வந்தாச்சு ஆண்ட்ராய்டு ஓரியோ..!
என்னவெல்லாம் இருக்கு?
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான அப்டேட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூகுள் நிறுவனம் வழங்கும். இதுவரை வெளிவந்த ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் எடுத்துக்காட்டாக கிட் காட், லால்லி பாப், மாஸ்மெல்லோவ் என எதிலும் பெரிய மாற்றங்கள் இல்லாத நிலையில், நோகட் அந்தக் குறையை நிவர்த்தி செய்ததாக பல திறன்பேசி பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த அப்டேட்டான ‘ஓ’ என்னவாக இருக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி, ஆண்ட்ராய்டின் 8.0 வெர்ஷன் அப்டேட்டாக வந்திருக்கிறது ஓரியோ. ஓரியோ உலகப்புகழ்பெற்ற சாக்லேட் பிஸ்கெட்டின் பெயர். மேலும், இந்த அப்டேட்டினை முழு சூரிய கிரகணத்தின் போது வெளியிட்டது கூகுள் நிறுவனம். தற்போது அனைத்து திறன்பேசி நிறுவனங்களும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களையே விரும்பும் நிலையில், நோகட்டுக்குப் பின் வந்திருக்கும் ஓரியோ நிச்சயம் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கு விருந்தாகவே இருக்கும். சரி என்ன சிறப்பம்சமெல்லாம் ஓரியோ அப்டேட்டில் கையாளப்பட்டுள்ளது என இப்போது பார்க்கலாம்.
கூடுதல் பேட்டரி பாதுகாப்பு..
ஓரியோவில் பெரும்பாலான விமர்சகர்களால் ஆஹா.. ஓஹோ என புகழப்பட்ட விஷயமே இந்த பேட்டரி பாதுகாப்புதான். என்ன பெரிய பாதுகாப்பு? பொதுவாக காலையில் எழுந்தது தொடங்கி, உறங்குவது வரை செல்போன்களில் மூழ்கிக்கிடக்கும் இளைய சமுதாயத்திற்கு, திறன்பேசிகளில் இருக்கும் பெரிய பிரச்சனையே இந்த பேட்டரிகள் தான். எனவே, கூகுள் இதில் தனிகவனம் செலுத்தியிருக்கிறது.
கூகுளின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி, எப்போதும் பின்னணியில் செயலிகள் இயங்குவது போலத் தான் இயங்குதளங்களை உருவாக்குகின்றனர். இந்த பின்னணி செயலிகள், குறிப்பாக நேவிகேஷன் செயல்பாடுகளால் தான் பெரும்பாலும் பேட்டரியின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த பின்னணி செயலிகளின் செயல்பாடுகளை ஏறக்குறைய நிறுத்திவிடுவதன் மூலம் பேட்டரிகள் பாதுகாக்கப் படுகின்றன. இதன்மூலம், பேட்டரிகள் கூடுதல் நேரம் தாக்குப்பிடிக்கலாம். எனவே, இனி பவர் பேங்க்குகளைத் தூக்கித் திரியவேண்டிய தேவை இருக்காது.
கூடுதல் செயல்திறன்..
முன்னர் சொன்னதுபோல், திறன்பேசியின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, பின்னணி செயலிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, கூடுதலாக செயலிகளைப் பயன்படுத்தினாலும், சமயத்தில் உபயோகிக்கும் செயலியில் மட்டும் இயங்குதளம் கவனம் செலுத்தும். திறன்பேசிகளின் செயல்பாடுகள் இல்லாதபோதும், இந்த பின்னணி செயலிகள் செயல்பாட்டிலேயே இருக்கும் தொல்லைகள் இனிமேல் இருக்காது என நம்பலாம்.

இந்த விஷயத்தில் நோகட் அப்டேட்டில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது கவனம் செலுத்தியிருக்கிறது கூகுள். இதன்மூலம் 50% கூடுதல் செயல்திறனை உணரலாம் எனவும் கூகுள் உறுதியளித்துள்ளது.
மல்டி-விண்டோ அனுபவம்..
சாம்சங் திறன்பேசிகளின் எஸ் வரிசைகளில், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தப்பட்ட வசதிதான் இந்த மல்டி விண்டோ. வெகுநாட்களாக இதில் கவனம் செலுத்தாமல் இருந்த கூகுள், நோகட்டில் இதை ஒரு முயற்சியாக எடுத்திருந்தது. தற்போது, கூடுதல் வசதிகளுடன் இந்த மல்டி விண்டோ வசதி ஓரியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, யூடியூப்-ல் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது, கால்குலேட்டரை பயன்படுத்தலாம். மேலும், இதன் அனுபவம் அருமையாக இருக்கும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இமோஜிக்கள்..
இமோஜிக்கள் வாட்ஸ் அப் மாதிரியான குறுந்தகவல் செயலிகளின் பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தவை. கடந்த சில அப்டேட்டுகளில் கூகுள் கவனம் செலுத்தாமல் விட்டதன் குறையை, தற்போது ஓரியோவில் பூர்த்தி செய்துள்ளது. இந்த இமோஜிக்கள் சாதாரணமாக கூகுள் கீபோர்டிலேயே இருக்கும். மேலும், கூடுதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இமோஜிக்களும் தற்போதுள்ள அப்டேட்டில் இடம்பெற்றுள்ளன. இது நிச்சயமாக இமோஜி ப்ரியர்களைத் திருப்திப்படுத்தும் என நம்பப்படுகிறது.
இடைஞ்சலற்ற இயங்குதளம்..
பொதுவாக பல திறன்பேசி நிறுவனங்கள் தங்களது மின்னணு தொழில்நுட்பங்களின் குறைபாடுகளைக் களைவதற்காக, இயங்குதளத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் வழக்கம் உண்டு. ஆனால், முன்னர் சொன்னதுபோல், பல நிறுவனங்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்டுகளுக்கே தங்களை மாற்றி வருகின்றன. பல பயன்பாட்டாளர்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு செல்பேசிகளைத் தேடி வாங்குவதும் இதற்குக் காரணம். ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓரியோவின் அனுபவம், ஒப்பீட்டளவில் ஐபோன்களின் இயங்குதளங்களை ஒத்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஓரியோ அப்டேட்டைப் பொறுத்தவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகளின் நோட்டிஃபிகேஷன்களை வகைப்படுத்தி வைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நோட்டிஃபிகேஷன் டாட் என்ற வசதியின் மூலம், வந்திருக்கும் செய்தியை அதற்கான செயலியைத் திறக்காமல் உபயோகப்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. மேலும், இதில் உள்ள பிரத்யேக வசதியால், நோட்டிஃபிகேஷன்களை மறைத்துவைக்கவும் முடியும்.
இத்தனை வசதிகளைக் கொண்டிருக்கும் ஓரியோ அப்டேட் இன்னமும் இந்தியாவிற்கு கொடுக்கப்படவில்லை. முதற்கட்டமாக சாம்சங் எஸ் 8, எஸ் 8+ போன்ற திறன்பேசிகளில் இந்த அப்டேட் கொடுக்கப்படும் எனவும், கூகுள் நெக்ஸஸ் மற்றும் எச்.டி.சி-ன் உயர் ரக திறன்பேசிகளுக்கு இந்த அப்டேட்டைக் கொடுப்பதற்காக வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் திறன்பேசிகளுக்கு ஓரியோவின் தரிசனம் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம். ஓரியோ வகை பிஸ்கட்டுகளை விளம்பரப்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் கசக்குமா? இனிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
- ச.ப.மதிவாணன்