வெனிஸ் குடியரசைச் சேர்ந்தவர் எலினா கோர்னரோ பிஸ்கோபியா. இந்தப் பெயர் வாய்க்குள் நுழையவில்லை என்றால், ஹெலன் கோர்னரோ என்று அழைக்கலாம்.
1646 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பிறந்த இவர், பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. இவர் பிறக்கும்போது இவருடைய பெற்றோர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருடைய தாய் ஜனெட்டா போனி நிஜத்தில் ஒரு விவசாயக்கூலி. எனவே, இவர் தந்தையின் குடும்பத்தில் சட்டப்பூர்வ உறுப்பினராக இல்லை.
இவருடைய தந்தை ஜியான்பட்டிஸ்டா கோர்னரோ குடும்பத்தைச் சேர்ந்தவர். அது பிரபுக்கள் குடும்பம். அந்தக் குடும்பத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவருடைய தாயோ ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, பெற்றோர் அனுமதித்தாலும் இவர் அந்தக் குடும்பத்தின் சட்டப்பூர்வ உறுப்பினராக முடியாது.
ஹெலனாவின் தாய் ஜனெட்டாவின் குடும்பம் பட்டினியால் வெனிஸை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தது. அந்தச் சமயத்தில் வெனிஸ் குடியரசின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜியான்பட்டிஸ்டாவின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. அவருடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றார். அதன்பிறகு, 1654 ஆம் ஆண்டுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் அவர்களுடைய குழந்தைகளுக்கு பிரபு அந்தஸ்த்து தடை செய்யப்பட்டது.
1664 ஆம் ஆண்டு ஹெலனாவின் தந்தை வெனிஸ் குடியரசு அலுவலகத்தின் கருவூல அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது உயர்ந்த பதவியாகும். வெனிஸ் நகர ஆட்சியருக்கு அடுத்த பொறுப்பாகும் இது. இந்த பொறுப்பை வைத்து, வெனிஸ் குடியரசின் அடையாளமாக கருதப்படும் கடலில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளில் முக்கியமான நபராக ஹெலனா பலமுறை செயல்பட்டார். இவருக்கும் பலமுறை நிச்சயதார்த்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார்.
சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது. லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஹீப்ரூ, அராபிக் ஆகிய மொழிகளில் தேர்ந்த அவர், கணிதம், தத்துவம், இறையியல் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். இவை தவிர இசையிலும் சிறந்த பயிற்சி பெற்றிருந்தார்.
20 வயதுக்குள் இயற்பியல், வானவியல், மொழியியல் ஆகியவற்றிலும் ஆர்வம் செலுத்தினார். இவருடைய ஆசிரியர் கார்லோ ரினால்டினி எழுதிய தத்துவம் குறித்த புத்தகம், ஹெலனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு ஜியோவன்னி லேன்ஸ்பெர்ஜியோ என்ற மதகுரு ஸ்பானிய மொழியில் ஏசு குறித்து எழுதிய நூல் ஒன்றை இத்தாலிய மொழியில் பெயர்த்து எழுதினார். அந்த நூல் 1969 முதல் 1972க்கு இடைப்பட்ட காலத்தில் 5 பதிப்புகள் வெளியானது. வெனிஸ் அரசாங்கமே இதை வெளியிட்டது. அந்த நூல் ஹெலனாவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது. பல கல்வியாளர் மாநாடுகளில் அவர் பேசினார். பசிபிக் பிரதேசத்துக்கான வெனிஸ் மக்கள் சங்கத்தின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஹெலனாவின் அறிவுக்கூர்மையை எடுத்துச் சொல்லி அவருக்கு படுவா பல்கலைக்கழகம் பட்டம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பெண் என்பதால் இறையியலில் அவருக்கு பட்டம் அளிக்க படுவா பிஷப் மறுத்துவிட்டார். மாறாக, தத்துவத்தில் அவருக்கு பட்டம் வழங்க ஒப்புக்கொண்டார். 1678 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி ஹெலனாவுக்கு நேப்பிள்ஸ், ரோம், பெருஜியா, போலோக்னா உள்ளிட்ட பல நகரங்களின் பல்கலைக்கழக அதிகாரிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் பட்டம் வழங்கப்பட்டது.
1684 ஆம் ஆண்டு மரணமடைந்த ஹெலனா, படுவா நகரில் உள்ள சாந்தா ஜியுஸ்டினா சர்ச் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய சிலை படுவா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது.