ஒரு குழந்தை பேசத் தொடங்கும் போதே நான் டாக்டராகனும், கலெக்டர் ஆகனும், போலீஸ் ஆகனும் என்று மழலை மொழியில் சொல்லச் சொல்ல உச்சி குளிர்ந்து போகும் பெற்றோர்கள், அந்த மழலையின் ஆசைக்கனவுகளை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்வார்கள்.அந்த குழந்தை பள்ளிப் படிப்பைத் தொடங்கும் போது அங்கே நடத்தப்படும் பாடங்களோடு இவர்களின் கனவும் ஆழமாகப் பதிந்துவிடும். ஒரு கட்டத்தில் அரசுப் பள்ளியில் படிக்கவே தேவைப்படும் சின்னச் சின்ன செலவினங்கள் கூட கனவை உடைக்கும் போதும் மாணவனுக்கும், பெற்றவர்களுக்குமே சுனங்கிவிடுகிறார்கள். அதிலும் துணிவோடு நின்றவர்களே வென்று சாதித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு மாணவனின் கனவை பணம் ஒருபக்கமும் நீட் மறுபக்கமும் சிதைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் அந்த மாணவன் இன்றுவரை துணிச்சலாகவே இருக்கிறார்.
எனக்காக யாராவது உதவி செய்ய வருவார்கள்; நிச்சயம் நானும் நீட் பயிற்சிக்கு போவேன். தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க போவேன் என்ற நம்பிக்கை அந்த மாணவனுக்குள் தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பாநாதாங்குளம் பகுதியில் சின்ன வயதிலேயே தன் தந்தையை இழந்து தாத்தா- பாட்டி, அம்மா, தங்கையுடன் வசிக்கும் ஷேக் அப்துல்லா (வயது 17). பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும், பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண் பெற்ற போது, அங்குள்ள பல தனியார் பள்ளிகள் மாணவன் சேக் அப்துல்லா வீடுக்கு போய் +1, +2 படிக்க எங்கள் பள்ளியில் கட்டணம் வேண்டாம் என்ற போது நான் அரசுப் பள்ளியிலேயே படிக்கிறேன் என்று மாணவன் பதமாக சொன்ன போது உறவுகள் வந்து நல்லா படிக்கிற பையனை தனியார்ல படிக்க வைக்கலாம்ல என்று சொல்ல.. எங்க புள்ள எங்க படிச்சாலும் நல்லா படிப்பான் தனியார்ல படிக்க பணம் வேணும். இங்க ஒவ்வொரு நாள் வாழ்க்கை ஓட்டவே சிரமமாக இருக்கு என்றனர் தாத்தா- பாட்டியும் அம்மாவும்.
நடப்பு ஆண்டு +2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து 538 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் தான் சின்ன வயசு கனவு மட்டுமின்றி தன்னை வளர்க்கும் தாத்தா- பாட்டியின் ஆசையுமான மருத்துவர் ஆக வேண்டும் என்பது நீட் தடை போட்டது. தற்போது தனியார் நீட் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் பணம் தேவைப்படும். ஆனால் புயலில் கிழிந்த தென்னங்கீற்றுகளைக் கூட மாற்ற வழியின்றி நிவாரணம் கொடுத்த தார்பாலின் போட்டு மூடிய வீட்டில் தார்பாலின் கிழிஞ்சுடுச்சு மாற்று தார்பாலின் கூட வாங்க முடியல எப்படி ஒரு லட்சம் கட்டி படிக்கிறது.
அதனால யாராவது நல்ல உள்ளங்கள் உதவினால் படிக்கிறேன். இல்லையென்றால் எங்காவது கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுவேன் என்கிறார் மாணவன் சேக் அப்துல்லா. இது போன்ற மாணவர்களுக்காக உதவி செய்ய எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்கள் நிச்சயம் உதவி செய்து மாணவனின் கனவை நினைவாக்குவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.