அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவரது அமைச்சர் பதவியைத் திரும்பப் பெற வேண்டும் என அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன் நமக்கு அளித்த பேட்டி:
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்களே?
இதைப் பற்றிக் கூற அதிமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுகவில் இருக்கக் கூடிய ஓ.பன்னீர் செல்வம் கூட கிட்டத்தட்ட 125 நாட்களுக்கு மேலாக இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் இருந்தார். அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா ஊழல் செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்தார். அவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அப்பொழுது கூட அவருக்கு தியாக தலைவி என்றெல்லாம் பட்டம் கொடுத்தார்கள் அதிமுகவினர்.
நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதே நடைமுறை. ஆனால், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி டி.குன்ஹாவுக்கு எதிராக ஊர் முழுக்க கண்டன தீர்மானத்தை அதிமுகவினர் நிறைவேற்றினார்கள். அதனால், இதைப் பற்றிக் கூற இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் வழக்கு போட்டிருக்கிறார்களே?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் மோடி, அமத்ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்னவ், எல்.முருகன், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் பதவிகளையும் தான் பறிக்க வேண்டும். பதவியை பறிக்க வேண்டும் என்றால், இங்கு யாரும் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியாது. ஆகவே, குற்றத்தை யார் மீது வேண்டுமானாலும் சுமத்தலாம். ஆனால், அந்த குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தால் மக்களின் வரிப் பணம் தானே வீணாகிறது என்று அந்த வழக்கில் சொல்கிறார்கள்?
கொரோனா காலத்தில் விளக்குமாறு வாங்கியதாக 300 கோடி ஊழல் செய்தார்கள் அதிமுக. அதே போல் மாஸ்க் வாங்கியதில் 550 கோடி, பிலீச்சிங் பவ்டர் வாங்கியதில் 375 கோடி, காண்ட்ராக்டருக்கு 4,000 கோடி என இத்தனை கோடிகள் ஊழல் செய்தார்கள். அப்போது மக்களின் வரிப் பணம் வீணாய் போனது என்று அவர்களுக்கு தெரியவில்லையா.
ஆகவே செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்தால் எந்த விதத்திலும் மக்களின் வரி பணம் வீணாய் போகாது. சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன சம்பளம் கொடுப்பார்களோ அதைத் தான் அவருக்கு கொடுப்பார்கள். அதனால், அதிமுகவினர் முதலை கண்ணீர் விடுவதை தவிர்த்து உருப்படியான வேறு வேலை இருந்தால் அதை பார்க்கலாம்.