கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட ஆபரேஷன் லோட்டஸ் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்திருக்கிறது. எடியூரப்பா மேற்கொண்ட இந்த ஆபரேஷன் ஏற்படுத்திய அவமானம் காரணமாக கட்சி மேலிடமே ஆபரேஷனை கைவிடும்படி கூறியிருக்கிறது.
கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக வந்தாலும், ஆட்சி அமைக்க போதுமான 113 இடங்களைப் பெறவில்லை. ஆனாலும், ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோரி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஆபரேஷன் லோட்டஸை தொடங்கியது. அது வெற்றி பெறாததால் நம்பிக்கை வாக்குக் கோருவதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு, கடந்த மாதம், 7 மாதங்களே ஆன கூட்டணி அரசை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மேலிட அனுமதியோடு இரண்டாவது முறையாக ஆபரேஷன் லோட்டஸை கையில் எடுத்தார் எடியூரப்பா.
காங்கிரஸ், மஜத கட்சிகளின் எம்எல்ஏக்களை விலை பேசி இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கவும், அதிகாரத்தை கைப்பற்றி, மக்களவைத் தேர்தலை சந்திக்கவும் எடியூரப்பா திட்டமிட்டார்.
இதற்காக பாஜக எம்எல்ஏக்களை குர்காம் என்ற இடத்தில் பத்திரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியோ தனது எம்எல்ஏக்களை பெங்களூரு ரிசார்ட்ஸில் தங்கவைத்தது. அப்படி இருந்தும் காங்கிரஸில் பதவிக்காக சண்டையிடும் 4 எம்எல்ஏக்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர். கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த இரண்டு சுயேச்சைகள் அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். ஆனாலும், 104 இடங்களை வைத்திருந்த பாஜகவுக்கு இந்த ஆதரவு போதாது.
இந்நிலையில்தான், தனது கட்சி எம்எல்ஏவான நாகன கவுடாவின் மகன் சரண கவுடாவிடம் எடியூரப்பா நடத்திய பேரத்தின் ஆடியோவை வெளியிட்டார் முதல்வர் குமாரசாமி. முதலில் தனது குரலைப் போல மிமிக்ரி செய்து ஆடியோ தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறிய எடியூரப்பா, பின்னர் சரணகவுடாவை சந்தித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் ஏற்படுத்திய நெருக்கடியால், ஆபரேஷனையே கைவிடும்படி பாஜக மேலிடம் கூறிவிட்டது.
இது வெறும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மட்டுமல்ல. பலவிதமான அரசியல் போட்டிகளின் கலவை என்கிறார்கள் கர்நாடகா அரசியல் விமர்சகர்கள். கூட்டணி அரசின் ஆயுள் காலம் நீடித்தால், காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் தனது முக்கியத்துவம் காணாமல் போய்விடும் என்று சித்தராமய்யா நினைக்கிறார். ஆனால், கோஷ்டிகளை சமாளித்து, மஜதவை மெகா கூட்டணிக்குள் வைத்து மக்களவைத்த தேர்தலை சந்திக்க ராகுல் திட்டமிடுகிறார்.
துணை முதல்வராக இருக்கும் பரமேஷ்வரா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு முக்கியத்துவம் கிடைத்தால் தனது முக்கியத்துவம் பறிபோகும் என்று அவர் பயப்படுகிறார். எனவே, தனது இருப்பைத் தக்கவைக்க பாஜகவின் முயற்சியை தோற்கடிக்க கடுமையாக போராடி வென்றிருக்கிறார். நெருக்கடிகளை தீர்ப்பவர் என்று ராகுலே பாராட்டியிருக்கிறார். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டி தனது செல்வாக்கை முதல்வர் குமாரசாமிக்கு நிரூபித்தார் சித்தராமய்யா.
பாஜகவுக்குள் எடியூரப்பாவின் ஆதிக்கம் வலுப்பெறுவதை விரும்பாதவர்கள் ஆபரேஷன் லோட்டஸ் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அவர்கள், இப்போதைய ஆட்சியைக் கவிழ்க்காமலே மக்களவைத் தேர்தலை பாஜக சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால் பாஜக எம்எல்ஏக்களுக்குள் பிளவு ஏற்படுமோ என்று எடியூரப்பா பயப்படுகிறார். இருந்தாலும், அவருடைய ஆபரேஷன் தோல்விக்கு உள்கட்சிக்குள் அவருடைய எதிரிகளும் ஒரு காரணமாக இருந்தார்கள்.
இவர்களுடைய சண்டைக்கு மத்தியில்தான், எடியூரப்பாவின் பேரத்தை ஆடியோவாக்கி தனது இருப்பை உறுதிப்படுத்தி குமாரசாமியும் தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.