கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை மிகவும் மோசமாக ஆட்கொண்டு வருகிறது. இந்தக் கொடிய வைரஸால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவருகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.29 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரேநாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் இந்த தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 3,56,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சூழலில், இதுவரை இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் தற்போது 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், சிகிச்சை உபகரணங்களை அதிகரித்தல், மக்களை சமூக இடைவெளி மற்றும் சுயசுகாதாரம் ஆகியவற்றைப் பராமரிக்க ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களும் மே 1, 2021 முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்கள் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சரியான முறையில் தடுப்பூசி போடுவதில்லை.
இப்படியொரு நெருக்கடியான நேரத்தில், டெக்ஜேஸ் (techjays) என்னும் மென்பொருள் நிறுவனத்திலுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒரு புதிய தடுப்பூசி போர்டலை (https://vaccinenotify.in/) கட்டமைத்துள்ளனர். இதன் மூலம், நமது வயது, மாவட்டம், பின்கோட் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்களைத் தேடிப் பயனடைய முடியும். இந்தப் போர்டல் கோவின் (coWIN) API-யிலிருந்து நிகழ்நேர ஆதாரங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி போட இடங்கள் தேடும்போது, அந்நேரத்தில் இல்லையெனில் கூட, பின்னர் இடம் கிடைத்தவுடன் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிக்கு உடனடியாக குறுந்தகவல் மூலம் தடுப்பூசி மையம் குறித்த தகவல் அனுப்பப்படும்.
கரோனா ஏற்படுத்திய பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், தமிழக இளைஞர்களால் துவங்கப்பட்டு, அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் உள்ள பல்வேறு குழுமங்களுக்கு மென்பொருள் சேவையை வழங்கிவரும் Techjays எனும் இந்நிறுவனத்தின் இந்தப் புதிய வசதி, தற்போதைய கடினமான சூழலில், மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.