Skip to main content

மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்..!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017


""நக்கீரன் பத்திரிகைங்களா? எங்க ஹவுசிங்போர்டுல இருக்கிற எழுதப் படிக்கத் தெரியாத ஏழை-எளிய பெண்களை, பூ கட்டுற வேலைன்னு ஏமாற்றிக் கூட்டிக்கிட்டுப் போயி… மாத்திரையெல்லாம் கொடுத்து சாப்பிடச் சொல்றாங்க. "ஈ'’படத்துல வர்ற மாதிரி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் மருந்து பரிசோதனைகளை செய்யுறாங்களோன்னு பயமா இருக்கு. நக்கீரன்தான் உண்மையை கண்டுபுடிச்சு அம்பலப்படுத்தணும்''’-சென்னை கொருக்குப்பேட்டையிலுள்ள பெண்கள், நமது அலுவலக எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் கொடுக்க... விசாரணையில் இறங்கினோம்.…

சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகர் ஹவுசிங்போர்டிலுள்ள பெண்களிடம் விசாரித்தபோது... நம்மிடம் பேசிய சகுந்தலா, ""மூணு வாரத்துக்கு முன்னால நந்தினி, முத்துநந்தினின்னு ரெண்டு பொம்பள பிள்ளைங்க வந்து, ‘"பூ கட்டுற வேலை இருக்கு... ஒருநாளைக்கு 150 ரூபாய் தருவோம் வர்றீங்களாம்மா?'ன்னு கேட்டாங்க.



வீட்டுச்செலவுக்கு ஆகுமேன்னு நான், மகாலட்சுமி, அமுலு, சரஸு எல்லாரும் கிளம்பினோம். அவுங்களே, பேரீஸ்ஸுல இருக்கிற ஒரு ஆபீஸுக்கு ஆட்டோவுல கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஃபாரினர்ஸும் இருந்தாங்க. ரெண்டு லேடீஸுங்க வந்து என்ன வயசு? உடம்புல என்னென்ன வியாதிங்க இருக்கு? குடிப்பழக்கம் இருக்கா? எந்தெந்த பிரச்சினைக்கு என்னென்ன மாத்திரை சாப்பிடுவீங்கன்னு கேள்வி கேட்டு விசாரிச்சாங்க. பூ கட்டுற வேலை எதுவும் கொடுக்கலை. எல்லோரையும் லேப்டாப்புல கேம் விளையாடச் சொல்லிட்டு ஒவ்வொருத்தரும் 61 ரூபாய் ஜெயிச்சிருக்கீங்கன்னு பணம் கொடுத்தாங்க. அப்புறம், ஒவ்வொருத்தருக்கும் தனியா பூ கட்டுற வேலைக்கு 150 ரூபாய் கொடுத்தாங்க. எங்களுக்கு ஒண்ணுமே புரியல.

அதுக்கப்புறம் "வந்ததிலேயே நீங்கதான் செலக்ட் ஆகியிருக்கீங்க... நாளைக்கு நீங்க மட்டும் வாங்க'ன்னு சொல்லிட்டாங்க. மறுநாள், போனதும் ஏதோ ஒரு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிக்கிட்டு, ‘"செலக்ட் ஆனவங்களோட பெயர்களை சீட்டுக் குலுக்கிப் போடுவோம். அதுல, யாரோட பேரு வருதோ அவங்களுக்கு ஒரு மாத்திரை கொடுப்போம். அந்த மாத்திரையை சாப்பிட்டு இங்கேயே இருக்கணும். அப்போதான், மயக்கம் வருதா? உடம்புவலி போகுதான்னு தெரியும்'னாங்க. ‘"என்ன மாத்திரை கொடுப்பீங்க?'ன்னு பதட்டத்தோடு கேட்டதுக்கு, அந்த பொண்ணுங்க, "அதையெல்லாம் சொல்லக்கூடாது சீக்ரெட்டு'ன்னதுமே எனக்கு டவுட் வந்துடுச்சு. ‘"வீட்டுல கேட்டுட்டு வந்துடுறேன்'னு சொல்லி ஓடி வந்துட்டேன். இந்தமாதிரி, ஏகப்பட்ட பெண்களை கூட்டிக்கிட்டு போய் மாத்திரைகளை கொடுத்து டெஸ்ட் பண்றாங்க. அவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சோ?''’என்கிறார் பதட்டம் விலகாமல்.

அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் பெண்மணியான சத்யவாணி நம்மிடம், “""ஃபார்மசிஸ்ட் படிச்சிருக்கிற என் பொண்ணுதான், "மருந்து பரிசோதனை பண்றாங்க போலிருக்கும்மா.  சில மாத்திரை மருந்துகளை கொடுத்து ஏதேனும் பின்விளைவுகள் வருதான்னு பரிசோதிப்பாங்க. இதில் சிலருடைய உயிருக்கே ஆபத்து வரலாம். அதனால, அந்த இடத்துக்கு யாரையும் போகவேணாம்'னு சொன்னா.

அதனால யாரும் போகல. ஆனா, திரும்பவும் வீட்டுக்கிட்ட வந்து நந்தினியும் முத்து நந்தினியும் வரச்சொல்லி வற்புறுத்தினாங்க. "நீங்க மருந்து விற்று கோடி கோடியா சம்பாதிக்கிறதுக்கு எழுதப் படிக்கத் தெரியாத எங்களோட உயிரைப் பணயம் வைக்கணுமா?'ன்னு டென்ஷனாகி காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100-க்கு போன்பண்ணி புகார் கொடுத்துட்டோம்.  உடனே, கொருக்குப்பேட்டை காவல்நிலையத்திலிருந்து போலீஸ் வந்து விசாரணை பண்ணினாங்க. ‘"எங்க அனுமதி இல்லாம எங்களுக்கு மருந்து கொடுத்து டெஸ்ட் பண்றது கொலைக் குற்றத்துக்கு சமம்'னு’ புகார் கொடுத்தோம். ஃபாரின்காரங்க எல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்தாங்க. என்ன பேசினாங்கன்னு தெரியல. லேடி போலீஸார் எங்களையே திட்ட ஆரம்பிச்சி விரட்டி அடிச்சுட்டாங்க'' என்கிறார் வேதனையுடன்.

சென்னை பாரிமுனை மாவட்ட கிளை நூலகக் கட்டிடத்தின் பக்கத்திலுள்ள எண்-19, மூக்கர் நல்லமுத்து தெரு, மூன்றாவது தளத்திலுள்ள மருந்து பரிசோதனை செய்யும் "சென்னை பிகேவியரல் எக்கனாமிக்ஸ் லேப்'புக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர் கெட்-அப்பில் சென்றோம். உள்ளே, ஒரு போர்டு கூட இல்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளரான ப்ளஸ்ஸி சாலுடெனியும், நம்நாட்டு ஆராய்ச்சியாளரான ஸ்னேகாவும் நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

""என்னுடைய உறவினர் பெண்மணிக்கு பூ கட்டுற வேலை கிடைக்கும்ங்களா? ப்ளீஸ்'' என்று நாம் ஆக்டிங் கொடுக்க, “""உடல் ரீதியான தகுதி ஆகுறவங்களுக்கு மட்டும்தான் இங்க வேலை. சீட்டுக் குலுக்கிப் போட்டு செலக்ட் ஆகுறவங்களுக்கு மட்டும்தான் மார்க்கெட்டுல கிடைக்குற சில வலி நிவாரணிகளை கொடுக்கிறோம். அந்த வலி நிவாரணிகள் அவங்களுக்கு எப்படி குணப்படுத்துதுங்குற ஸ்டடிதான் இது. ஐ.எஃப்.எம்.ஆர். (Institute of Financial Management and Research)தான் இந்த சர்வேயை செய்யுது. என்ன மாதிரியான மாத்திரைகளை கொடுக்கிறோம்னு சொல்லக்கூடாது சாரி...''’’என்று அப்பெண்மணிகள் மழுப்ப,… நமது சீக்ரெட் கேமரா அதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்துகொண்டது.

இதுகுறித்து, தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் சிவபாலனிடம் நாம் கேட்டபோது, “""ஒரு புதிய மருந்தை விலங்குகள், ஹெல்தி வாலண்டியர்ஸ்களுக்கெல்லாம் கொடுத்து, பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு  "எந்த பின்விளைவுகளும் இல்லை' என  நிரூபிக்கப்பட்ட பிறகுதான் சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கவேண்டும். ஆராய்ச்சி செய்யணும்னா சென்னை சாஸ்திரி பவனிலுள்ள மத்திய அரசின் சி.டி.எஸ்.சி.ஓ.(Central Drugs Standard Control Organization)விடம் அனுமதி வாங்கி ஹெல்தி வாலண்டியர்களின் உடல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி, அவர்களின் விருப்பத்தோடுதான் மருந்து பரிசோதனை செய்யவேண்டுமே தவிர, ஸ்டடி-வேலை என்கிற பெயரில் ஏமாற்றி அழைத்துச் சென்று மாத்திரைகளை கொடுப்பது சட்டப்படி குற்றம். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்''’என்றார் உறுதியாக.

ஹெச்-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்  சுந்தரத்திடம் நாம் கேட்டபோது, ""மார்க்கெட்டிங்கிற்காக சர்வே எடுத்திருக்காங்க அவ்ளோதான். விருப்பப்பட்டுப் போறவங்களுக்குத்தான் அங்க ஏதோ கொடுக்கிறாங்களாம். என்ன மாத்திரை, எதுக்கு கொடுக்கிறாங்கன்னு தெரியல''’என்கிறார்.

சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள ஐ.எஃப்.எம்.ஆர். லீட் அலுவலகத்தை தொடர்புகொண்டு, "மாத்திரை கொடுத்து பரிசோதிக்க மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத்துறையிடம் முறையான அனுமதி வாங்கினீர்களா?' நாம் கேட்டபோது, நம்மிடம் ஹெச்.ஆர். மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சுஷில், “""அனுமதி வாங்கியது குறித்து எங்கள் மேலதிகாரிகளிடம் உறுதிப்படுத்திவிட்டு சொல்கிறேன் சார். ஆல்ரெடி, மார்க்கெட்டிலுள்ள மாத்திரைகளை கொடுத்துதான் பரிசோதிக்கிறோமே தவிர புதிய மருந்துகளை அல்ல. இது, க்ளினிக்கல் ட்ரைல் அல்ல''’ என்கிறார் அவர் தரப்பு விளக்கமாக.

எந்த மாத்திரை மருந்தாக இருந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுத்து பரிசோதிப்பது கொலைக்குச் சமமாகும்.…இது மருத்துவ ரீதியாக கிரிமினல் குற்றமே. இதுகுறித்து, காவல்துறையும் சுகாதாரத்துறையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால்தான் தமிழகத்தில் இதுபோன்று  ஏழை எளிய மக்களை வைத்து மருந்து பரிசோதனை செய்யும் கொடூரங்களை தடுக்கமுடியும்.

-மனோசௌந்தர்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்