கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக கூறி கைதுசெய்யப்பட்ட நிர்மலாதேவி அவ்வப்போது விசாரணைக்காக நீதிமன்றம் வருவார். யாருடனும் பேசாமல் மௌனமாகவே இருப்பார். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது அவரே விரும்பாமலும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் நிர்மலா தேவியை சந்தித்த நமது நிருபரிடம், நிர்மலா தேவி பல உண்மைகளை கூறியுள்ளார்... அவர் கூறியது,
நக்கீரன்: உங்க அண்ணன் ரவி, அண்ணி வனஜா அருப்புக்கோட்டையில் சந்தித்து பேசினேன்.
நிர்மலா தேவி: ஓ அப்படியா, அவங்க என்னை பார்க்கவே வருவது இல்ல. அண்ணன், அண்ணி, எனது கணவர் எல்லாரையும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க. என்னை யாருமே பார்க்க வரல.
நக்கீரன்: உங்க கணவர்ட்ட பேசும்போது அவரு எதுமே பேச மாட்டிங்குறாரே?
நிர்மலா தேவி: அவர் என்மேல இருக்குற கோபத்துலதான் பேசாம இருப்பார். அவர சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க வரசொல்லுங்க நான் அவர்ட்ட பேசணும்.
நக்கீரன்: உங்க கணவர் விவாகரத்திற்கு விண்ணப்பிச்சிருக்கிறார். ஆனா நீங்க அவர பாக்கணும்னு சொல்றிங்களே?
நிர்மலா தேவி: அந்த ஆடியோ கேட்டதுல இருந்தக் கோபத்துல செஞ்சிருப்பார், நீங்க அவருக்கு மெசெஜ் அனுப்பி என்ன சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க.
நக்கீரன்: இந்த வழக்கு பற்றி சொல்லுங்க.
நிர்மலா தேவி: இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல, என்னென்னமோ நடக்குது.
நக்கீரன்: ரொம்ப நாளா உங்க வக்கீல் கோர்ட் வரவே இல்லையே ஏன்? ஒருவேளை வழக்கை விட்டு விலகிட்டாரா?
நிர்மலா தேவி: வக்கீல் வழக்கை விட்டு விலகிட்டாரு அப்படிங்குறதே நீங்க சொல்லிதான் தெரியும். எனக்கு இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல. கேஸ் பத்தி எதும் கேக்காதீங்க, அதை விடுங்க. வீட்டில இருக்குற எல்லோரையும் என்ன வந்து பார்க்க சொல்லுங்க.
நக்கீரன்: ஜெயில்ல எதும் உங்களை சித்திரவதை பண்றாங்களா?
நிர்மலா தேவி: அதெல்லாம் இல்லை, பழைய உடைகள் மட்டும்தான் இருக்கு, புது உடை கொடுக்கக்கூட ஆட்கள் யாரும் வரவில்லை. அதே உடைகளைதான் நான் திரும்பத் திரும்ப போட்டுக்குறேன். ஸ்பைனல் கார்டில் பிரச்சனை இருக்கு. அதிகமாக வலி எடுக்குது.
நக்கீரன்: மருத்துவமனைக்கு செல்லவில்லையா?
நிர்மலா தேவி: அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. (விரக்தியில் சிரித்தார்)
இந்த வழக்கை நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.