விடுதலை நாளினை எதிர்பார்த்திருக்கும் சசிகலாவை ஜன.01 முதல் பார்க்க தினகரன், திவாகரன் மற்றும் சொந்தபந்தங்கள் அ.தி.மு.க. அரசியல்வாதிகள் அ.ம.மு.க. பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு நீண்ட பட்டியலே பரப்பன அக்ராகாரம் சிறைத்துறை வசம் குவிந்திருக்கிறது.
ஜன 27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா, பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உட்பட அ.தி.மு.க. அமைச்சர்கள், சசிகலாவின் சொந்தபந்தங்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்கிறார்கள்.
சசிகலா, பா.ஜ.க.வை எதிர்ப்பாரா? எடப்பாடியை முதல்வராக ஏற்றுக்கொள்வாரா? வரும் தேர்தலில், எடப்பாடியை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக ஒத்துக்கொள்வாரா? சசிகலாவுக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எப்படி நடந்துகொள்வார்? அவரை அ.தி.மு.க.வில் அனுமதிப்பார்களா… இல்லை அ.ம.மு.க.வின் நிறுவனத் தலைவராக அரசியல் நடத்துவாரா? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடுகிறது அரசியல் களம்.
நம்மிடம் பேசிய மன்னார்குடி வட்டாரம், "சசிகலா இப்பொழுது நிறையவே மாறிவிட்டார். அவர் தனது சொந்தபந்தங்களை, குறிப்பாக… டி.டி.வி. தினகரனை ‘எதுவும் பேசக்கூடாது‘ என உத்தரவிட்டுள்ளார். சசிகலாவின் குடும்பம் மன்னார்குடி மாஃபியா என்கிற பட்டப்பெயரை தாங்கி நிற்பதை சசிகலா விரும்பவில்லை. சொந்தபந்தங்கள் தமிழகத்தை ஆட்சிசெய்யும் அடியாட்களாக இருப்பதை அவர் விரும்பமாட்டார்.
அவரைப் பொறுத்தவரை "நான் அக்காவுக்காகத் தான் அனைத்தையும் செய்தேன். நான் செய்த நல்லது, கெட்டது எல்லாம் அக்காவுக்கே (ஜெ) தெரியும். அதில் ஏற்பட்ட பழி பாவங்களுக்காக நான்கு வருடம் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறேன். இன்று அக்கா இல்லாத சூழ்நிலையில்… நான் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. அதைக் கட்டுப்படுத்த அக்கா இருக்கமாட்டார். எனவே எனது செயல்கள் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நன்மை பயப்பதாக அமையும் என்பதைத் தவிர, எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவுமில்லை. அக்கா உயிரைக் கொடுத்து வளர்த்த அ.தி.மு.க.வை அழியாமல் பாதுகாப்பது மட்டும்தான் எனது லட்சியம். எனக்கு துரோகம் செய்தவர்கள், முதுகில் குத்தியவர்கள் என யார்மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அதனால் எனது சொந்தபந்தங்கள் இனிமேல் அரசியலில் தலையிட நான் அனுமதிக்கமாட்டேன்" என சசிகலா சொல்வதாக அவரது சொந்தபந்தம் சொல்கிறது.
விடுதலையை பெரிய விழாவாக கொண்டாடும் வகையில், பெங்களூருவிலிருந்து சென்னையில் சசிகலா தங்கப் போகும் வீடு வரை பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க சொந்தபந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கொஞ்ச நாள் அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள். அதன்பிறகு அவர்களது ஆட்டம் மறுபடியும் ஆரம்பமாகிவிடும்'' என்கிறார்கள் சசி சொந்தங்களுக்கு நெருக்கமானவர்கள்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலாவை ஏற்றுக்கொள்வதில் பெரிய தயக்கம் நிலவுகிறது. மறுபடியும் சசிகலாவின் கைப்பிடிக்குள் அ.தி.மு.க. செல்வதை இப்போது அதிகாரத்தை அனுபவிக்கும் யாரும் விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி முன்பிருந்த இரண்டாம்கட்ட தலைவர் என்கிற நிலையைத் தாண்டி முதலமைச்சர் வேட்பாளர் என்கிற முதல் இடத்தைத் தொட்டுவிட்டார். பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஓ.பி.எஸ். அவரை காலைவாரிவிட எதையாவது செய்வார் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் கட்சிக்குள் இருக்கிறது.
இந்நிலையில் சசிகலாவை பா.ஜ.க. கையிலெடுத்துச் செயல்படு மானால், எடப்பாடிக்கு நெருக்கடி அதிகமாகும். ஒருவேளை சசிகலா மூலமாக அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிக்கலாம். அதன்மூலம் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம். பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு ஓ.பி.எஸ். ஆதரவாகச் செயல்படலாம். பா.ஜ.க. -சசிகலா -ஓ.பி.எஸ். என ஒரு அணி உருவாகுமேயானால்… அது எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். பா.ஜ.க.வுடன் சேர்ந்து அவர்களை வளர்த்துவிடும் வேலையை சசிகலா செய்யாமல் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அ.தி.மு.க.வின் கௌரவத் தலைவராக எடப்பாடி ஏற்றுக்கொள்வார். சசிகலா கௌரவத் தலைவரானாலும் கட்சியின் வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் தரும் கையெழுத்தைப் போடும் உரிமையை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
இப்படி இரண்டு தரப்பும் விட்டுக்கொடுத்தல்களுடன் செயல்பட்டால் அ.தி.மு.க.வில் ஒற்றுமை ஏற்படும். ஆனால் சசிகலா, தனது பலத்தை மறுபடியும் நிரூபிக்க முயல்வார். அவரால் எம்.எல்.ஏ. ஆக்கப் பட்டவர்கள், கட்சி நிர்வாகிகளாக உருவானவர்கள், அமைச்சர்களாக பதவி பெற்றவர்கள்… என அனைவரையும் சசியின் சொந்தம் மிரட்டும். அந்த மிரட்டலில் பலர் சசிகலாவை சந்திக்க வருவார்கள். அந்த வருகை ஏற்படுத்தும் பலம் பா.ஜ.க., சசிகலாவுக்கு கொடுக்கும் ஆதரவு இவற்றைப் பொறுத்தே சசிகலாவின் எதிர்காலம் அமையும்.
ரஜினியை வைத்து அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த பா.ஜ.க., இப்போது சசிகலாவைப் பயன்படுத்த திட்டம் தீட்டிவருகிறது என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். இது அ.தி.மு.க.வுக்கு நிரந்தர தலைவலியாக அமையும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.