Skip to main content

நக்கீரன் கொடுத்த குரல்! நம்பிக்கை பெறும் காவல்துறையினர்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020



நக்கீரன் யூடியூப் சேனலில் ''இவர்களுக்கு யார் காவல்?'' என்ற தலைப்பில் ஊரடங்கின்போது காவல்துறையினரின் பணிச்சுமை - மனஅழுத்தம் - பாதுகாப்பின்மை குறித்து சொல்லியிருந்தோம். 
 

''ஊரடங்கு நாட்களிலும் வீட்டில் இருக்க முடியாமல் இருப்பவர்கள் காவல்துறையினர். வீட்டுக்குள் இருக்க வேண்டிய மக்கள், ஊருக்குள் உலவக் கூடாது என்பதற்காக காவலர்கள் ஊர் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 

21 நாள் ஊரடங்கின் முதல் நாளில், டூவீலர்களிலும், கார்களிலும் சுற்றியவர்களை நிறுத்தி, கைக்கூப்பி கும்பிட்டு, கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்த காவலரைத் தமிழகம் பார்த்தது.
 

அதேநாளில், அவசர பணிக்காக சென்ற டாக்டர்கள் உள்பட பலரையும் லத்தியால் அடித்த போலீஸ்தனத்தையும் தமிழகம் பார்த்தது. 
 

காவல்துறைக்கு எப்போதுமே இந்த இரட்டை அணுகுமுறை உண்டு.
 

இப்போதும், மக்களை விரட்டுகின்ற போலீசார் இருக்கிறார்கள். பசித்தவர்ளைத் தேடிச் சென்று உணவு கொடுக்கும் போலீசாரும் இருக்கிறார்கள்.
 

மனிதர்களை தோப்புக்கரணம் போட வைக்கும் போலீசாரும் உண்டு. நாய்கள், குரங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கும் போலீசாரும் உண்டு.


 

police



மதுரையில் கறிக்கடைக்காரரின் உயிர்ப்பலி, திருவண்ணாமலையில் இளைஞரை அடித்து துவைத்த போலீஸின் கொடூரம் என காக்கி விறைப்பை பார்க்கிறோம்.
 

கருணையுடன் மக்களுக்கு தண்ணீர் கொடுத்தும், தங்குவதற்கு பாதுகாப்பளித்தும் கடமையாற்றும் போலீசாரையும் பார்க்கிறோம்.


 

nakkheeran app


காக்கி விறைப்பாக இருந்தாலும், கல்லுக்குள் ஈரமாக இருந்தாலும் போலீசார் இந்த ஊரடங்கு காலத்தில், வீதியில்தான் நிற்கிறார்கள்.
 

ஏப்ரல் மாத வெயில், இரவு நேர கொசுக்கடி என எந்தச் சூழலாக இருந்தாலும் அவர்களின் இப்போதைய டியூட்டி, தெருவில்தான் நின்றாக வேண்டும். ரோட்டில் போலீஸ் இருக்கிறது என்று தெரிந்தால் மக்களிடம் சமூக ஒழுங்கு வெளிப்படுகிறது.
 

போலீஸ் நடமாட்டம் தெரிந்தவுடன், கடைகளில் இடைவெளி விட்டு நிற்கிறார்கள். ஆள் இல்லாவிட்டால் ஆட்டுமந்தைகள் போல இறைச்சிக் கடைகளிலும், காற்கறி சந்தைகளிலும் குவிகிறவர்களும் உண்டு.


 

police



இத்தனை காலம் சட்டம்-ஒழுங்கு காவலர்களாக இருந்த போலீசார் இப்போது சமூக ஒழுங்கின் காவலர்களாக ஆகியிருக்கிறார்கள்.
 

கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா?  தெருவில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆங்காங்கே தடுப்பரண் அமைத்து நிற்பவர்கள் கான்ஸ்டபிள்கள்.
 

ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் கால்கடுக்க நிற்கிறார்கள். அவர்களுக்கு சரியான மாஸ்க் காவல்துறையால் வழங்கப்படுகிறதா?
 

அட போங்கப்பா.. டாக்டர்-நர்ஸூக்கே என்-95 மாஸ்க் இல்லையாம். இதில் போலீசுக்கு மாஸ்க்கா என்று கேட்கத் தோன்றும்.
 

உண்மைதான்.. மருத்துவத்துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். காவல்துறையினர் உயிர் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுகிறார்கள்.
 

ஊரடங்கு நேரத்தில், பிக்னிக் போவது போல டூவீலரில் நெருக்கியடித்துச் செல்லும் மொத்த குடும்பத்தையும் நிறுத்தி விசாரிக்க வேண்டும்.
 

காஸ்ட்லி பைக்கில் டுபு,டுபுவென செல்லும் இளசுகளை ஓரங்கட்டி செக்கிங் செய்ய வேண்டும்.
 

மெடிக்கல் ஷாப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, வேறுவகையான மருந்துகளைத் தேடும் குடிமகன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 

அரசு சின்னம் போட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அவற்றை யாரேனும் தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
 

டெம்போக்களில் மீடியா ஸ்டிக்கரும், லாரிகளில் அட்வகேட் ஸ்டிக்கரும் ஒட்டிககொண்டு போகிற கூத்துகளைத் தடுக்க வேண்டும். நாள்தோறும் முன்பின் தெரியாத, முகக்கவசம் அணிந்த-அணியாத மனிதர்களை எதிர்கொள்ள வேண்டும்.
 

இவர்களில் யாருக்கு கரோனா  தொற்று உள்ளது என்று டாக்டர்களாலேயே உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீசாரால் எப்படி கண்டறிய முடியும்?
 

பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீசாரில் எத்தனை பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? நோய்த்தொற்று ஏற்படாதபடி என்னென்ன பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன?
 

கால் கடுக்க ரோட்டில் நின்று, உச்சி வெயிலை தலையில் வாங்கி, போவோர் வருவோரை விசாரித்து, கரனோ யுத்தத்தில் முன்கள வீரர்களாக செயல்படும் பலரும் கான்ஸ்டபிள்கள்.
 

அவர்களுக்கு அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர்களும், இன்ஸ்பெக்டர்களும் களத்தில் நிற்கிறார்கள்.
 

அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் இவர்களுக்கான பணிகளை ஒதுக்கி, சரியாக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கின்ற வேலைகளை செய்கிறார்கள்.
 

அதேநேரத்தில், சாலையில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்-உணவு உள்ளிட்டவை கிடைக்கின்றனவா என கண்காணிக்கவேண்டியதும் உயரதிகாரிகள் கடமைதானே!
 

இதில்  பெண் காவலர்கள், பெண் இன்ஸ்பெக்டர்கள், பெண் எஸ்.ஐ.கள் நிலை மிகவும் பரிதாபம். ரோட்டில் நிற்கும்போதும் பிரச்சனை. வீட்டுக்கு சென்றாலும் பிரச்சனை. அம்மா என்று ஆசையுடன் வரும் குழந்தையைத் தொட்டுத் தூக்க முடியாது.
 

“எதற்காக இந்த வேலை? எல்லாருக்கும் நோயை பரப்பி விடுறதுக்கா?“ எனக் கேட்கும் பெரியவர்களின் கேள்விக்கு பதில் இருக்காது.  

 

ஊரடங்குக்கு முன்புவரை வலியவந்து பேசி, சல்யூட் வைத்த அக்கம்பக்கத்தார்கூட, இப்போது நாலடி தள்ளி நடந்து, மரியாதை காட்டுவது போல  ஒதுங்கிச் செல்வார்கள்.

ஆண் காவலர்களுக்கும் இதே நிலைதான். வீட்டில் தனியே உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலையை சந்திக்கும் காவலர்களும் இருக்கிறார்கள்.
 

குடும்பத்தினர் நலன் கருதி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள காவலர்களும் இருக்கிறார்கள். பணிச்சுமை-மனஅழுத்தம்-பாதுகாப்பின்மை இவைதான் காவலர்களை ஆக்கிரமித்துள்ளன.
 

மக்களைப் பாதுகாக்கும் காவல் பணியில் உள்ள இவர்களின் உயிருக்கும் இவர்களை நம்பி இருக்கும் உயிர்களுக்கும் யார் காவல்?
 

காவல்துறையின் உயரதிகாரிகளும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் மட்டுமே இந்தக் கேள்விக்கு தங்கள் செயல்பாடுகளால் பதில் சொல்ல முடியும்.
 

சொல்வார்களா?''

 

இவ்வாறு கேள்வி எழுப்பி நாம் காணொளி வெளியிட்ட பிறகு, கடந்த 10.04.2020 அன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.பி.எஸ். அவர்களை நேரில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 18,000 முக கவசங்களை வழங்கினார். இதேபோல் காவலர்களுக்கு சானிடைசர், கையுறை போன்றவைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 

 

மேலும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி, பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு காவலர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தங்களுக்காக குரல் கொடுத்ததற்காக நக்கீரனை தொடர்பு கொண்ட காவலர்கள் சிலர் நன்றி தெரிவித்தனர்.