Skip to main content

முன்னாள் முதல்வர்களின் உண்ணாவிரத வரலாறு!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், தொண்டர்கள் என மொத்த அதிமுகவும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறது (உணவு இடைவேளை உண்டு). எதிர்க்கட்சியான திமுக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு மறியலுக்கு அழைப்பு விடுத்து நடத்துகிறது. என்ன தான் முதல்வராக இருந்தாலும் அவரே அவரது ஆட்சியிலேயே மத்திய அரசை கண்டித்து, மன்னிக்கவும் கண்டிக்கவெல்லாம் மாட்டார், கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருப்பது சிறப்பான விஷயம் தான். ஆளும் கட்சியே, அதுவும் மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் சுமூகமான உறவில் இருக்கும் ஆளும் கட்சியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறதே என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். 

 

ops eps fasting



முதல்வர் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டம் என்பது இதுதான் தமிழகத்துக்கு முதல் முறையா? இல்லை, நாம் மறக்க முடியாத உண்ணாவிரதப் போராட்டங்களில் நம் முன்னாள் முதல்வர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி செய்த மூன்று முதல்வர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, அது சினிமா. ஆனால், அவர்கள் உண்ணாவிரதம் இருந்தது வேறு வேறு காரணங்களுக்காக.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது சத்துணவுத்  திட்டம். அதற்காக அரசு கிடங்கில் இருந்த அரிசியை பயன்படுத்தும்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் இந்த விஷயத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. இந்திராகாந்திதான் அப்போதைய பிரதமர்.  சட்டமன்றத்தில் எம்ஜிஆர், "தமிழகத்தில்  அரிசி தட்டுப்பாட்டை குறைக்க, மத்திய அரசின் தானியக் கிடங்கிலிருந்து அதிக அரிசி  வழங்கக் கோரி, நாளை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்" என்றார். சொன்னதைப் போலவே மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் காலை, மதிய உணவுகளைத் தவிர்த்து போராட்டத்தில் இறங்கினார். இதனால் மேலும் கோபமடைந்தார் இந்திரா காந்தி. இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பிய சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  எம்ஜிஆரின் கோரிக்கைக்கு சம்மதிக்குமாறு அழுத்தம் கொடுக்க இந்திரா காந்தி சம்மதித்தார். மாலை ஐந்து மணிக்கு பழச்சாறு குடித்து வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் எம்ஜிஆர்.

 

mgr with indra



அண்ணா சமாதியில் எம்ஜிஆர் போராட்டத்தை நடத்தியது போல, எம்ஜிஆர் சமாதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. 1993ஆம் ஆண்டு, தமிழக முதல்வராக பொறுப்பில் இருந்துகொண்டு, மாநிலத்துக்குத் தேவையான கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பது இரண்டாவது முறையாக தமிழக அரசியல் பயணத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா நடத்திய இந்த உண்ணாவிரதத்துக்கும் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அன்றும் இன்றும் ஒரே பிரச்சனையாக தமிழகத்துக்கு இருப்பது, கர்நாடகா காவிரி நீரை தர மறுப்பதுதான். 

 

jeya fasting



அந்த வருடத்தில், காவிரி தீர்ப்பாயம் உத்தரவிட்ட 205 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டத்தில்  இறங்கினார். ஜெயலலிதா உண்ணாவிரதம் என்றால் சும்மாவா? மாநிலமெங்குமிருந்து தொண்டர்களை இறக்கினர்.  மூன்று பகல், இரண்டு இரவு வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் பொழுது மருத்துவர்கள் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை மேற்பார்வை செய்தனர். ஒப்பனையறை வசதியுடன் கேரவன் ஒன்று பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மத்தியில் நரசிம்ம ராவ் ஆட்சி நடைபெற்றது. அவர், இந்தப் போராட்டம் தொடர்வதைப் பார்த்து  மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த வி.சி.சுக்லாவை தமிழகத்துக்கு அனுப்பி ஜெயலலிதாவின் கோரிக்கை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செய்தியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சுக்லா வழங்கிய ஜெயலலிதா பழச்சாறு அருந்தி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

 

karunanidhi fasting



அடுத்த உண்ணாவிரதம், நாம் இன்னும் மறக்காதது. ஏனெனில் இதற்கு முன் சமீபத்தில் ஒரு தமிழக முதல்வர் நடத்திய உண்ணாவிரதம் அதுதான். ஏப்ரல் 2009ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் கொடூர தாக்குதலை எதிர்த்து, போரை உடனே நிறுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்கக் கோரி முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். தான் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் கலைஞர். முன்னறிவிப்பின்றி திடீரென நடைபெற்ற உண்ணாவிரதம் இது. அன்று காலை எப்போதும் போல, அறிவாலயத்திற்கு சென்று வருவது போல கிளம்பியவர் திடீரென காவலர்களிடம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி, களத்தில் குதித்தார். பிறகு அவரை சுற்றி குடும்ப உறுப்பினர்களும் தொண்டர்களும் சூழ உண்ணாவிரதம் நடைபெற்றது. "ராஜபக்சேவின் கொலைச் செயலுக்கு நானும் பலியாகிறேன்" என்று அவர் கூறியதைக் கேட்டு பதறினர் சுற்றி இருந்தோர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அளித்த தகவல் படி, இலங்கை பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவதை கைவிட ஒத்துக்கொண்டதாகவும் அதனால் உண்ணாவிரதம் கைவிடப்படுவதாகவும் மதியமே அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் இவருக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்பது காலம் அறிந்தது.
 

ops eps fasting 3



இதுதான் நமது முன்னாள் முதல்வர்களின் உண்ணாவிரத வரலாறு. இன்றும் மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அதிமுகவினரும் உண்ணாவிரதப் போராட்டம் செய்வதாகக் கூறினார்கள். பந்தலுக்கு வெளியே உணவு வழங்கப்பட்ட புகைப்படங்களெல்லாம் வெளிவந்திருக்கின்றன. மாலையில் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தும் கொண்டார்கள். என்ன வெற்றி கிடைத்தது, என்ன வாக்குறுதி கிடைத்தது என்று எவருக்கும் தெரியாது. ஈழத்தில் உண்ணாவிரதம் இருந்தே உயிரை விட்ட திலீபனும், மணிப்பூரில் 16 வருடங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவும் செய்த உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தை இவர்கள் கேலிக்கூத்தாகவும் கேள்விக்குறியாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.