Skip to main content

மோடியின் தூக்கத்தை கெடுக்கும் குஜராத்!

Published on 24/10/2017 | Edited on 24/10/2017
மோடியின் தூக்கத்தை கெடுக்கும் குஜராத்! 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய தேர்தல்களையும் இந்தத் தேர்தலையும் ஒப்பிட்டு அவர்கள் இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குஜராத்தி அடுத்தடுத்து மூன்று முறை பாஜக வெற்றிபெற்ற நிலையில், அதையே மூலதனமாக்கி பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்தியது பாஜக.

மோடியை பிரதமராக்குவதற்கு கார்பரேட் நிறுவனங்களும், அம்பானி அதானி போன்ற பெரு முதாலாளிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தி புரமோட் செய்தனர்.

ஒன்றரை ஆண்டுகள் அவருக்காக இணையத்திலும் ஊடகங்களிலும் பிரச்சாரத்தை முன்னெடுத்து அதன்மூலம் மோடியை மிகப்பெரிய திறமையாளராக ஒரு பிம்பத்தை உருவாக்கினர்.

ஆனால், பிரதமரானதிலிருந்து மோடி அறிவித்த அத்தனை திட்டங்களுமே முதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டுமே பயன்தரக்கூடியவையாக இருப்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் தனது தோல்விகளை மறைக்க முந்தைய காங்கிரஸ் அரசையே குறைசொல்லி வரும் மோடி இதுவரை பத்திரிகைகளையும் காட்சி ஊடகங்களையும் சந்தித்ததே இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, மக்கள் பிரச்சனைகளுக்கோ பதில் அளித்ததில்லை.

இதையடுத்து, மோடி வெறுமனே பொதுக்கூட்டங்களில் மட்டுமே சவால்விடும் ஆளாக மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினர்.

இந்நிலையில்தான், பாஜகவின் தலைவரான அமித் ஷா மேற்கொண்ட அரசியல் தந்திரங்கள் அம்பலத்திற்கு வந்தன. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனிப்பெருங்கட்சியாக வந்த காங்கிரசை முந்தி, சுயேச்சைகளை விலைகொடுத்து வாங்கி ஆட்சியை பிடித்து பெருமை பேசியது பாஜக.



அதாவது, ஆட்சியைப் பிடிக்க கேவலமான முறைகளை கையாண்டது. காங்கிரஸ் செய்யாததையா நாங்கள் செய்துவிட்டோம் என்று காங்கிரசை முன்னுதாரணமாக காட்டி கேட்டார் அமித் ஷா.

இதைவிட மோசமான காரியம் என்னவென்றால், பிகாரில் நிதிஷ்-லாலு கூட்டணியை உடைத்து அந்த மாநிலத்தின் ஆட்சியிலும் பங்கேற்க நிதிஷுடன் ரகசியக் கூட்டணி அமைத்தார் அமித் ஷா. இதற்காக நிதிஷ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை காட்டி மிரட்டினார் என்று கூறப்பட்டது.

ஆனால், இந்த கூட்டணிக்கு பிறகு பிகாரில் லாலு மற்றும் சரத்யாதவ் இணைய வாய்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. இவர்களுடன் காங்கிரஸும் கைகோர்த்து மக்கள் ஆதரவுடன் அரசு எதிர்ப்பு போராட்டங்களை வலுவாக நடத்துகின்றனர்.

இந்நிலையில்தான் அமித் ஷா மற்றும் மோடி கூட்டணிக்கு குஜராத்தில் முதல் அடி விழுந்தது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அந்தக் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான அகமது படேலை தோற்கடிக்க அமித் ஷா மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையும் உருவானது.

அப்போது தொடங்கிய அமித் ஷா, மோடி ஆகியோரின் குஜராத் தேர்தல் பயம், அங்கு தேர்தல் தேதியை அறிவிப்பதிலேயே தயக்கத்தை ஏற்படுத்தி பாடாய் படுத்துகிறது என்கிறார்கள்.

அதுதவிர, படேல் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராடும் ஹர்திக் படேல், ஷத்திரிய வகுப்பினருக்கு ஆதரவான போராட்டக்குழுத் தலைவர் அல்பேஷ் தாகூர் மற்றும் தலித் மக்களின் போராட்டக்குழுத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூவரும் பிரதமர் மோடியின் தூக்கத்தை கெடுப்பவர்களாக உருவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் ஓபிசி வகுப்பினருக்கான போராட்டக் குழுத் தலைவர் அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்துவிட்டார். குஜராத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்துக்கு எப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமான மக்கள் திரள் சேருகிறது. இதை மோடி மூடி மறைக்கப் பார்த்தாலும் ஊடகங்களின் வெளிச்சம் உண்மையை உரக்க வெளிப்படுத்தி விடுகிறது என்பதே நிஜம்.

-ஆதனூர் சோழன்






சார்ந்த செய்திகள்