புலனாய்வு இதழியல் சாதனைப் பயணத்தில் 31ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரனுக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள் தெரிவித்த வாழ்த்துக்கள்...
இலக்கியவாதி நாஞ்சில் சம்பத்
நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சங்ககாலம் என்கிற தங்க காலத்தில் எல்லாம் வல்ல சிவனிடம் கேள்விகேட்ட நக்கீரன் பெயரால் ஒரு அரசியல் இதழ் அன்னை தமிழகத்தில் தொடங்கி அந்த நக்கீரன் ஏடு மூப்பதாண்டுகளை வெற்றிமுகமாக கடந்து முப்பத்தி ஒன்றாம் ஆண்டு அடியெடுக்கிறது என்ற செய்தியறிந்து மட்டிலாத மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு அரசியல் இதழ் தொடங்கி அதையும் ஒரு தமிழன் தொடங்கி வெற்றிகரமாக இயக்குவது என்பது சிலுவைகளை சுமந்துகொண்டும் சிரமங்களை அனுபவித்துக்கொண்டும் நக்கீரன் தன்னுடைய பயணத்தை, முப்பதாண்டு காலத்தை கடந்து வந்திருப்பது ஒரு சாதனை என்றே நான் கருதுகிறேன்.
அரசாங்கத்தினுடைய கண்காணிப்பிற்கும், அரசாங்கத்தினுடைய அடக்கு முறைக்கும் நக்கீரன் ஆளான நாட்களை தமிழகம் மறந்து விடாது. நக்கீரன் இதழ்களை வாங்கி படிக்கக்கூடாது என்று அதிகாரத்தில் இருக்கிற அமைச்சர்கள் ஆணையிட்டதும், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நக்கீரனை வாங்கி சென்றதும் எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது.
நக்கீரன் சொல்ல வருகிற செய்தியை துணிச்சலாக சொல்லுகிறது, விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நக்கீரன் ஏடு செய்திகளை அம்பலப்படுத்துகிறது, ஊழல் பேர்வழிகளின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது. லஞ்ச லாவண்ய பேய்களின் அட்டகாசங்களை சித்தரித்திருக்கிறது, போலிச்சாமியார்களின் கபட நாடகங்களை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் தாழ்ந்த தமிழகம் தலை நிமிர்வதற்கு நக்கீரன் தனது தொண்டை ஆற்றியிருக்கிறது என்பதை மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
முப்பதாண்டு காலமாய் இது வெற்றிகரமாக இயக்கி வருகின்ற நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தோன்றா துணையாக அவருடன் இருந்து பணியாற்றி நக்கீரன் இதழை கொண்டுவர கடமையாற்றுகிற அனைவருக்கும், நக்கீரனை தாங்கி பிடிக்கிற வாசகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முப்பத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரன் ஆயிரம் பிறை காணவும், ஆயிரம் வசந்தம் காணவும் பாயிரம் பாடுகிறேன்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன்
நக்கீரன் இதழை தொடங்கி முப்பது ஆண்டுகளை கடந்துவிட்டது என்பது ஒரு மகிழ்ச்சியான அதேநேரத்தில் வியப்பான செய்தியாக இருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கு முன்பு நக்கீரன் தொடக்க விழாவிற்காக ஒட்டப்பட்ட பெரிய சுவரொட்டி எனக்கு நினைவிலிருக்கிறது. அன்று நக்கீரன் ஆசிரியரோடோ, நக்கீரன் குழுவினரோடோ எந்த தொடர்பும் இருக்கவில்லை என்றாலும் அந்த பெரிய சுவரொட்டியும் நக்கீரன் என்ற பெயரும் என் போன்றவர்களை ஈர்த்தன.
பிறகு இதழோடு தொடர்பு ஏற்பட்டு இரண்டு தொடர்களையும் எழுதி முடித்திருக்கிறேன். இடையிடையே பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். நக்கீரனின் துணிச்சலை நேராக அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லலாம். நக்கீரன் ஆசிரியர் சிறையில் பொடாவில் இருந்தபொழுது நானும் அவருடன் சிறையில் அடுத்த அறையில் இருந்தேன். எனது நக்கீரன் எத்தனை விதமான துயரங்களை அனுபவித்தது. ஊடகத்துறை என்பது எத்துனை கடினமானது என்பதை நாம் அவர் மூலமும், நக்கீரன் மூலமும் அறியலாம். ஆனால் அத்தனைக்கும் முகம் கொடுத்து எதற்கும் அஞ்சாமல் மேலும் மேலும் நக்கீரனை வளர்த்தெடுத்திருக்கிறார் என்று அறியும்பொழுது நக்கீரன் கோபால் அவர்களுக்கு தனியாகவும் ஒரு வாழ்த்தினை சொல்லவேண்டும்.
மேலும் வளரட்டும்... இன்னும் பல சமூக அவலங்களை எடுத்துரைக்கட்டும்... சமூக மேம்பாட்டிற்கும் நக்கீரன் பயன்படட்டும்...
வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்...
மேட்டூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை
நக்கீரன் வார இதழ் தொடங்கி முப்பத்தாண்டுகள் முடிந்து முப்பத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வார இதழை ஆரம்பிக்கும் பொழுது எந்த பெயரை வைக்க வேண்டும் என்று ஆசிரியர் யோசித்திருப்பார் என்று கருதுகிறேன். அப்படி யோசித்ததன் விளைவாக நக்கீரன் என்ற அந்த பெயரை வார இதழுக்கு சூட்டி இன்றைக்கு நக்கீரன் வழியிலேயே இந்த இதழ் நடைபோடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நெற்றி கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமான் என்று தெரிந்தும் தமிழ் புலவர் நக்கீரன் ஆண்டவனையே எதிர்த்து வாதம் செய்த இடத்தை நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். அதைப்போல வாரத்திற்கு ஒன்று என்று துவக்கப்பட்ட அந்த நக்கீரன் வார இதழ் இன்று வாரம் இரு முறை என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அந்த பத்திரிகை போகின்ற திசை, கொள்கையோடு செய்திகளை வெளியிடுவதில் உறுதியான நிலைப்பாட்டோடு இருப்பதுதான் காரணம் என்று கருதுகிறேன்.
நக்கீரன் மற்ற செய்திதாள்களுடனும், மற்ற வாரஇதழ்களுடனும் ஒப்பிடும்போது வித்தியாசமாக சமுதாயத்திலே நடக்கின்ற அவலங்களை, சமூக விரோத செயல்களிலே யார் ஈடுபட்டாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, தனி மனிதனாக இருந்தாலும் சரி சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கக்கூடிய காரியத்தை எந்த ரூபத்தில் செய்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற சிறந்த துணிச்சலான, நாணயமிக்க, நம்பிக்கையான இதழாக இன்றும் மிளிர்கிறது, தொடர்கிறது என்று பார்க்கின்ற போது நக்கீரனுக்கு தனி பெருமையுண்டு என்றே சொல்லலாம். அந்தவகையில் முப்பது ஆண்டுகள் முடியப்பெற்று முப்பத்தி ஒன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரன் வார இதழுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்
தன் எழுத்துக்களில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வரலாற்று வரிகளை தனதாக்கி அதை நடைமுறைப்படுத்தி வருகிறது நக்கீரன். குறிப்பாக நக்கீரன் தொடங்கி முப்பதாண்டு நிறைவு செய்கின்ற இன்றுவரை ஆதிக்க அரசியல் அடாவடிகளையும் அடக்குமுறைகளையும் ஊழல்களையும், பல்வேறு அடக்குமுறை ஒடுக்குமுறை சட்டங்களையும் எதிர்கொண்டு மிக தெள்ளத்தெளிவாக கடைக்கோடி மக்களிடமும் அரச பயங்கரவாதத்தின் செயல்களையும், ஊழல் செயல்களையும், அரசாங்கம் செய்யக்கூடிய மக்களுக்கு விரோதமான கொள்கை திட்டங்களையும் தோலுரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே.
நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் படுகொலைக்கு உள்ளானார்கள். ஆனாலும் நக்கீரன் ஓய்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை, ஒளிந்துவிடவில்லை, பயந்துவிடவில்லை, ஆதிக்க அரசியலிடம் சென்று சரணாகதி அடையவில்லை.
கடந்த முப்பது ஆண்டுகளாக நக்கீரன் தனது கடமையை, பணியை தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறது. எந்த அரசுகள் ஊழல் செய்தாலும், எந்த மந்திரிமார்கள் ஊழல் செய்தாலும், எந்த அதிகார வர்க்கம் ஆணவத்தோடு கொட்டமடித்தாலும் அவர்களது முகத்தையே உலகத்திற்கு வெளிச்ச்மபோட்டு காட்டுகின்ற துணிச்சல் பெற்ற இதழாக நக்கீரன் உள்ளது. குறிப்பாக அட்டைப்படங்களை கலர் படங்களில் அந்த முகங்களை நாட்டு மக்களுக்கு காட்டி, இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் முன் அடையாளப்படுத்தும் வேலையை நக்கீரன் சிறப்பாக செய்துவருகிறது.
அந்த வகையில் என்னைப்போன்று தமிழர் உரிமைக்காகவும், தமிழ்ச்சமூகத்தின் வாழ்வுரிமைக்காகவும் தலைமைகளை மிக துல்லியமாக இனங்கண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தையும், பாராட்டையும், வாழ்த்துகளையும்கூட நக்கீரன் பதிவு செய்யாமல் விட்டதில்லை.
நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 2001 முதல் 2010 வரை பணியாற்றிய காலங்களில் அந்த இளவயதில் என் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான கேள்விகளையும், மணல் குவாரிகளை அரசுடைமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும், உலக யுத்தம் என்று ஓன்று வந்தால் அது தண்ணீருக்காகதான், குடிநீருக்காகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்ற கருத்தாக இருந்தாலும் சரி, கஞ்சா அபின் போன்றவை ஆங்காங்கே விற்கப்படுகிறது போன்ற எனது சட்டமன்ற உரையாக இருந்தாலும், தமிழ்நாடு காவல்நிலைய படுகொலைகள், கற்பழிப்புகள் பற்றி பேசிய எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு நேரடியாக கள ஆய்வில் இறங்கி காக்கிகளின் அத்துமீறல்களை காக்கி உடையோடு கார்டூன் வரைந்து மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பத்திரிகை நக்கீரன்.
நக்கீரன் உழைக்கும் பாட்டாளி மக்கள் பக்கமும், போராடுகின்ற மக்களின் பக்கமும் நிற்கின்ற ஒரு பத்திரிகை. யாருக்காகவும், எதற்காகவும், எப்பொழுதும் சமரசம் செய்துகொள்ளாமல் நக்கீரன் தன் பணியை இந்த தமிழ் சமூகத்திற்கு செவ்வனே செய்து வருகிறது.
இந்திய நாட்டின் பிரதமராக இருக்கின்றவர் வரையும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தது வரையில் அனைவரிடமும் நேர்க்காணலை எடுத்து அவர்களின் கருத்துக்களை நாட்டுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்ளும் ஒரு இதழாக நக்கீரனை பார்க்கிறேன்.
நக்கீரன் என்பது இந்த மக்களுக்கானது, இந்த மண்ணுக்கானது, நம் வாழ்வுரிமைக்கானது. போராடும் மக்களின் பக்கம் நிற்கின்ற இதழ் தற்போது அணுவுலைக்கு எதிரான போராட்டம் என்றாலும், கதிராமங்கலம் போராட்டம் என்றாலும், ஈழ போராட்டத்தில் தமிழர் ஒடுக்குமுறைக்கு எதிராக நீதிவேண்டி உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் போராட்ட நெருப்பாக இருந்தாலும் தொடர்ந்து நாட்டுமக்களுக்கு எடுத்துச்சொல்லும் பத்திரிகையாக தொடர்ந்து நக்கீரன் இருந்து வருகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறுகளையும், சிறந்த ஆளுமைகளை கொண்டு தொடர்களை எழுதும்பொழுதும், வரலாற்று தொடர்களை எழுதியும் எங்களை போன்ற இளம் தலைமுறை போராளிகள் வரலாறுகளை தெரிந்துகொண்டு அரசியல் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புகளை உருவாக்கும் பத்திரிகையாக நக்கீரன் இருந்து வருகின்றது. அந்த வகையில் நக்கீரன் தமிழ் சமூகம் வென்றெடுக்க கிடைத்த இன்னொரு எழுத்து ஆயுதமாக நாங்கள் நக்கீரனை பார்க்கிறோம்.
தொடர்ந்து முப்பதாண்டு காலமாக வெற்றிகரமாக நக்கீரனை நடத்தி பல அடக்குமுறை சிறை போன்ற ஒடுக்குமுறைகளுக்கு நடுவில் நின்று அந்த தலைமை பணப்பை பெற்றிருக்கின்ற அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், ஆசிரியர் லெனின் அவர்களுக்கும் அவரோடு தோளோடு தோள்நின்று களத்தில் உயிரை துச்சமென மதித்து செய்தி சேகரித்து மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற ஆற்றல் மிகுந்த துணிச்சல் மிகுந்த எனது அறிவார்ந்த நக்கீரன் ஊழியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் நக்கீரனுக்கென்று ஒரு இடமுண்டு அந்த இடம் சத்திய மங்கலத்தில் கர்நாடக, ஆந்திரா, தமிழகம் என்ற மூன்று மாநிலத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்த வீரப்பன் பற்றிய செய்திகளை தொகுப்புக்களாக வெளியிட்டதும், தமிழக மக்களின் மனதில் நெருங்கி இடம்பிடித்த பத்திரிகையாக மறக்க முடியாத இடத்தை பிடித்த இதழாக நக்கீரன் உள்ளது.
வீரப்பன் என்றால் முரடன், துப்பாக்கி வைத்திருப்பான் யாரிடமும் பேசமாட்டான் என்று சொன்ன புலனாய்வு குழுவிற்கே புலனாய்வு எப்படி செய்யவேண்டும் என்று கற்பித்த பத்திரிகை நக்கீரன் என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் தமிழகம் இழந்து நிற்கும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நக்கீரனின் பணி தொடர வேண்டும். நக்கீரன் ஆசிரியருக்கும், நக்கீரனில் பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக இந்தநாளில் வாழ்த்துகிறேன் நன்றி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
நக்கீரன் பத்திரிகை தொடக்க காலத்திலிருந்தே எனக்கு மிகவும் பரிட்சயமான பத்திரிகை. அன்றைய காலத்தில் வெளிவந்த பத்திரிக்கைகளில் புலனாய்வு பத்திரிகை என்றால் அது நக்கீரன் தான். மற்றவையெல்லாம் வழக்கமான பத்திரிகைகள்தான். புலன் விசாரணையை மையப்படுத்தி ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள், மோசடிகள், தவறுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் பத்திரிகையாக இருந்தது நக்கீரன்தான் என்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்று.
குறிப்பாக சொல்லவேண்டுமானால், நாங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை சொல்லவேண்டும் என்றால், அண்ணாமலை நகரில் பத்மினி என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு கணவனை அடித்து கொன்ற வழக்கு, அதேபோல் கம்மாபுரத்தில் ராஜாக்கண்ணு என்கின்ற ஆதிவாசி குடும்பத்தை அடித்து கொலைசெய்து ரோட்டில் போட்டது போன்ற பல காவல்துறை அத்துமீறல்களை எதிர்த்து போராடும் பொழுது நக்கீரன் அதுபற்றிய செய்திகளை வெளியிட்டு உறுதுணையாற்றினார்கள்.
இப்பொழுது நடக்கும் நிர்மலாதேவி மாணவிகளிடம் நடத்திய பாலியல் வற்புறுத்தல் கூட நக்கீரன்தான் முன்னதாகவே வெளியிட்டது. இப்படி பல நேரங்களில் அரசினுடைய தவறுகள், அதிகாரிகளுடைய தவறுகள், ஆளுங்கட்சியினுடைய தவறுகள் என நடக்கக்கூடிய முறைகேடுகளை அம்பலப்படுத்துவது, மக்களிடம் மறைக்கப்படக்கூடிய செய்திகளை கொண்டுவந்து சேர்ப்பதில் முக்கியமான பொறுப்பை நக்கீரன் கையில் எடுத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு அதிகமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. நக்கீரன் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் தாண்டி போராடி பத்திரிகை சுதந்திரதுடன் பத்திரிகை தொண்டாற்றுவது கண்டிப்பாக பாராட்டுக்குரியது.
முப்பதாண்டுகள் கடந்து மேலும் பல ஆண்டுகள் கடந்து மக்கள் மனதில் இன்னும் பல இடங்களை நக்கீரன் பிடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
அன்பிற்குரிய அண்ணன் திரு.கோபால் அவர்கள் நக்கீரன் வார இதழை தொடங்கி, மிகுந்த சிரமத்திற்கிடையில் பல்வேறு வார இதழ்களில் போட்டிகளுக்கு இடையே மிக வெற்றிகரமாக நடத்தி தற்போது மூன்று தினங்களுக்கு ஒரு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் பத்திரிகையின் பெயருக்கு ஏற்ப மிக துணிச்சலாக யாரும் வெளியிட அச்சப்படுகிற செய்திகளைக்கூட மிகுந்த துணிச்சலோடு வெளியிட்டு வாசகர்களின் நல்லாதரவையும், மதிப்பையும் பெற்ற இதழாக மலர்ந்து முப்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று முப்பத்தி ஒன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
மேலும் மேலும் அது வளரவேண்டும். தனது கடந்த முப்பதாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் மேலும் வாசகர்களை கவரக்கூடிய அளவில் மென்மேலும் வளர்ந்தோங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் நெஞ்சம் நிறைத்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட நக்கீரன் இப்போது 30 ஆண்டுகளை கொண்டாடும் மாபெரும் வளர்ச்சியை பெற்றிருப்பது என்னை போன்றவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
புதைக்கப்பட்ட செய்திகள், மறைக்கப்பட்ட வரலாறுகள், பின்தங்கிய மக்களின் குரல்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் கதறல்கள், அரசியல் அடாவடிதனங்களால் வஞ்சிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் என அனைத்தையும் துணிச்சலோடு பதிவு செய்த பத்திரிக்கை நக்கீரன் என்பது ஊரறிந்த உண்மையாகும்.
புலனாய்வு செய்தி என்றாலே நக்கீரன்தான் நினைவுக்கு வரும் என்ற அளவில் மக்களால் நக்கீரன் பத்திரிகை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் புறக்கணிக்கப்படக்கூடிய, மறைக்கப்படக்கூடிய செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நக்கீரனை எதிர்பார்த்து தமிழர்கள் காத்திருக்கக்கூடிய நிலை இருக்கிறது என்பதை மறந்துவிடமுடியாது.
இத்தகைய உயரத்தை நக்கீரன் அடைவதற்காக நக்கீரன் ஊழியர்கள் உயிர்தியாகங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.
நக்கீரன் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் நக்கீரன் ஆசிரியர் குழுவும், அதன் ஊழியர்களும், செய்தியாளர்களும் ஒரு குடும்பமாக இணைந்து உழைத்து வருவது அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியமான படிக்கற்களாக அமைந்திருக்கிறது.
நக்கீரனின் துணிச்சல் மிகு பயணம் தொடர்ந்து வெற்றி பெறவும், தமிழ்கூறும் நல்லுலகில் தொடர்ந்து மனசாட்சியாக திகழவும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு
ஜனநாயக நாட்டில் மூன்று தூண்கள் இருக்கிறது. ஒன்று நிர்வாகத்துறை, இரண்டு நீதித்துறை, மற்றொன்று சட்டமேற்றும் துறை. இந்த மூன்று தூண்களிலுமே தவறு நடக்கும்பொழுது தட்டிக்கேட்கும் நான்காவது தூண் இருக்கிறது என்றால் அதுதான் பத்திரிகை துறை.
அப்படிப்பட்ட ஊடகத்துறையிலேயே யாருக்கும் அஞ்சாமல் உண்மையாக, நேர்மையாக செய்திகளை வெளியிடுவதுதான் நக்கீரன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்தான் நக்கீரன். பெயருக்கு ஏற்றாற்போல் யாருக்கும் அஞ்சாமல் செய்திகளை வெளியிடுவதுதான் நக்கீரன்.
தமிழ் மக்கள் ஏற்கனவே அறிவில் சிறந்தவர்கள் விவரமானவர்கள் அவர்களுக்கே அறிவூட்டுகின்ற, நல்ல அறிவுரை கூறுகின்ற, உண்மையை எடுத்துரைக்கின்ற நேர்மையான இதழாக நக்கீரன் இருக்கிறது. அதற்கு எங்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
விவசாயிகள் என்றாலே அடிமைகள் என்று பார்க்கின்ற இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்காக நிறைய பேசுக்கின்ற எழுதுகின்ற பத்திரிகையாக இன்று நக்கீரன் இருக்கிறது. நிறைய பத்திரிகைகள் விவசாயின் பிரச்சனையை பற்றி பேசினாலும் அவைகளை விட சிறப்பாக விவசாயிகளுக்காக பேசக்கூடிய பத்திரிகையாக நக்கீரன் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
'நக்கீரன்' வார இதழ் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் தற்காப்பிற்கான பேராயுதம். அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகள், அடக்கு முறைகள், சமூக விரோத செயல்களை சமரசமின்றி தோலுரித்துக் காட்டும் மக்களுக்கான வார இதழ்.
துணிவு மிக்க எழுத்துலகத்தின் சிம்ம சொப்பனமாக விளங்கும் புலனாய்வு வார இதழான நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே. வாழ்க உன் தொண்டு, வளர்க உன் லட்சியம் வெல்க பத்திரிக்கை சுதந்திரம் என 31 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரன் ஆயிரமாண்டு வளர்க என வாழ்த்துகிறேன்.
அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் விவசாயிகள் சார்பில் உங்கள் பணி துணிவுடன் தொடர பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவரும், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு,
தமிழத்தில் புலனாய்வு பத்திரிகையிலேயே புதிய கருத்துக்களை, செய்திகளை, மக்களின் உணர்வுகளை, யார்க்கும் அஞ்சாமல் எந்தவொரு சமரசமும் இல்லாமல் உடனுக்குடன் வெளியிட்டு தமிழ் மக்களின் பேரன்பையும் ஆதரவையும் பெற்ற வார இதழாக நக்கீரன் உள்ளது.
பெரிய பெரிய வழக்குகளை சந்தித்த நக்கீரன் ஆட்டோ சங்கர் போன்ற தொடர்களை கூட வெளியிட்டு மக்களிடையே அம்பலப்படுத்தியது. இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த சந்தன காட்டு வீரன் வீரப்பன் வாழ்க்கை, வழக்குகள் அவருடைய உண்மை நிலவரங்களை வெளிச்சமிட்ட பத்திரிகை நக்கீரன்.
நக்கீரன் இதழின் ஆசிரியராக சமூகத்தை பற்றி 24 மணிநேரமும் யோசித்துக்கொண்டு எழுத்து துறையில் செயலாற்றி வரும் அண்ணன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
களத்திற்கே நேரடியாக சென்று செய்திகளை சேகரித்து நற்பணியாற்றும் நக்கீரன் பத்திரிகை ஊழியர்க்ளுக்கும், துணை ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த நக்கீரன் குழுவிலிருக்கும் அனைவருக்கும் கொங்கு இளைஞர் அணி சார்பாகவும் தனியரசு சார்பாகவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்
நக்கீரன் முப்பத்தி ஒன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. என்னை படைத்த இறைவனே ஆனாலும் நீ செய்தாலும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரரை தாங்கி வந்திருக்கும் இந்த பத்திரிகை, பலவித சந்தர்ப்பங்களில் பலவித இடையூறுகளை சந்தித்தும் இன்று தமிழகத்தில் தனக்கென தனியொரு அடையாளத்தை பெற்றிருக்கிறது.
இதற்கு பின்னே ஒளிந்திருக்கக்கூடிய கடின உழைப்பிற்கும், அர்ப்பணிக்கும் உணர்விற்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையின் உரைக்கல் நின்று செய்திகளை என்றும் செய்திகளாக தர, வரக்கூடிய காலத்தில் இன்னும் நக்கீரன் உயரமான இடத்திற்கு செல்வதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பாமக செய்தித் தொடர்பாளர் பாலு
நக்கீரன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத வாரப்பத்திரிகையாக, அரசியல் பத்திரிகையாக கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழர்களுடைய உரிமை சார்ந்த பிரச்சனைகளையும், தமிழ்நாட்டு நலன் சார்ந்த பிரச்சனைகளையும் சமரசம் இல்லாமல் அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் உண்மையை அப்படியே வாசகர்களுக்கு சொல்வதில் நக்கீரன் முதலிடத்தில் உள்ளது.
நக்கீரனின் வாசகனாக இந்த இதழை பார்த்தது முதல் இன்றுவரை தொடர்ந்து படித்துவரும் ஒருவன் நான். கிராமப்புறத்தில் அரசியல் களத்தில் ஈடுபடவேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசானாக இருந்து வருகிறது.
கிராமப்புறங்களில் இதைப்படித்து அரசியல் பழகக்கூடிய சூழல் இருந்தது, இன்றைக்கும் அது தொடர்ந்து வருகிறது. ஆளும் வர்க்கம் கொடுக்கக்கூடிய நெருக்கடிகளையெல்லாம் கடந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வதுதான் சிறந்த பத்திரிகை தர்மமாக இருக்க முடியும்.
அந்த வகையில் நக்கீரன் நல்ல பணியை தமிழ்நாட்டில் செய்கிறது. இப்போதிருக்கும் அரசியல் சூழலுக்கும் எதிர்காலத்திற்கும் மிக அவசியமான ஓன்று. நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், நக்கீரன் ஊழியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி
எவ்வளவோ பிரச்சினைக்கு மத்தியில், சிரமங்களுக்கு மத்தியில் 30 ஆண்டுகளை கடந்து வெற்றிக்கரமாக 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நக்கீரன். மத்திய அரசு, மாநில அரசு என்று பராபட்சம் இல்லாமல் நடுநிலையான செய்திகளை வெளியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தது நக்கீரன். நிறைய அடக்குமுறைகளை எதிர்கொண்டதும் நக்கீரன்தான். ஊழியர்களின் பங்களிப்பு, நக்கீரன் ஆசிரியரின் விடா முயற்சி போன்றவற்றால் நக்கீரன் வெற்றி பெற்றதாக நான் பார்க்கிறேன். நக்கீரன் இணையமும் தற்போது முன்னணியில் உள்ளது.
என்னைப்போன்று அரசியலில் இருப்பவர்கள் கருத்து கணிப்பு என்று வந்தாலே நக்கீரனின் கருத்து கணிப்பு என்னவாக இருக்கும் என்று தேடி தேடி வாங்குவோம் என்பதை பதிவு செய்தாக வேண்டும். நக்கீரன் மேன் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி
நக்கீரன் வார இதழ் ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் முடிந்து, 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை நக்கீரன் ஊழியர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் பத்திரிகைகளில் முதன்மையான பத்திரிகை நக்கீரன். நக்கீரனை வாசிக்காமல் அரசியல் நடப்புகளை விவாதிக்க முடியாது என்பதே உண்மை. மேலும் பல்லாண்டு பல்லாண்டு வெற்றிகரமாக செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.