Skip to main content

ஒபிஎஸ்-இபிஎஸ் நாடகம் அம்பலம் – ஒ.ராஜா ஆவின் தலைவர் பதவி ஏன் பறிக்கப்படவில்லை?

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
eps ops

 

அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஒபிஎஸ்சின் தம்பி ஒ.ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ, மீடியாக்களில் பெரிதாக பரபரக்கப்பட்டது.
 

தம்பியாக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்கள் என்றெல்லாம் ஆளாளுக்கு பில்டப் செய்தார்கள்.
 

ஒ.ராஜா இப்போதுதான் களங்கம் ஏற்படுத்தினாரா? பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, மணல்கடத்தல் வழக்கு என்றெல்லாம் ஒ.ராஜா மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது திடீரென்று களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறுவதன் பின்னணி என்ன?
 

பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தேனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். அதிமுக மாவட்ட பொருளாளராக இருக்கிறார். இவருக்கு மதுரை ஆவின் கூட்டுறவு தலைவர் பதவியை பெற்றுத் தருவதாக ஒபிஎஸ் கூறியிருக்கிறார். ஆனால், ஒ.ராஜா தலைவர் பதவியைக் கைப்பற்ற மறைமுகமாக உதவியிருக்கிறார். இதனால் செல்லமுத்து ஒரு பெரிய கூட்டத்தோடு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக தெரியவந்தது.
 

இதையடுத்து, தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள தம்பியை கட்சியிலிருந்து விலக்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஒபிஎஸ். அதற்கு இபிஎஸ்சும் ஒத்துப்போயிருக்கிறார். ஆனால் இவர்களுடைய நாடகம் எடுபடவில்லை.
 

கட்சியிலிருந்து நீக்கியவர்கள், ஒ.ராஜாவின் ஆவின் தலைவர் பதவியை பறிக்க முடியுமா என்று கட்சிக்காரர்கள் கேட்கிறார்கள். ஒபிஎஸ்சுக்கு தெரியாமலா ஆவின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார்? ஒபிஎஸ் ஆதரவு இல்லாமலா அவருக்கு அதிமுகவினர் வாக்களித்தனர்? வெள்ளிக்கிழமை பதவி ஏற்கப்போவதாக கூறிய ஒ.ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்படுவதை அறியாமலா அவசரஅவசரமாக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 

o.raja


கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தாலும், ஒ.ராஜா ஆவின் தலைவராக நீடிப்பதை தடுக்க முடியவில்லையா என்று சரமாரியாக வினா தொடுக்கிறார்கள். தேனியில் ஏற்கெனவே, தங்க தமிழ்செல்வன் ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறும் நிலையில், இப்போது செல்லமுத்து குரூப்பையும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.
 

இந்நிலையில்தான், அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து அதிலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.