Skip to main content

மக்களுக்காகவே சுவாசித்த தோழர் சங்கரய்யா! 

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

N Sankaraiah passes away

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (15ம் தேதி) காலை  காலமானார்.  

 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி பிறந்த என். சங்கரய்யா பிறகு குடும்பத்துடன் மதுரைக்கு குடிபெயர்ந்தார். 1937ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டு, வரலாற்றுப் பிரிவில் இளங்கலை படிப்புக்கு சேர்ந்தார். இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையாலும், சனாதனத்தின் அடக்குமுறையாலும் மக்கள் அடிமைப்பட்டு இருந்த நேரத்தில் மக்கள் விடுதலைக்கான உணர்வைக் கொண்ட சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து சுந்திரப் போராட்டக் கூட்டத்தை நடத்தினார்.

 

இந்திய சுதந்திர வேட்கை தீவிரமடைந்த நேரத்தில், 1938ம் ஆண்டு சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து சென்னை மாணவர் சங்கம் எனும் அமைப்பைத் துவங்கி சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதேபோல், மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த மதுரை மாணவர் சங்கத்திற்கு என். சங்கரய்யா செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஒருபுறம் அந்நியர்களின் ஆதிக்கத்தால் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, மறுபுறம் நம் நாட்டிற்குள்ளேயே மொழிப் போர் துவங்க ஆரம்பித்தது. பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு என பன்முகத் தன்மையில் விளங்கி வரும் இந்தியா முழுவதும் ஒரே மொழியான இந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு முயற்சிகள் தலையெடுக்க, 1938ம் ஆண்டில் மாணவர்களுடன் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார் சங்கரய்யா. 

 

இந்தியாவில் பல நூறாண்டுகளாக வேரூன்றி, விருட்சம் அடைந்திருந்த சனாதனம், பட்டியலினத்தவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்ற உரிமையைப் பறித்திருந்த அந்தக் காலகட்டத்தில், 1939ம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி பட்டியலின மக்களின் குரலாக உரக்க ஒலித்தார் சங்கரய்யா. 17 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சங்கரய்யா, 1940ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டபோது இருந்த 9 உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

 

1941ல் கல்லூரி இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போரடி சிறை சென்றார். அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட என். சங்கரய்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடி சிறை சென்றதால் சங்கரய்யாவால் தனது கல்லூரி இறுதித் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு 1941ல் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பலரும், 1942ல் விடுதலை ஆனபோது சங்கரய்யா மட்டும் தேசத் துரோகம், கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபாடு போன்றவற்றைக் காரணம் காட்டி தொடர்ந்து 18 மாதங்கள் தடுப்பு காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தியும், தொடர்ந்து ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக நாட்டின் சுதந்திரத்திற்குத் தீவிரமான போராட்டங்களையும் முன்னெடுத்த சங்கரய்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நான்கு வருடச் சிறை வாழ்வில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகும் தொடர்ந்து உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த சங்கரய்யா, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புக்காக பலமுறை சிறை சென்றுள்ளார். 

 

1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 35 உறுப்பினர்கள் அங்கிருந்து பிரிந்து வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். அதில் என். சங்கரய்யாவும் ஒருவராக இருந்தார். 1957 மற்றும் 1962 ஆகிய பொதுத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா வெற்றி வாய்ப்பை இழந்தார். பிறகு 1967, 1977 மற்றும் 1980 என மூன்று முறை மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 1982ம் ஆண்டு முதல் 1991 வரை சங்கரய்யா விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். 

 

1986ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் மத்தியக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு தொடர்ந்து மத்தியக் குழுவில் செயல்பட்டு வந்த சங்கரய்யா, 1995ம் ஆண்டு கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதிலிருந்து 2002ம் ஆண்டு வரை சங்கரய்யா தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். 

 

தன் வாழ்நாள் முழுவதுமே மக்கள் விடுதலைக்காக அர்ப்பணித்த சங்கரய்யாவுக்கு 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதோடு அவருக்கு ரூ. 10 லட்சமும் அரசால் வழங்கப்பட்டது. தனது வாழ்வின் ஒவ்வொரு சுவாசத்தையும் மக்களுக்காகவே சுவாசித்த சங்கரய்யா தனக்கு வழங்கிய ரூ. 10 லட்சத்தையும் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கும், கொரோனா நிவாரண நிதிக்குமே திரும்பி வழங்கி மக்களுக்காகவே இருந்த சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று (15ம் தேதி) உடல் நலக் குறைவின் காரணமாகக் காலமானார். 

 

தன் வாழ்நாளில் சுதந்திரத்திற்கு முன்பு 4 ஆண்டுகள், சுதந்திரத்திற்குப் பிறகு 4 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் சிறையிலும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையாகவும் கழித்தவர் போராளி என். சங்கரய்யா. இந்திய சுதந்திரத்திற்குத் தனது பட்ட படிப்பைத் துறந்த சங்கரய்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இதற்கான அனுமதி உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி பிறகு அது ஒப்புதலுக்காகப் பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டபோது, அந்தக் கோப்பில் கையெழுத்திட மறுத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்குக் கண்டனம் தெரிவித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். மார்க்சிஸ்ட் கட்சியினர் காமராஜர் பல்கலை. வெளியே ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, மேடையில் பேசாமலேயே விழாவை முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்றார்.