Skip to main content

அ.ம.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் பலவீனம் அடைகிறதா? 

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை பிடிக்காமல் தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு சென்றவர்கள், அமமுக செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிமுகவுக்கு வராமல் திமுகவுக்கு செல்வது ஏன்? அதிமுக அரவணைத்து செல்லவில்லையா? அரவணைக்கவில்லை என்றால் அமமுகவைப்போல் அதிமுகவும் பலவீனம் அடைகிறதா? என்ற கேள்வி எழுகிறது.


 

 

ttv-ops-eps


 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
 

89ல் ஜானகி அணி, ஜெ. அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டு, இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்தது. திமுக வெற்றி பெற்றது. அதைப்போன்றுதான் இன்றைக்கு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலும் நிலைமை இருக்கிறது. தொண்டர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், சசிகலா, தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருக்கையில் எப்படி இருந்ததோ அதைப்போல பொதுச்செயலாளர் பதவி வர வேண்டும். பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். அப்படி பலப்படுத்தினால் மட்டும்தான் வரும் தேர்தலில் ஓரளவுக்காவது வெற்றி வாய்ப்பை பெற முடியும். 
 

நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைவிட முக்கியமான விஷயம் வாக்கு வித்தியாசம். சில பாராளுமன்றத் தொகுதிகளில் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இன்னும் சில தொகுதிகளில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசம். சில தொகுதிகளில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசம். இந்த நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்ற தோற்றம் உருவாகிறது. 

 

K. C. Palanisamy


 

இதனால் அதிமுக தொண்டர்கள், கட்சியை ஒருங்கிணைத்து 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, காலப்போக்கில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை தினகரன் செய்யாததால், அதற்கு அவர் முன்வராததால், அவரை விட்டு வெளியேறுகிறார்கள். அமமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் அரவணைத்து செல்வதில்லை. அவரவர்கள் அவர்களது நிலையை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 

தங்க தமிழ்செல்வன் வந்தால் தேனியில் தனக்கு இடைஞ்சல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். செந்தில் பாலாஜி வந்தால் தனக்கு இடையூறு வரும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். மார்க்கண்டேயன் வரக்கூடாது என்று கடம்பூர் ராஜு நினைக்கிறார். கலைராஜன் வரக்கூடாது என ஜெயக்குமார் நினைக்கிறார். கோவையில் வேலுமணி, முன்னாள் மேயர் வேலுச்சாமியை, முன்னாள் மந்திரி தாமோதரனை புறக்கணிக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஓ.பன்னீர் செல்வம், முனுசாமி, மனோஜ் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். 
 

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு போட்டியாக கட்சிக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். தங்களுக்கு போட்டியாக வருபவர்களை கட்சிக்குள் விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதனால் கட்சி பலவீனமாகிறது என்பதை அவர்கள் நினைப்பதில்லை. இவர்களின் இந்த போக்கு அமமுகவுக்கு மட்டும் அல்ல, அதிமுகவுக்கும்தான் சரிவு. அதிமுகவும்தான் பலவீனம் அடைகிறது என்கிறார்.


 

 

அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த சிலர் கூறும்போது, அதிமுக மற்றும் அமமுக தலைமைகள் இரண்டுமே தலைக்கு 500, 1000, குவாட்டர், பிரியாணி கொடுத்து கூட்டத்தை கூட்டணும். அப்படி கூட்டினால்தான் அரசியல் என்று நினைக்கிறார்கள். கட்சியில் உள்ள சீனியர்கள் சில கருத்துக்களை சொல்லும்போது, அது தேவையில்லை என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அந்த சீனியர்கள் ஊடகங்களிலும், பொதுவெளியிலேயும் கட்சி வளர்ச்சிக்கான வழிகளையும், கட்சி பலவீனமாவது குறித்த அந்த கருத்துக்களை சொல்லும்போது பொதுமக்களிடம் செல்கிறது. இதனால் அதிமுகவுக்கான வாக்குகள் சிதறுகிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களது கருத்துக்கள்தான் தொண்டர்களை தொடர்ந்து கட்சிக்குள் இருக்க வைத்தது. ஆட்சியில் இருப்பவர்கள் நிறைய லஞ்சம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களேயொழிய தொண்டர்கள் பலத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றனர்.