முறை!
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைகள் அறிவிக்கப்பட்டவுடன் பாகிஸ்தானுக்குள் இருந்த இந்திய விரும்பிகளும், இந்தியாவுக்குள் இருந்த பாகிஸ்தான் விரும்பிகளும் பதற்றமடைந்தனர். அவர்கள் அவசர அவசரமாக தங்கள் பகுதிக்குள் செல்ல விரும்பினர். இடையில் இந்து மத வெறியர்கள் இங்கேய தங்கியிருக்க விரும்பிய முஸ்லிம்கள் மீதும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.
அன்றைய நிலையில் மக்களை கட்டுப்படுத்தி அவரவர் பகுதிக்குள் அனுப்ப போதுமான அரசாங்க எந்திரம் இல்லை. ராணுவமோ, போலீஸ் படையோ பலமிக்கதாக இல்லை. வரலாற்றில் மிகப்பெரிய உயிரிழப்பாக அது கருதப்படுகிறது. எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது யாருக்கும் சரியாக தெரியவில்லை.
இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் பேர் இருக்கும். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியன் வன்முறைக்கு இலக்கானார்கள். ஏராளமானோர் கடத்தப்பட்டனர். அகதிகளாக மாற்றப்பட்டோர் 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1947-48லேயே போர் ஆரம்பம்!
பிரிட்டிஷ் அரசு அவசரகோலத்தில் வகுத்த எல்லைகள் இருநாடுகளுக்கும் தீராத தலைவலியை ஏற்படுத்தி சென்றது. பிரிவினை விதிகளின்படி காஷ்மீர் யாருடன் சேர விரும்புகிறதோ அந்த நாட்டுடன் சேரலாம். காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசித்தனர். ஆனால், காஷ்மீரை ஆட்சி செய்த ஹரிசிங் மகாராஜா எந்த நாட்டுடனும் இணைய விரும்பாமல் மன்னராட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதை காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சியான ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, 1947 அக்டோபர் மாதம் இந்திய ராணுவமும் காஷ்மீரு்ககுள் நுழைந்து எதிர்த்தாக்குதலை நடத்தியது.
இந்தச் சண்டை 1949 ஜனவரி 1 ஆம் தேதி வரை நடந்தது. பிறகு ஐ.நா. தலையீட்டின்படி சண்டை நிறுத்தப்பட்டது. அன்று உருவானதுதான் போர்நிறுத்தக் கோடு.
1965 இந்திய பாகிஸ்தான் போர்!
காஷ்மீர் விவகாரத்தை வைத்து இரண்டாவது முறையாக இந்தியாமீது பாகிஸ்தான், 1965 ஆம் ஆண்டு மீண்டும் போர் தொடுத்தது. போர்நிறுத்தக் கோட்டைத் தாண்டி தாக்குதல் தொடுத்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. மூன்று வாரங்கள் நடந்த இந்த போரின் முடிவில் லாகூரில் உள்ள சர்வதேச எல்லைக் கோடுவரை பாகிஸ்தானை விரட்டி அடித்தது.
1971ல் உதயமானது வங்கதேசம்!
கிழக்குப் பாகிஸ்தானில் உருது மொழி மற்றும் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு இடையே மோதல் உருவாகி வலுப்பெறத் தொடங்கியது. 1970 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் தேர்தலில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவை மேற்கு பாகிஸ்தான் அங்கீகரிக்க மறுத்தது.
அந்தக் கட்சியின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பினர். அங்கிருந்தபடியே கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசமாக பிரகடனம் செய்தனர். இதையடுத்து வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் மீது மேற்கு பாகிஸ்தான் ராணுவம் கொடூரமான தாக்குதலை தொடுத்தது.
லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமான கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து இந்தியா தலையிட்டு பாகிஸ்தான் ராணுவத்தை 18 நாட்களில் முறியடித்து, வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுத்தது.
காஷ்மீரில் தொடரும் சண்டை!
1989 ஆம் ஆண்டு முதல் காஷ்மீர் சமவெளியில் ஆயுதமேந்திய சண்டைகள் தொடர்கதையாகி விட்டன. பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று சில குழுக்களும், சுதந்திர காஷ்மீர் என்ற கோரிக்கையோடு சில குழுக்களும் இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
இந்தக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆயுத உதவி செய்வதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் சமீப காலமாக இந்திய அரசு தேர்தலையே நடத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
விடுதலை நாள் என்று நாம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டாலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நிழலாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
அவசரகோலத்தில் உருவாக்கப்பட்ட எல்லைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்துக்கு தொடர்ந்து காரணமாக இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டு தொடங்கிய தவறு இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க காரணமாகிவிட்டது.
-ஆதனூர் சோழன்