கொரோனாவை எதிர்க்க, 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் பிரதமர் மோடி, ஏப்ரல் 5 - ந்தேதி இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் மின் விளக்கை அனைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளியேற்றுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்.இந்திய மக்களின் ஒற்றுமையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டவே இதைச் செய்யுங்கள் எனக் காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதுதான் காரணமா? வேறு விசயங்கள் இருக்கிறது என்கிறார்கள் திராவிட கொள்கையாளர்கள்.நம்மிடம் பேசிய திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்,"பாரதிய ஜன சங்கத்தை பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்ட நேரம்தான் ஏப்ரல் - 5, 9 மணி.அதாவது, காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அத்துடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பிரசாத் முகர்ஜி.அவர் விலகிய நாள் 1950, ஏப்ரல் -5 , இரவு 9 மணி. அதன் பிறகு, அப்போதைய ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் கோல்வர்க்கருடன் இணைந்தார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து,1951- ல் பாரதிய ஜனதா சங்கம் கட்சியைத் தொடங்கினர். அந்த கட்சியின் அப்போதைய சின்னம் தீபம் (விளக்கு).அதன் பிறகு, 1980 -ஆம் ஆண்டு , ஏப்ரல் 5 - ந்தேதி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சங்கத்தை 'பாரதிய ஜனதா கட்சி ' என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. அதனை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.அந்த நாள் ஏப்ரல்-5. நேரம், இரவு 9 மணி. மறுநாள் , ஏப்ரல் 6 -ந்தேதி, பாஜக தொடங்கப்பட்டதை அறிவித்தனர். அந்த வகையில் தற்போது பாஜகவுக்கு வயது 40.
பாஜகவின் 40 - வது ஆண்டு துவக்க தின விழாவைக் கொண்டாட வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாகத் தேசம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொண்டாடமுடியாத சூழல். அதனால், பாஜக துவக்கப்பட்ட நாளையும், துவக்கப்பட்ட நேரத்தையும் தேசம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் ஒளியேற்றச் சொல்லியிருக்கிறார் மோடி.
இந்துக்கள் மட்டுமல்லாமல் கிருஸ்தவர்களும் பகுத்தறிவாளர்கள் மற்றும் மற்ற மதத்தினரும் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்துக்களுக்காக அகல் விளக்கு, கிருஸ்தவர்களுக்காக மெழுகுவர்த்தி, மற்றவர்களுக்காக டார்ச் லைட் என மூன்று விதத்தில் ஒளியேற்றச் சொல்லியுள்ளார். மோடியின் விளக்கேற்றச் சொன்ன ரகசியம் இதுதான் " என விளக்கினார்.
இதற்கிடையே, ஏப்ரல்- 5, இரவு 9 மணிக்கு கடக ராசி, பூசம் நட்சத்திரத்திற்கு கிரகங்கள் மாறுகின்றன. அது, இந்தியாவின் வரைபட அமைந்துள்ள லக்னத்துக்கும், மோடியின் ஜாதகத்துக்கும் நலன் புரிவதாக இருக்கிறதாம்.அந்த நலனை முழுமையாகக் கிடைக்க தேசம் முழுவதும் விளக்கு ஒளியில் ஒளிர வேண்டும் என ஜோதிடர்கள் சொன்ன யோசனையின் படி விளக்கேற்றச் சொல்லியிருக்கிறார் மோடி என ஜோதிடர் உலகத்தில் செய்தி பரவிக்கிடக்கிறது.