
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால், கோவில் சொத்துக்களுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து மகாராணி:
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1863- ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி 60 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இந்த நிலம் தாராபுரம் தாலுகாவில் பெரிய குமாரபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கு உள் வாடகைக்கு வழங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
தீர்ப்பு உறுதி:
அப்போது இந்த நிலத்தின் மீதான பட்டா தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும், இது கோவில் சொத்து என்று கோவில் நிர்வாக அலுவலரும் ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் நீதிமன்றம் ஆங்கில அரசால் கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம் செல்லுபடியாகும் என்றும் அந்த நிலம கோவில் மூலவருக்கே சொந்தம் என்றும் மேல்வாரம் மற்றும் குடிவாரம் உரிமையை கோவிலுக்கு வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
கோவிலுக்கு உரிமை:
இதையடுத்து விளைநிலத்தில் சுவாதீனத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும் இன்று ஈரோடு முன்சீப் கோர்ட்டில் 1988-ம் ஆண்டு கோவில் நிர்வாக அலுவலர் மனு தாக்கல் செய்தார். அதேபோல, ஸ்ரீரங்க கவுண்டர், 'இடைப்பட்ட காலத்தில் 60 ஏக்கர் நிலத்தில்' எதிரிடை பாத்தியம்' என்ற முறையில் ஊர்ஜிதமாகி விட்டது என்றும் தனக்குத்தான் நிலத்தின் மீது உரிமை உள்ளது என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதி, நிலத்தின் மீது பழனி பாலதண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் ஸ்ரீரங்க கவுண்டர் ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தார்.
2 சாமிகளுக்கும் வித்தியாசம்:
இந்த தீர்ப்பை எதிர்த்து ஈரோடு மாவட்ட கோர்ட்டில் செய்த அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார். அப்போது, "மனுதாரர்கள் பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் சாகுபடி செய்து வருவதால் மனுதாரர்களுக்கு தான் நிலத்தின் மீதான உரிமை உள்ளது.
ஆங்கில அரசால் வழங்கப்பட்ட நிலம் பழனி பாலதண்டாயுதபாணி சாமிக்கு வழங்கப்படவில்லை. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி சாமிக்கு தான் வழங்கப்பட்டது. பாலதண்டாயுதபாணி சாமிக்கும், சுப்பிரமணியசாமியான திருமூர்த்தி சாமிக்கும் வித்தியாசம் உள்ளது. மேலும், 1963-ம் ஆண்டு கோவிலின் அப்போதைய துணை ஆணையர் சோமசுந்தரம் பிள்ளை எழுதிய புத்தகத்தில், இந்த நிலம் கோயிலுக்கு சொந்தம் என்று குறிப்பிடவில்லை" என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டப்பட்டது.
ஒரே சாமி தான்:
இதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாலதண்டாயுதபாணியும், சுப்பிரமணிய சுவாமியும் திருமூர்த்தியும் ஒரே சாமிதான். பழனி மலை உச்சியிலும், மலை அடிவாரத்திலும் உள்ள கோவில்களை ஒரே தேவஸ்தானம் தான் நிர்வகிக்கிறது. இரு கோவில்களுக்கும் ஒரு செயல் அதிகாரி தான் உள்ளார்" என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது; 1963-ம் ஆண்டு வெளியான புத்தகத்தில் இந்த நிலம் கோவிலுக்கு சொந்தம் இல்லை என்ற அடிப்படையில் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்திய சாட்சி சட்டத்தின்படி, 1963-ம் ஆண்டு அந்த புத்தகம் வெளியானது என்ற தகவல் மட்டுமே உண்மையாக கருதப்படுமே தவிர, புத்தகத்தில் உள்ள தகவல் எல்லாம் உண்மை என்று கருத முடியாது. அது உண்மை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டியது மனுதாரர்களின் கடமை ஆகும்.
தள்ளுபடி:
பழனி மலை அடிவாரத்தில் உள்ள மும்மூர்த்தி சாமியும், மலைக்கு மேல் உள்ள பாலதண்டாயுதபாணி சாமியும் ஒரே தேவஸ்தான அதிகாரிகள் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அதனால், இந்த 2 சாமிகளும் வெவ்வேறு சாமிகள் என்று மனுதாரர்கள் தரப்பு வாதம் ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாவலர் என்ற சட்டம் உள்ளது.
குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது, உடலுக்கும், சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாவலர். அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பகதர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர்.
சொத்துக்களுக்கு பாதுகாப்பு:
அதன் அடிப்படையில், கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமிக்கும், அதன் சிலைகளுக்கும், அதன் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு. எனவே மனுதாரர்கள் நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.