இந்த மாடர்ன் உலகத்தில், புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே போல புதிது புதிதாக நோய்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல், எபோலா, டெங்கு, இன்னும் என்னென்னவோ பெயர்களில் புதிதாய் நோய்கள் முளைக்கின்றன. மக்களை எவ்வளவு பாடுபடுத்த முடியுமோ அத்தனை படுத்துகிறது இந்த நோய்கள். கடந்த ஆண்டு திடீரென தமிழகத்திலேயே டெங்கு நோயால் பலர் பலியாகினர். இந்த நோய்களுக்கெல்லாம் முன்பிருந்தே, காசநோய் என்ற டி.பி, உலகை அச்சுறுத்தி வருகிறது. இன்று புதிது புதிதாய் பல நோய்களைக் கண்டுவிட்டதால் நமக்கு காசநோய் பற்றி பெரிய பயமில்லாமல் இருக்கிறது. ஆனால், இன்றும் இந்த நோயால் பலர் உலகளவில் பலியாகிக்கொண்டுதான் வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவே நமக்கு ஒரு தைரியம் வேண்டும். பாதிக்கப்பட்டவர் சதா இருமிக்கொண்டும், நெஞ்சுக்கூடுகள் தெரியுமளவுக்கு இளைத்த உடலுடனும், தோள்கள் மெலிந்தும், வேர்வை வழிந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் இருமும்போது வெளிவரும் சளியைக் கூட வெளியில் துப்பிவிட முடியாது. அதை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டும் இல்லையெனில் மற்றொருவருக்குப் பரவிவிடும். இது பரம்பரை வியாதி அல்ல, தொற்றுநோய் தான். இந்த நோய் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வளரும் ஒரு பாக்டிரியாவால் வருவது. பொதுவாக நுரையீரலில் வளரும். இன்றும் உலகில் மனிதனைக் கொல்லும் நோய்களில் முன்னிலையில் உள்ளது இந்த காசநோய்.
காசநோய், அந்த நோயால் பாதிக்கப்பட்டவரை எவ்வளவு சிரமப்படுத்துகிறதோ, அதேபோல ஒரு நாட்டையும், அரசாங்கத்தையும், பொருளாதாரத்தையும் சிரமப்படுத்துகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருபத்தி எட்டு லட்சம் காசநோயாளிகள் இருக்கின்றனர், 4,23,000 பேர் காசநோயால் இறந்துள்ளனர். ஒரு லட்சம் பேரில் 211 பேருக்கு மட்டும்தான் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாக ஐநா தெரிவிக்கிறது. 2012ஆம் ஆண்டில் காசநோய் என்பது கவனிக்கத்தக்க ஒரு நோயாக இருந்தது, இருந்தாலும் அதைப்பற்றிய எண்ணிக்கை தகவல்கள் சரியாக கிடைக்காமல் இருப்பதால், அந்த நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் மிகவும் சிரமத்திற்கு உள்ளானது. இந்த நோய்க்காக 2006ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை இந்தியா செய்த செலவு சுமார் 340 பில்லியன்.
இந்த நோய் அதிகமாக தாக்குவது மூன்றாம் நிலை நாடுகளைத்தான். அதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் நைஜீரியா, காங்கோ போன்ற நாடுகள் காசநோயால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் இந்த காசநோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் பதினேழு லட்சம் பேர் இறந்துவிட்டனர். 2017ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்றில், கடந்த பதினைந்து வருட காலமாக காசநோயுக்காக இந்த உலக பொருளாதாரத்தில் செலவிடப்பட்ட தொகை ஒரு டிரில்லியன். உலக சுகாதார மாநாட்டிலும் முக்கியமான ஒரு நோயாக இதை கருதி, இந்த நோயை 2030 ஆண்டுக்குள் ஒழிக்கவேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் இலக்கு வைத்துள்ளனர்.
இந்தியாவில் காசநோய் பரவலாக பரவியிருந்தாலும் உலக நாடுகள் வைத்திருக்கும் இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்பாக 2025இல் ஒழித்துக்கட்டுவோம் என்று இந்திய பிரதமர் மோடி, 'டிபி என்ட்' என்ற ஒரு காசநோய் ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இது சாத்தியமற்றதாகக் கூறப்பட்டாலும் இதனை காசநோய் விழிப்புணர்வு குழுக்கள் எல்லாம் ஆதரித்து வருகின்றனர். இந்தக் காசநோயை ஒழிக்க, ஏழை நாடுகளுக்கு, பிற பணக்கார நாடுகள் உதவி செய்ய வேண்டும், இல்லையெனில் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள், பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு உதவுதல் வேண்டும். இந்த நோய் மட்டும் இல்லை, வேறு எந்த நோயாக இருந்தாலும் மனிதனின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும்.