அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்து பேட்டி கண்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு..
அண்ணாமலை கொடுத்த ஆதாரத்தினால் தான் நாசர் பதவி இழந்தார், அதுபோல தற்போது அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜியும் அமைச்சர் பதவி இழப்பார் என்று பாஜகவினர் கூறுகின்றார்களே?
“அண்ணாமலை எப்போதும் தரவுகள் அடிப்படையில் பேசமாட்டார். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதைத்தான் பேசுவார். அதை பாஜக கட்சியை சார்ந்த நபர்களே கூறுகிறார்கள். தற்போது கூட எஸ்.வி சேகர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆக, அண்ணாமலை எதையாவது பேசிவிட்டு திடீரென்று காணாமல் போய்விடுவார். மேலும், நாசர் அவர்களை சில பணிகளை பார்ப்பதற்கு அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார் முதல்வர். இதற்கும் அண்ணாமலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை”.
செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு தமிழகத்தில் உள்ளவர்களை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். எதற்கு இந்த அவசரம் என்று விமர்சனம் வருகிறதே?
“இனிமேல், சட்டத்தை மதிக்க கூடியவர்களாக பாஜகவினர் இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான். மேலும், 1946 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் டெல்லி காவல் அமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தில், ஒரு மாநிலத்தில் சென்று ரெய்டு நடத்த வேண்டுமென்றால் அந்த மாநிலத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதே. மேலும், அந்த சட்டத்தில், பிரிவு 6 இன் படி சோதனை செய்பவர்களிடம் இணக்கமாகச் செயல்படும்போது அனுமதியின்றி சோதனையில் ஈடுபடலாம். அதனால் தான் சோதனை நடைபெற தமிழக அரசு அனுமதித்தார்கள். இந்நிலையில், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில், சோதனை நடத்த வேண்டுமென்றால் அந்த மாநில அரசினுடைய அனுமதி பெற வேண்டும் என்று அந்த சட்டத்தை புதுப்பித்துக் கொண்டார்கள். அதே போல தான், தமிழகத்தில் சோதனை நடத்த வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தை புதுப்பித்து உத்தரவு போடப்பட்டது”.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் , தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்றும் எடப்பாடி, ஆளுநரிடம் புகார் அளிப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளதே?
“ஆளுநர் ரவி பாஜகவினுடைய ஆள் தானே. மேலும், செந்தில் பாலாஜியின் மீது போடப்பட்ட வழக்கை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்று முதல்வர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அது போல, நீதிமன்றத்தில் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுடைய பதவி விலக வாய்ப்பு இருக்கிறது. அந்த சட்டம் கூட தெரியவில்லை என்றால் அறிவற்ற தனம் தான் என்று சொல்ல வேண்டும். மேலும் செந்தில் பாலாஜி தனது இலாகாவை திறம்படச் செய்து வருகிறார். அரவக்குறிச்சி, கொங்கு மண்டலம் போன்ற இடங்களில் அண்ணாமலையையும், எடப்பாடியையும் ஓட ஓட விரட்டியுள்ளார்கள் திமுகவினர். அதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என்பதால் அவரது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவை ஏ1 குற்றவாளி என்று அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின்பு அண்ணாமலையின் நண்பரான ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியிடம் புகார் அளித்துள்ளார் எடப்பாடி. இதுபோன்று தங்களுடைய நிலைப்பாட்டை நாட்களுக்கு நாள் மாற்றிக் கொள்வார்கள். பாஜகவும், அதிமுகவும் இப்படி மாறி மாறி குற்றம் சொல்லுகிறார்கள் என்றால் முதல்வர் ஸ்டாலின் மீது அமித்ஷா பயந்து விட்டார். எல்லாத்துக்கும் சகுனம் பார்க்கும் பாஜக கூட்டம், அமித்ஷா சென்னை விமான நிலையத்தில் கால் வைத்ததுமே மின் துண்டிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால், இந்த சகுனத்தை நம்பும் அமித்ஷா தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாது என்ற பயத்தினால் தான் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்துகிறார்கள். அதனால், இதுபோன்ற செயல்களை தமிழக மக்கள் என்றைக்கும் நம்பமாட்டார்கள்”.