திருக்குறள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக பல்வேறு தகவல்களை தமிழ்கடல் என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை, ருத்ராட்சம் அணிவித்து, பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டுள்ளார். இந்த நிகழ்வை எப்படி பார்க்கிறீர்கள்?
திருவள்ளுவருக்கும் பாரத மாதாவுக்கு என்ன சம்பந்தம்? இதற்கு முதலில் அர்ஜூன் சம்பத் பதில் சொல்ல வேண்டும். திருவள்ளுவர் இந்து மதம் என்று கூறுவதே முதலில் தவறான ஒன்று. இந்த மதத்தை பற்றி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் இந்துமத வாழ்வியலை பற்றி எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? அவர் பேசியது எல்லாம் மனித வாழ்வியல். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார் என்று தற்போது சிலர் முன்னிலைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த கடவுள் வாழ்த்தே பிறகு வந்தவர்கள் சேர்ந்தது என்று வ.உ.சி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னால் தவறாக இருக்காது. திருக்குறள் முழுவதும் தமிழர்களின் வாழ்வியல். அதனால் தான் பாரதியார் யாம் கம்பனை போல், வள்ளுவனை போல் உலகில் இல்லை என்கிறார். வள்ளுவரும், இளங்கோவடிகளும் சமணர்கள்கள்.
உங்கள் கூற்றுப்படியே திருவள்ளுவரை சமணர் என்று கூறுவதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? அவரை மத சார்ப்பற்றவராக கொண்டு வருவதன் நோக்கம் என்ன?
மதசார்ப்பற்றவராகத்தான் அவர் இருந்திருக்கிறார். அவரை நீங்கள் இந்து என்று சொன்னால்? திருநீறு பூசினால், அங்க அப்பாவை அவன் அவர்களுடைய அப்பா என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திருவள்ளுர் தமிழர்களின் தலைவர். அவரை எங்கள் அப்பா என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது ரொம்ப கேவலமானது.
கிருஸ்துவர்கள், முஸ்லிம் தவிர மீதி இருப்பவர்கள் எல்லாம் இந்துக்களை என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். அந்த வகையில் திருவள்ளுவரை அவர்கள் இந்து என்கிறார்கள். இதை எப்படி பார்ப்பது?
சமணர்கள் இந்து மதத்தில் வரமாட்டார்கள். இங்கே மார்வாடி, ஜெயின் மதத்தினர் இருக்கிறார்களே, அவர்கள் ஒரு போதும் தங்களை இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். புலால் உண்ணாமையை லட்சியமாக வைத்திருப்பவர்கள். ஆகையால் அதே சமயத்தை பின்பற்றிய வள்ளுவரும் அதனை பின்பற்றினார். ஆகையால் இதனை வைத்து அவரை இந்து என்று அடையாளப்படுத்துவது முட்டாள் தனமான ஒன்று. பிராமணர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் மற்றவர்களை விட அதிகமான அறிவு இருப்பதாக சிலர் கூறுகிறார்களே! அவ்வளவு தான் அவர்களின் அறிவு.
கடவுள் நம்பிக்கை உடைய திருவள்ளுவரை நாத்திகவாதிகளும், திராவிட இயக்கவாதிகளும் கொண்டாடும் போது நாங்கள் கொண்டாட கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்களே?
நாங்கள்தான் நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றோமே, இப்போது திருவள்ளுவரை பற்றிபேசும் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தார்கள். நாங்கள் வள்ளுவர் கோட்டம் அமைத்தோம், வள்ளுவனுக்கு சிலை அமைத்தோம். இவர்கள் என்ன செய்தார்கள். அப்போதெல்லாம் சும்மா இருவிட்டு தற்போது உரிமை கொண்டாடுவதற்கு அவர்களின் நோக்கம் என்ன. எல்லாம் தேர்தல் அரசியல்தான். இவர்களை யாரும் நம்மபோவதில்லை. தமிழகத்தில் இருந்து நிரைவில் இவர்கள் துரத்தப்படுவார்கள்.