Skip to main content

பயமுறுத்தும் வாட்ஸப்; சிறந்த மாற்று சிக்னலா..? டெலிகிராமா..? ஓர் அலசல்...

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

telegram or signal? which is best alternate for whatsapp

 

கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த விவாதங்களைப் பெருமளவில் எழுப்பியுள்ளது வாட்ஸப் செயலியில் கொண்டுவரப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் ஏதோ ஒரு வகையில் நம்மிடமிருந்து தகவல்களைத் திரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் இதுவரை இவ்வளவு பெரிதான விவாதங்களை எழுப்பாதபோது, வாட்ஸப்பின் இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கைகள் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்த என்ன காரணம்..? வாட்ஸப்பிற்கு மாற்றாகப் பார்க்கப்படும் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் எந்த அளவு பாதுகாப்பானவை..? கூகுள், ஸ்னாப்சாட் போன்ற மற்ற நிறுவனங்கள் நமது தகவல்களைத் திரட்டுவதில்லையா..?  

 

இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அனைத்து வகையான தொழில்நுட்ப நிறுவனங்களும் மக்களின் தனிப்பட்ட தரவுகளை ஏதேனும் ஒருவகையில் சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில், வாட்ஸப் கொண்டுவந்துள்ள இந்த தனியுரிமை கொள்கைகளின்படி, பயனர்களின் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள் குறித்த தகவல்கள், தயாரிப்புகள் குறித்த தேடல்கள், செயலிழப்பு தரவு, செயல்திறன் தரவு, பணப்பரிமாற்ற தகவல்கள், மொபைல் ID, பயனர் ID, விளம்பரத் தரவு, ஆன்லைன் கொள்முதல் குறித்த வரலாறு, பயனரின் இட அமைவு, பயனர் இருப்பிடத்தின் நேர மண்டலம் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸப் செயலி சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் சேமித்து வைக்கும். 

 

வாட்ஸப் செயலியின் இந்த புதிய கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில்,  உலகின் ஆகச்சிறந்த டெக் ஜீனியஸ்களில் ஒருவரான எலான் மஸ்க், "Use Signal" என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தை அடிக்கடி விமர்சித்து வந்த மஸ்க், இந்த ட்வீட்டை பதிவிட்டதும், ஏராளமான அவரது ஃபாலோவர்கள் வாட்ஸப்பில் இருந்து வெளியேறியதோடு, சிக்னல் செயலியை முண்டியடித்துக்கொண்டு இன்ஸ்டால் செய்தனர். இதன் பலனாக சிக்னல் செயலியின் சர்வர் க்ராஷ் ஆகும் நிலைக்குச் சென்றது. அதேபோல, ப்ளே ஸ்டோரின் தகவல் பரிமாற்றத்திற்கான செயலிகளின் பட்டியலில் முதலிடத்திற்கும் வந்தது சிக்னல். 

 

ஐரோப்பிய கமிஷன் அதிகாரிகளிலிருந்து, அமெரிக்க அரசிடமிருந்து மறைந்து வாழும் தனியுரிமை செயற்பாட்டாளரான ஸ்னோடென் வரை பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தும் செயலியான 'சிக்னல்' செயலி எலான் மஸ்க்கின் ட்வீட்டிற்குப் பிறகு கடைக்கோடி இணையவாசி வரைக்கும் சென்றடைந்தது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ள இந்த சிக்னல் செயலியின் முக்கிய நேர்மறை காரணியாகப் பார்க்கப்படுவது, இதன் பாதுகாப்பே. open source Signal Protocol அடிப்படையில் செயல்படும் இந்தச் செயலி, வாட்ஸப்பை போலவே 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' செய்யப்பட்டது. ஆனால், வாட்ஸப் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தின்படி, பயனர்களின் மெசேஜ்களை ஃபேஸ்புக் நிறுவனம் உட்பட யாராலும் பார்க்கமுடியாது என்றாலும், ஒரு பயனர் மற்றொருவருடன் எவ்வளவு நேரம் பேசினார் போன்ற ஒருசில தகவல்களைப் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடியும். ஆனால், சிக்னல் செயலியைப் பொறுத்தவரை, பயனரின் தொலைப்பேசி எண்ணைத் தவிர வேறு எந்த தகவலையும் அந்நிறுவனம் திரட்டுவதில்லை. சிக்னலில், செய்திகள் மட்டுமல்லாமல், அவை தொடர்பான உப தகவல்களும் கூட என்கிரிப்ட் செய்யப்படுகின்றன என்பது இதில் கூடுதல் பாதுகாப்பு. இதுவே அந்நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மையைப் பலரது மனதிலும் ஆழப் பதியவைத்துள்ளது. 

 

வீடியோ கால், குரூப் சாட் போன்ற வாட்ஸப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த சிக்னல் செயலி, பயனர்களின் இணைய அடையாளமான ஐபி அட்ரஸ்ஸை அடையாளம் காட்டாமல் இருக்க, 'சிக்னல்' சர்வரில் அல்லாமல் ரிலே கால் மூலம் மற்ற பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. இப்படிப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் சிக்னல், லாப நோக்கில்லாத 'சிக்னல்' பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. சிக்னல் செயலி இத்தனை பாதுகாப்பு அம்சங்களுடன் சேவை வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புதிய பயனர்களைப் பெற முயன்று வருகிறது. 

 

cnc

 

சிக்னல் அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளை வழங்காதபோதும், தற்போதைய வாட்ஸப் கொள்கைகளை ஒப்பிடுகையில் டெலிகிராம் அதன் பயனர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி வருகிறது. டெலிகிராம் செயலியில், 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' தானாக இயங்காது என்றாலும், secret chat வசதியைப் பயன்படுத்தும்போது, 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' செயல்படத் துவங்குகிறது. இருப்பினும், டெலிகிராம் செயலியில் உள்ள பயனர்களின் தரவுகள் முழுவதும் பாதுக்கப்படுவதாகவும், இவற்றை யாராவது பார்வையிட வேண்டுமென்றாலும் நீதிமன்ற அனுமதி பெறவேண்டும் என்கிறது அந்நிறுவனம். அதேபோல, இதுவரை பயனர்கள் தகவல்கள் எதையும் மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்துகொண்டதில்லை எனவும் டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

2 பில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸப், தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுவதால், அதனை விட பாதுகாப்பான சிக்னல் மற்றும் டெலிகிராம் நோக்கி மக்கள் படையெடுக்கும் சூழலில், அமேசான், கூகுள், ஸ்னாப்சாட் என அனைத்து நிறுவனங்களும் பயனர்களின் தகவல்களைத் திரட்டி வருவதும் மறுக்க முடியாததே.