யாசகம் பெற்று அதன்மூலம் சேமிக்கும் பணத்தில் அரசுக்கும், பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வரும் முதியவர், உதவி செய்வதற்கு பணம் இரண்டாம் பட்சம்தான், மனம்தான் முதல் தேவை என்பதை நிரூபித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 73 வயது முதியவர் பூல்பாண்டியன். சென்ற 17-ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு இவர் வந்திருந்தார். அப்போது அவரது கையில் ரூபாய் பத்தாயிரம் கொண்டு வந்திருந்தார். “எதற்கு பணம் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என அங்கிருந்த ஊழியர்கள் கேட்க, “இந்த பணத்தை நான் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்” என கூறினார். பிறகு அவரைப் பற்றி விசாரித்தவர்கள், அதை கருவூலத்தில் செலுத்தி ரசீது வாங்கிவருமாறு கூறினார்கள். அதன்படியே கருவூலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் பூல்பாண்டியன், அங்கு மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சந்திராவிடம் பத்தாயிரம் ரூபாய்க்கான ரசீதைக் கொடுத்தார்.
தோற்றத்தைப் பார்த்தால் ஒரு சாமியாரைப்போல் இருந்த அவரிடம், “நீங்க யார்? எதற்காக இந்த பணத்தை இப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்துகிறீர்கள்?” என விவரம் கேட்டோம்.
“எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு. 1980-ஆம் ஆண்டு பிழைப்பு தேடி பம்பாய் (மும்பை) சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்துவராததால் வேலையை விட்டுவிட்டேன். சாப்பிட பணம் இல்லை. ஒருகட்டத்தில் வேறு வழியேயின்றி கோவில்கள், முக்கிய திருவிழாக்களில் மக்கள் கூடும் இடங்களில் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினேன். மும்பை பகுதியிலேயே பல வருடங்கள் பிச்சை எடுத்தேன். எனது தேவை போக ஏராளமான பணம் சேமிக்க முடிந்தது. அப்போதுதான் இந்த பணத்தை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தேன்.
2010-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவுசெய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை பிச்சை எடுத்ததின் மூலம் சேர்ந்த பணத்தில் லட்சக்கணக்கில் நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசுப் பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்துகொடுத்துள்ளேன். நான் யாரிடமும் வற்புறுத்தி கேட்கமாட்டேன். செல்வந்தர்கள், பக்தர்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை அப்படியே சேமித்து வைத்து அதை நான் இப்படி பயன்படுத்தி வருகிறேன்.
ஈரோடு மாவட்டத்திற்கு முதன்முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூபாய் 10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். என் உயிர் உள்ளவரை என்னால் முடிந்த உதவியை செய்வேன்” என்றார்.
“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பாண்டியன். இவரோ, பிச்சையெடுத்த காசில் கல்விக்கூடங்களுக்கு உதவிசெய்து வருகிறார். வாழ்க்கைதான் மனிதர்களை எத்தனை எத்தனை விதங்களில் படைத்து ஆச்சரியப்படுத்துகிறது.