கரோனா என்கிற கொடூர அரக்கனால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது மத்திய அரசு. இதனைச் சமாளிக்க எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடங்களுக்கு கட் என்கிற அதிரடி முடிவுகளை எடுத்த மோடி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றார்.
அதேசமயம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்களின் பயனங்களுக்குச் செலவிடப்படும் நிதி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் பயணங்களுக்காக இந்திய விமானப்படையின் சிறப்பு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வருடத்திற்குப் பல கோடி ரூபாய்கள் செலவிடப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளைத் தொடர்ந்து, சிறப்பு விமானங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் பிற மாநிலங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.