காவிகள் நடுங்கினர் - பின்வாங்கினர்; தமிழ்நாடு பெரியார் பூமிதான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த எழுச்சி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதிலும் தொலைக்காட்சிகளில்...
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றியடைந்ததன் விளைவு - அங்கே பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை முதல்வராக்கிட முடிவெடுத்து, அவர் பதவியேற்பதற்கு முன்னர், கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மூன்று மாதங்களுக்குமுன் திறக்கப்பட்ட மாவீரன் லெனின் உருவச் சிலையை புல்டோசர் கொண்டு உடைத்துப் பெயர்த்தெறிந்த காட்சி, இந்தியா முழுவதிலும் தொலைக்காட்சிகளில் செய்தியாகக் காட்டப்பட்டது. நேற்றைய விடுதலையிலும் அது பதிவு செய்யப்பட்டது.
அதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா என்ற நபர் தனது முகநூலில், அடுத்து உடைக்கப்பட வேண்டியது ஜாதிவெறியரான ஈ.வெ.ரா.வின் சிலை என்ற தரமற்ற சொற்களையும், அர்த்தமற்ற கருத்தையும் வெளியிட்டார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா?
அதுகுறித்து நாம் (திராவிடர் கழகம்) நாம் வரவேற்கிறோம். உடைத்துப் பார்க்கட்டும்! அதன் விளைவுகளையும் அறுவடை செய்ய ஆயத்தமாகட்டும் என்று கருத்து தெரிவித்ததோடு, அறிக்கையில் இப்படி யாரையும் நா துடுக்கோடும், வாய்க் கொழுப்பு வழிந்தோடும் வண்ணமும் கொச்சையாக, தரக்குறைவாக எழுதும், பேசும் துணிச்சல் ஒரு நபருக்குத் தமிழ்நாட்டில் வந்ததற்குக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள அரசு தங்களுக்குத் தலையாட்டும் என்ற துணிச்சலாலா?
சட்டம் ஒழுங்கு இதன்மூலம் கெடுவதோடு, வன்முறையும், கலவரங்களும் ஏற்படுவதற்கு பா.ஜ.க. வித்திடுகிறது. அமைதிப் பூங்காவாகிய தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள், கருத்துகள் ஓங்கி, கலவரங்கள் வெடிக்கக் கூடும் என்று தெரிவித்தோம். அது கண்கூடாகி விட்டது இன்று.
கண்டனக் கணைகளை பாய விட்டனர்
கடந்த 24 மணிநேரம் தமிழ்நாடே - கட்சி, ஜாதி, மத, அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், பிராமணர் சங்கம் என்ற அமைப்பு உள்பட, அத்துணை அரசியல் கட்சியினர், மாணவர், இளைஞர்கள், கலைஞர்கள், மகளிர் என்ற எவ்வித பேதமும் இன்றி, கொதித்தொழுந்து, எச்.ராஜாவின்மீது ஏகோபித்த கண்டனக் கணைகளைப் பாய விட்டனர்!
காற்றை விதைத்து புயலை அறுவடை செய்த கதையைப்போல,
மின்சாரத்தில் கை வைத்தவர்கள் பெற்ற மின் அதிர்ச்சியைப்போல, இங்குள்ள பா.ஜ.க., மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்பட பலர் உடனடியாக இதைக் கண்டிக்கவேண்டிய அளவுக்கு எழுந்த கண்டனங்களும், ஆவேச உணர்வுப் பொங்கி வழிந்த செய்திகள் நடுங்க வைத்திருக்கும் நிலையை உருவாக்கியதோடு, இனி தமிழ்நாட்டை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று அஞ்சியே நாட்டிலுள்ள தலைவர்கள் சிலையைப் பாதுகாக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலைச் செய்துள்ளதோடு, தமிழ்நாட்டின் ராஜாவின் வன்முறைத் தூண்டலுக்குப் பலியாகி, பெரியார் சிலையை சேதப்படுத்திட முயன்ற ஒரு பா.ஜ.க. நகரப் பொறுப்பாளரும், அவருடன் சென்ற ஒரு உறவினரும் பொதுமக்களால் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதோடு, உடனடியாக ஊர் மக்களே திரண்டுவிட்டவுடன், அவ்வூர் காவல்துறை கைது செய்து, பெரியார் சிலைக்கு மட்டுமல்ல, அவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
நம்ப முடியாத ஒரு பொய்மூலம் புகலிடம்
இன்று (7.3.2018) காலை ராஜா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்; அதுவும் நம்ப முடியாத ஒரு பொய்மூலம் புகலிடம் தேடியுள்ளார். இவருக்குத் தெரியாமலேயே இவரது முகநூலில் யாரோ போட்டு விட்டார்களாம்!
தான் சொன்ன கருத்தை ஒருவர்,தானே ஏற்க மறுத்தால், அது கோழைத்தனத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்டவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.
மன்னிப்போம்; ஆனால், மறக்க முடியாது
அதன்படியே, நாம் பல தொலைக்காட்சி செய்தியாளர்கள் கேட்டதற்கு, மன்னிப்போம்; ஆனால், மறக்க முடியாது என்றோம். மின்சாரத்தினைத் தொட்டு விளையாட நினைத்தவர்களுக்கு, பிரதமர் மோடி வரை பதில் கூற வேண்டிய நெருக்கடியை அவர்களுக்குத் தந்துள்ளது.
தமிழ்நாட்டில், தானே எழுந்துள்ள இந்த இன எழுச்சி எரிமலை இப்போது நெருப்பைக் கக்க ஆரம்பித்துள்ளது!
தந்தை பெரியாரை, ஜாதி வெறியர் என்ற அந்தப் பார்ப்பன சனாதன மனுவின் மைத்துனர் கூறுகிறார்! இந்தப் பூணூல் புழுதியாளருக்கு, தந்தை பெரியார் ஒரு தேசியத் தலைவர். 1924 ஆம் ஆண்டு முதலே வைக்கத்தில் ஜாதி - தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வைக்கம் வீரர் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். - ஜனசங்கங்கள் பங்கேற்ற, மொரார்ஜி தேசாய் தலைமையிலான, வாஜ்பேயி, அத்வானி முதலிய மூத்த ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கத்தினர் - காவிகள் - பங்கு வகித்த விழாவில் மத்திய அரசு - நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்பட்டதே! அந்த செய்தி தெரியுமா? அப்போது இவர் ஒரு அரைக்கால் சட்டையினர்!
சும்மா கிடந்த சங்கை இவர் ஊதிக் கெடுத்ததால்...
அதுமட்டுமா! அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து, பிரதமர் வாஜ்பேயி ஆண்ட பா.ஜ.க. ஆட்சியில், 125 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது தொண்டினைப் பாராட்டி, வியந்து போற்றி, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, அதில் எழுதிய வாசகங்கள் என்னவென்று இவருக்குத் தெரியுமா?
தேவையின்றி சும்மா கிடந்த சங்கை இவர் ஊதிக் கெடுத்ததால்தான் இன்று, அக்கட்சியே மக்கள் மன்றத்தின்முன் குற்ற உணர்வோடு கூண்டில் நிறுத்தப்பட்டு, இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது!
திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற ஒரு அநாமதேயப் பேர்வழிமீது நடவடிக்கை எடுத்து நீக்குவது முக்கியமல்ல!
நன்றி! நன்றி!! நன்றி!!!
அந்த வன்முறையைத் தூண்டி, அதற்குக் காரணமான எச்.ராஜாமீது அல்லவா ஒழுங்கு நடவடிக்கை, தேசிய கட்சித் தலைவரால் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். இன்னமும் பொறுத்துப் பார்ப்போம்!
கொதித்து எழுந்து, இது பெரியார் பூமிதான் என்று காட்டிவிட்ட, அத்துணை அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் எல்லோருக்கும் எமது நன்றி! நன்றி!! நன்றி!!!
அமளிக்காடானதற்கு என்ன சட்டபூர்வ நடவடிக்கை?
தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
பெரியார் மண் இது என்பதை மறவாதீர்!
இந்த இன எழுச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடரட்டும்!
என்றும் தணியாத இன உணர்வு தந்த பாடத்தை, பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். - மதவாத சக்திகள் மறக்கவேண்டாம்! பாடம் கற்கட்டும்!!
பெரியார் மண் இது என்பதை மறவாதீர்!