கடந்த மாதம் 16 ந் தேதி முதல் ஒரு ஆடியோவால் தமிழகம் முழுவதும் பரபரப்பாகவும் போராட்டமாகவும் இருந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு ஆடியோவில் பேசியவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் என்று சிங்கப்பூரில் இருந்து சிலரை வரவழைத்து கைது செய்தனர். அதே போல பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதியில் இருந்தும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தான் சிங்கப்பூரில் இருந்து ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்ட கனிமொழி என்ற இளம்பெண்ணையும் சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டைச் சேர்ந்தவர் கனிமொழி (வயது 40) இவர் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறார்.
கடந்த 23.04.19 அன்று தன் சமுதாய பெண்களை இழிவாக பேசியதாக மற்றொரு சமுதாய மக்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இது தொடர்பாக பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் இந்திய தூதரகம் மூலம் கனிமொழியை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளும் நடந்தது. மேலும் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் கனிமொழி பற்றிய அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது கனிமொழி பாப்பாநாடு காவல் ஆய்வாளர் ஹேமலதாவால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தப்படுகிறது.
ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து கைதுகள் தொடர்கிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்காக புதுக்கோட்டை போலிசார் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். சில நாட்களுக்குள் அவரும் கைது செய்யப்படலாம் என்கின்றனர்.