Skip to main content

தாயும், தந்தையுமாகிய "நூரி அம்மா "

Published on 20/12/2017 | Edited on 21/12/2017

தாயும், தந்தையுமாகிய "நூரி அம்மா "



ஆணிற்கும், பெண்ணிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், சலுகை,   பாதுகாப்பு எதுவும்  மூன்றாம் பாலினத்தவர்க்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கான சுதந்திரம், உரிமை அனைத்துமே இன்றும்  ஒரு வித இறுக்கமான சூழ்நிலையில்தான்  உள்ளது.  நமது சமூகம் இவர்களை இன்றும்  தூரப்பார்வையில்  பார்த்தாலும் அதையும் மீறி இந்த சமூகத்தில் வெற்றிநடைபோட்டு வாழ்ந்து காட்டியவர்களும் உள்ளனர்.    அதில் ஒருவர்தான் சமூக ஆர்வலர் திருநங்கை  "நூரி அம்மா" 

உங்களை  பற்றி  சொல்லுங்க அம்மா ?

என் பெயர் நூரி. நான் ஒரு திருநங்கை, நான் பிறந்தது சென்னைதான். என்னோட பூர்வீகம்  ராமநாதபுரம். எங்க அம்மா எனக்கு நாலு வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க. எங்க அப்பா என்னோட பதினெட்டாவது வயசுல இறந்துட்டாரு. அதுக்கப்புறம் நான் வறுமையால் பாதிக்கப்பட்டு திருநங்கையா மாறி   வீட்டிலிருந்து  வெளியேறி வாழக்கையில பல கஷ்டங்கள் பட்டேன். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டேன்.  1987 ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதலில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்தனர். இரண்டாவது  நபர்  நான்.  முதலில்  கண்டறியப்பட்டவர் இறந்துவிட்டார். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.

 எச்.ஐ.வி பாதிப்பு உங்க வாழ்க்கையை எப்படி மாற்றியது ?
 
முதலில் எனக்கு  இந்த நோய்   இருப்பது  தெரிந்தவுடன் மனதளவில் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனக்கு ஊக்கம் கொடுத்தது  டாக்டர்.உஷா ராகவன் மேடம்தான். எனக்கு மாத சாப்பாடு செலவுக்கு 750 ரூபாய்  ஆகும். அதையும் மேடம்தான் தந்தாங்க. அன்றோடு இந்த நோய் இருப்பதா நினைக்காம "காசுடன்  வந்த எச்.ஐ.வியை, ஓசியில் கொடுக்க விரும்பவில்லை நண்பா"னு  போஸ்டர் வெளியிட்டு  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். அதுக்கப்புறம் அரசு மருத்துவமனையில் இருந்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சேவை செய்ய தொடங்குனேன். சிறிது காலம் எனக்கு மேடம் உதவி பண்ணாங்க. என் சேவை தொடரவேண்டும் என்பதற்காக பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களில்  பணியாற்றி அது மூலம் எனக்கு வருமானமும் வந்துச்சு.  பால்வினை நோய்களுக்கு  எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன்.   ஆனா என்னோட உழைப்பை  வாங்கிட்டு என்னை  விளம்பரத்துக்கு மட்டும்  முன்னிலைப்படுத்துனாங்க. எனக்கு அதனால்   எந்த  பலனுமில்லை. அந்தத்  தருணத்துல உறுதுணையா இருந்து, 'நூரி உங்களால ஜெயிச்சு காட்ட முடியும்'னு ஊக்கம் கொடுத்தது டாக்டர்.ஜோசப்  வில்லியம்ஸ்தான்.  'சார் எனக்கு படிப்பறிவு அதிகமில்ல சார்'னு  சொன்னேன்.  'உங்களுக்குப்  படிப்பறிவை விட பகுத்தறிவு அதிகம்னு சொல்லி டாக்டர் கொடுத்த நம்பிக்கையில்  'தென்னிந்திய எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பை'  2001இல்  26  பேரைக்  கொண்டு ஆரம்பித்தேன் .  இந்த அமைப்பின் மூலமாக   பாலியல் தொழில் செய்தவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண் ,பெண் மற்றும் திருங்கைகள்  எல்லோருக்கும் சேவை செய்தோம். 2003இல்  எஸ்.ஐ.பி மெமோரியல் டிரஸ்ட்னு ஒன்றை  ஆரம்பிச்சேன்.  'எஸ்.ஐ.பி'னா என்னோட பழகிய மூன்று திருநங்கை நண்பர்களின் பெயரின் முதல் எழுத்து செல்வி , இந்திரா, பழனி மூனு பேரும் எச்.ஐ.வியால பாதிக்கப்பட்டு  இறந்துட்டாங்க. அவங்க ஞாபகமா அந்தப் பெயரை வைத்தேன். இந்தக்  கூட்டமைப்பு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

 

விழிப்புணர்வு கொடுக்க நீங்க எந்தெந்த நாடுகளுக்கு போயிருக்கீங்க, எத்தனை விருதுகள் வாங்கியிருக்கீங்க?

நான் 2001ல் முதன்முதலாக  ஆஸ்திரேலியா போனேன்.  அதுக்கப்புறம் 26 நாடுகள் இதுவரைக்கும் போயிருக்கேன். இந்தியாவில கேரளா தவிர மற்ற எல்லா மாநிலத்துக்கும் போயிருக்கேன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ள பேசியிருக்கேன். விருதுகள்னு பார்த்திங்கனா 2006ல "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாடு அரசிடமிருந்து வாங்கிருக்கேன். அப்போதைய ஆளுநர் ரோசையா அவர்கள் கையாள "பெஸ்ட் மதர் விருது" வாங்குனேன். மும்பைல டாக்டர் பத்ரா விருதுல "வில் பவர் லேடி விருது" வாங்கிருக்கேன். இதுமாரி பல விருதுகள் வாங்கிருக்கேன்.

நூரி அம்மாவோட குறிக்கோள் என்ன ?

எஸ்.ஐ.பி டிரஸ்ட்ல இப்ப ஒரு 45 குழந்தைங்க இருகாங்க. அந்த பிள்ளைங்களுக்கு தாயாவும்,  தந்தையாவும் இருந்துட்டு வரேன். இப்போ வரைக்கும்  டிரஸ்ட் இருக்குற இடத்துக்கு  வாடகை கொடுத்துட்டுதான் இருக்கோம். அதனால தனியா பல்லாவரத்துல ஒரு  இல்லம்  கட்டிக்கிட்டு  வரேன். அதுக்கு  நாலு கிரௌண்ட்  இடம் என் நண்பர் ஒருத்தரு வாங்கி  கொடுத்தாரு. இப்போ அங்க அடிக்கல் நாட்டி வேலை நடந்துட்டு இருக்கு. இதுக்கு நடிகர் சங்கம், வெளிநாட்டு நண்பர்கள்  அப்பறம்  இது மாரி நிறைய பேர்  உதவி பண்ணாங்க. அதுல ஒரு 90 லட்சம் ரூபா வந்துச்சு. அதவச்சு முக்கால்வாசி வேலை முடிச்சாச்சு. இன்னும் ஒரு 78லட்சம் தேவைபடுது அதுக்காக இப்ப முயற்சி பண்ணிட்டிருக்கேன். நூரி அம்மாவோட குறிக்கோள், கனவு எல்லாமே இத கட்டி முடிக்குறதுதான். நான் இல்லனாலும் இந்த இல்லம் மூலமா என் பேரு சொல்லி குழைந்தைகள் வாழனும்.



திருநங்கைகளுக்கான சலுகைகளை பற்றியும், அவர்களுக்கான  அங்கீகாரகளை பற்றியும் என்ன நினைக்குறிங்க?

திருநங்கைகளுக்கு அங்கீகாரமும், சலுகையும் கொடுத்தோம்னு சொல்றங்க ஆனா அதுவும் எங்கள மாரி அரைகுறையாதான் இருக்கு. இந்திய அரசாங்கம் என்ன சொல்லுது பாலியல் தொழில்ல ஈடுபடாதிங்க, கடைகள்ள போய் காசு கேக்காதிங்க அது சட்டபடி குற்றம் அப்படின்னு சொல்ராங்க. ஆனா அதுக்கு மாற்றா எந்த வேலை வாய்ப்பையும் அமைச்சுக்கொடுக்க மாட்றாங்க.  இப்போதைக்கு எங்கள  மாரி உள்ளவுங்கள்ள சாதிச்சவுங்க அப்படினு பாத்தா  விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் இருக்காங்க. இதுக்கும் சேர்த்துதான் நான் போராடிட்டு வரேன். எனக்கு உறுதுணையா இன்னும் சிலர் தேவை. அதுமட்டுமில்ல எங்கள மாரி பிறக்குற குழந்தைங்கள முதல்ல பெத்தவுங்க ஒதுக்காம இருந்தா போதும்,  அவுங்க ஒதுக்கமா இருந்தா இந்த சமூகம் எங்களை தள்ளிவச்சு பார்க்காது.  அதனால பெற்றோரும் எங்கள மாரி உள்ள குழந்தைகளை ஏத்துக்கனும்..

இந்த சமூகத்திற்காக நூரி போன்று உள்ளவர்களும் பல நல்ல விஷயங்களை  செய்து வருகின்றனர். அவர்கள்தான் தன்னபிக்கையின் உருவாகவும், மற்ற திருநங்கைகளுக்கு உதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். 

தன் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாயின் பாசத்தையும், தந்தையின் வழிகாட்டுதலையும் ஓர் உருவில் வழங்கி வரும் நல்ல ஆத்மாதான் இந்த நூரி அம்மா.

-ஹரிஹரசுதன்

சார்ந்த செய்திகள்