திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு இயங்கியது. அப்போது அதை பெருமையாக சொன்னால், குட்டியூண்டு மாநிலத்தை ஆட்சி செய்வது பெரிய விஷயமா என்றார்கள்.
ஆனால், இப்போது குட்டியூண்டு மாநிலத்தை வெற்றிபெற்றுவிட்டு இந்தக் குதி குதிக்கிறார்கள்.
அந்த அளவுக்கு இடதுசாரிகள் பாஜகவின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்திலும், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த திரிபுராவிலும் இடதுமுன்னணி அரசு ஆட்சியை அடுத்தடுத்து இழந்திருக்கிறது.
இதற்கு காரணம் இடதுமுன்னணியின் மெத்தனம்தான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு முதல்வராக இருந்த சமயத்திலும், அந்த மாநிலத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் சமூகநலத் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. இன்றுவரை கை ரிக்ஷா ஒழிக்கப்படவில்லை.
ஆனால், இந்தியாவிலேயே மிக அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தவிர தொழில் வளர்ச்சியில் இடதுமுன்னணி அரசு கவனம் செலுத்தவில்லை. அரசு கவனம் செலுத்தவில்லை என்பதைவிட, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மேற்கு வங்க மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது என்பதே உண்மை. 1989ல் தேசிய முன்னணி ஆட்சி நடந்த 2 ஆண்டுகளும், ஐக்கியமுன்னணி ஆட்சி செய்த 2 ஆண்டுகளும்தான் மாநிலத்துக்கு ஓரளவு நிதியுதவி கிடைத்தது. அதுதவிர, 2004ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐமுகூ அரசும் மேற்கு வங்கத்துக்கு ஓரளவு நிதி ஒதுக்கியது எனலாம்.
மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி அரசு தோற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பிரகாஷ் காரத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்து, அதன்மூலம் திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸை கைகோர்க்க வழி செய்தார் என்பதே அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.
ஆம், இடது முன்னணிக்கு எதிரான வாக்குகளை மொத்தம் சேர்க்க பிரகாஷ் காரத் வழி செய்துவிட்டார். அதன்காரணமாக அங்கு ஆட்சியை இழந்த இடதுமுன்னணி, இப்போது மீண்டும் புதிய தலைமுறையினரின் ஆதரவைப் பெறமுடியாமல் தவிக்கிறது. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் இத்தகைய நிலை கண்முன் உருவானதில் இருந்துகூட மார்க்சிஸ்ட்டுகள் தங்களுடைய அரசியல் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இடதுமுன்னணி, அங்கு தனது எதிர்ப்பு வாக்குகளை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தவுடன் வடகிழக்கு மாநிலங்களைத்தான் முதலில் குறி வைத்தார்கள். திரிபுராவில் பாஜக என்ற கட்சியே இல்லை. ஆனால், அவர்கள் திரிபுரா பழங்குடியினர் கட்சியோடு கூட்டணி அமைத்தார்கள். அந்தக் கட்சியினர் தனிநாடு கோரிக்கைக்காக போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு என்று தெரிந்து பாஜகவினர் கூட்டணி அமைத்து, பணத்தால் அவர்களை விலைக்கு வாங்கினார்கள்.
அவர்களைப் பயன்படுத்தி பழங்குடியினர் பகுதிக்குள் பாஜகவை நுழைத்தார்கள். சமூகநலத்திட்டங்கள் என்ற பேரில் பழங்குடியினருக்கு எரிவாயு சிலிண்டர்களையும், அடுப்பையும் வழங்கினார்கள். அதுவரை அந்த மக்களுக்கு எட்டாப்பொருளாக இருந்த செல்போன்களையும் அறிமுகப்படுத்தினார்கள்.
மொத்த வாக்காளர்களே 36 லட்சம் பேர்தான் என்பதால் பணத்தால் அடித்து வாக்காளர்களை விலைக்கு வாங்கினார்கள். தனக்கு கட்சி அடித்தளம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அவர்களை பாஜகவாக மாற்றினார்கள்.
பாஜகவின் இந்த வேலைகள் அனைத்துக்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் இடதுமுன்னணி அரசு மெத்தனமாக இருந்தது. மாநில மக்களை எதிர்க்கட்சி அப்பட்டமாக விலைக்கு வாங்குவதை தடுக்க ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
25 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே ஆட்சியின்கீழ் இருந்தால், புதிய தலைமுறையினருக்கு ஏற்படும் சலிப்பை பாஜக தனக்கு சாதகமாக மாற்றியது. காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதை பாஜக கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் செய்தது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாதம் 15 ஆயிரம் அளவுக்கு உயர்த்துவதாக நடைமுறை சாத்தியமில்லாத பொய்களை அவிழ்த்துவிட்டது.
எல்லாமும் சேர்ந்து திரிபுராவிலும் இடதுமுன்னணி அரசை தோற்கடித்துவிட்டது.
மாணிக் சர்க்காரின் எளிமையை இடதுமுன்னணி தனது அடையாளமாக காட்டியது. கம்யூனிஸ்ட்டுகள் எளிமையாக இருப்பது செய்தியல்ல. கம்யூனி்ஸ்ட்டுகள், மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்றபடி மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை ஏதோ ஒரு வகையில் இடதுமுன்னணி அரசு நிறைவேற்றத் தவறியிருக்கிறது என்பதையே தேர்தல் தோல்வி காட்டுகிறது.
ஆனால், இடதுமுன்னணி அரசுக்கு மாற்றாக பாஜக செயல்படுமா என்பது போகபோகத்தான் தெரியும்.
பாம்புக்கு பால்வார்த்தது போல பிரிவினை இயக்கத்துடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. இனிதான் அந்த இயக்கத்தின் உண்மையான முகம் வெளிப்படும். பழங்குடியினரின் பூர்வீக நிலத்தை கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க பாஜக நடவடிக்கை எடுக்கும்போதுதான் அந்தக் கட்சியின் துரோகம் மக்களுக்கு புரியும்.
தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியதில்லை. மக்களை பிரித்தாளும் அதன் குணமும் மாறியதில்லை. இதுவரை அமைதியான வாழ்க்கையை வாழ்ந்த திரிபுரா மக்களுடைய வாழ்க்கையில் இனி ஏற்படப்போகும் திருப்பம் எதிர்பாராததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.