ஒட்டப்பிடாரம் அருகே போர்க்களக் காட்சியை சித்தரிக்கும் அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு!
நடுகல் நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்துபோன வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழரிடையே காணப்படும் வழக்கம்.
இத்தகைய நடுகல் வழிபாடு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்திலும் தமிழ்நாட்டில் நடுகல் வழிபாடு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

அரியவகை நடுகல்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே முறம்பன் என்னும் ஊரிலுள்ள குளத்தின் வடக்குப் பகுதியில் போர்க்களக் காட்சியை சித்தரிக்கும் அரியவகை நடுகல்லை, பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் பிரியாகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர்வினோத் ஆகியோர் களஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.

இது கர்நாடகத்தில் கிடைக்கும் நடுகல்லைப் போன்று நுணுக்கமான வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. நடுகல்லில் உள்ள சிற்பம்நாயக்கர் கால கலைப்பாணியை ஒத்துள்ளது. இந்த நடுகல் கிபி 16 அல்லது கிபி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரசனுக்கோ அல்லது குறுநிலஅரசனுக்கோ எடுத்த நடுகல்லாக இது இருக்கலாம்.
நடுகல் அமைப்பு நடுகல்லின் மையப் பகுதியில் அரசன் குதிரை மீது அமர்ந்து போரிடுவதுப் போலவும், அதனை எதிர்க்கும் வீரன் கையில் கேடயமும் வாளும்கொண்டு போரிடுவது போலவும், போர்களத்தில் குதிரைகள், வீரர்கள் வீழ்வது போலவும் நடுகல்லில் காட்சிப்படுத்தி இருப்பதால் போர்களத்தில்இறந்துப்பட்ட அரசனுக்கு எடுத்த நடுகல்லாக இதைக் கருதலாம்.
மேலும் நடுகல்லின் மேற்புறத்தில் வீரமரணம் எய்திய அரசனை தேவலோகப் பெண்கள் மாலையிட்டு தேவர் உலகிற்கு அழைத்துச் செல்வதுபோலவும் காட்சிப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது. பொதுவாக நாயக்கர் காலத்தில் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறும் பழக்கம் பரவலாகஇருந்து வந்தது. அதனால் அரசனின் மனைவிமார்கள் உடன்கட்டை ஏறிய காட்சியாகக் கூட இது இருக்கலாம்.
குலதெய்வமாக வழிபாடு இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நடுகல்லை சோலைராஜா என்ற பெயரில் நாயக்கர் சமுதாயத்தினர் இன்றும் தங்கள் குலதெய்வமாகவணங்கி வருகிறார்கள். இவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டாலும், ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று இங்கு வந்து விழா எடுக்கிறார்கள் என இவ்வூர் மக்கள் தெரிவித்தனர் என்று கூறினார்.
-இரா.பகத்சிங்