முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாக அத்தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரியசோரகையில் உள்ள, சென்ராயப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பிலும், அதிமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது, தொடர்ந்து கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். கோவில் மூலவரான சென்றாய் பெருமாளை வழிபட்டு, கோவிலைச் சுற்றி வந்து தரிசனம் செய்தார் முதல்வர். மேலும், கோவில் சார்பாக அவருக்கு ஒரு தட்டில் வாழைப்பழம், பூமாலை, பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கோயிலில் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பிரசாதத்தை வழங்கினார்.
இதையடுத்து அவர் திறந்த வேனில் நின்றவாறு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரச்சாரத்தின் இடையே ஐந்து இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
பெரியசோரகை மற்றும் ஜலகண்டாபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு பெரியசோரகை மற்றும் இருப்பாளி பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்துவைத்தார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட நினைத்த அவர், நேரமில்லை என்பதால் உடனிருந்தவர்களிடம் 'மதிய சாப்பாடு வேண்டாம்பா... டீ கொடுங்க' எனக் கூறி, இருப்பாளி அரசுவிழா மேடை அருகிலேயே கட்சியின் மூத்த தலைவர் பொன்னையனிடம் பேசியவாறு தேநீர் அருந்தியபிறகு தனது பணியைத் தொடர்ந்தார்.