தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து டென்ஷனைத் தணிக்க வேண்டும் என்று தமிழக அரசு முனைப்பு காட்டியபோது, "ஏழு பேர் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்ட்டம்! மீதி ஆறு பேர் உடலை மறு உத்தரவு வரும் வரை போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது'’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துவிட, தூத்துக்குடியில் டென்ஷனோ டென்ஷன்.
இறந்தவர்களில் மீனவ வகுப்பினர் மூவர், நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் சமூகத்தில் இருவர், நாயக்கர் ஒருவர், ஆதிதிரா விடர் இருவர், அருந்ததியர் ஒருவர், புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த ஒருவர் என, பல சமுதாயத்தினரும் உறவுகளை இழந்து தவித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற 6 பேர் நிலை சீரியஸாக உள்ளது. இறந்தோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது, மக்களின் போராட்டம் எல்லை தாண்டும் என்கிற பீதி நிலவுகிறது.
வேம்பாரிலிருந்து ஆலந்தழை வரையிலும் உள்ள 20 கிராமங்களின் மீனவ நிர்வாகிகள் ஒன்றிணைந்து திருச்செந்தூர் ஜீவா நகரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பில் இறந்த அனைவரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்து, அங்கு மண்டபம் எழுப்பி, ஆண்டுதோறும் நினைவு தினம் அனுஷ்டிப்பதற்கு உறுதிமொழி தரவேண்டும். கலவரத்தின்போது பணியில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் கமிஷன் அமைத்து விசாரணை நடத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள், மீண்டும் ஒரு போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
13 உடல்களுக்கும் தாசில்தார் 13 பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு உடலுக்கும் டிரைவர்கள் இருவரைக் கொண்ட தனித்தனி வாகனம், அந்த வாகனத்தின் பாதுகாப்புக்கு குறிப்பிட்ட காவல்நிலைய போலீசார் என உடல் ஒப்படைப்பு பணி நடைபெற்றது. மாசிலாமணிபுரம் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான வாகனத்தின் எண் பச 25 ஏ 0580 என்றும் 1510 எண் கொண்ட போலீஸ் டிரைவர் பிரபு எனவும், அந்த வாகன பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது தூத்துக்குடி தென்பாக காவல் துறையினர் என்றும் குறிப்பெழுதி வைத்திருந்தனர். இதே நடைமுறையைத்தான், ஒவ்வொரு உடலைக் கொண்டு செல்லும் போதும் பின்பற்றினர்.
"துப்பாக்கிச் சூடு நடத்த நாங்கள்தான் உத்தரவிட்டோம்' என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் ஒப்புதல் அளித்திருக்கும் தனித்துணை வட்டாட்சியர் சேகர், துணை வட்டாட்சியர் கண்ணன், கோட்ட கலால் அலுவலர் சந்திரன் ஆகியோர் பலியாடுகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்று ‘"உச்'’ கொட்டுகிறார்கள் வருவாய்த்துறையினர். "23-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு, கோட்ட கலால் அலுவலர் சந்திரன் உத்தரவிட்டதாக, தெற்கு காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், துப்பாக்கிச் சூடு நடத்த இவர்கள் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களும், இந்த மூவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதிகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை.
கலால் அலுவலர் சந்திரன்
இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திட, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கு துணை வட்டாட்சியர் சேகர் உத்தர விட்டதாக முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.
நடந்தது என்னவென்றால், மக்களின் கோபம் சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மீது இருப்பதால், அவரை மடத் தூர் பகுதி பந்தோபஸ்துக்கு அனுப்பியிருந்தார்கள். அவருக் குப் பதிலாக இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நியமித்திருந்தனர்.
எந்த நேரத்திலும் தங்களுக்கு எதுவும் நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அந்த மூன்று அதிகாரிகளின் குடும்பத் தினர்'' எனச் சொல்லும் வரு வாய்த்துறையினர், அந்த குடும்பத்தினர் குறித்த தகவல்கள் லீக் ஆகிவிடாமல் பாதுகாத்து வருகிறார்கள். மூவரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது எடப்பாடி அரசு. அது எந்தெந்த இடங்கள் என்பதையும் ரகசிய மாக வைத்திருக்கின்றனர்.
-சி.என்.இராமகிருஷ்ணன், நாகேந்திரன், பரமசிவன்