Skip to main content

மன்மோகன் சாதனைக்கு உரிமை கொண்டாடும் மோடி!

Published on 27/03/2019 | Edited on 28/03/2019

தேர்தல் நெருங்க நெருங்க மோடியின் பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் மீதான ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக உருவெடுத்த நிலையில், அதை திசைதிருப்ப என்னவெல்லாமோ தந்திரங்களை கையாள்கிறார். ஆனால் அத்தனையும் அவரை காமெடியானாக்கி கடுப்பேத்துகின்றன.

 

election

 

மாறாக காங்கிரஸ் தரப்பில் வறுமைக்கு எதிரான இறுதித் தாக்குதல் என்ற அறைகூவலோடு, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தபட்சம் 25 கோடி பேர் பயனடைகிற வகையில் குடும்பத்துக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வருவாய் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

 

 

இந்த அறிவிப்பு மேம்போக்கானது அல்ல. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் ஆராய்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அறிந்தபிறகே அறிவிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். இந்தத் திட்டம் சாத்தியம்தான் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜனும் தெளிவுபடுத்தினார்.

 

election

 

இதையடுத்து மோடியும் பாஜக தலைவர்களும் பதற்றம் அடைந்தனர். உடனே, அந்தப் பேட்டி முடிந்த அரை மணி நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் அவசர அறிவிப்பு வெளியிடப்போவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து நாடுமுழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல திடீர் அறிவிப்பாகத்தான் பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு இந்திய மக்களை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்க வைத்தார். அதுபோல திடீரென்று வேறு ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடப்போகிறாரோ என்று மக்கள் பதற்றமடைந்தனர். தொலைக்காட்சிகளோ பிரேக்கிங் போட்டு இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தன.

 

 

 

ஆனால், வழக்கம்போல தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, இந்தியா விண்வெளி யுத்தத்திற்கு தயாராகிவிட்டது என்று கத்திப் பேசினார். ஆனால் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய பேச்சை கிண்டலடித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் தெறிக்கத் தொடங்கின.

 

 

 

விண்வெளித்துறை மோடியால் உருவாக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுவிடவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அந்தச் சாதனைகளையெல்லாம் டிஆர்டிஓவின் அதிகாரிகள்தான் வெளியிடுவார்கள். குடியரசுத்தலைவரும் பிரதமரும் மற்ற அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவிப்பார்கள். ஆனால், ராணுவத்தின் திடீர் தாக்குதலாக இருந்தாலும், விண்வெளித்துறையின் சாதனை என்றாலும் பிரதமர் தனது சாதனையைப் போல மார்தட்டிப் பேசும் பழக்கம் மோடியிடம் மட்டுமே இருக்கிறது.

 

 

 

மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தொலைக்காட்சியையோ, ரேடியோவையோ பிரதமர் பயன்படுத்தக்கூடாது. ஆனால், அந்த விதியையும் மோடி மீறியிருக்கிறார் என்று கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கொடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சரி, விண்வெளியில் சுற்றும் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் இந்த முயற்சி எப்போது தொடங்கப்பட்டது? மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் தொடங்கப்பட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது.

 

 

 

2011 ஆம் ஆண்டிலேயே செயற்கைக் கோளை தாக்கி செயலிழக்கச் செய்யும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றிபெற்றுள்ளனர். அந்த வெற்றியை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டி இருக்கிறார். அதற்கான செய்தி தி ஹிண்டு நாளிதழில் வெளியாகி இருக்கிறது. அதாவது 2010 ஆம் ஆண்டுகளிலேயே விண்வெளியில் சுற்றும் செயற்கைக் கோள்களை தாக்கி அழிப்பதற்கான சாதனங்கள் தயாரிக்கும் முயற்சியை டிஆர்டிஓ தொடங்கியிருக்கிறது.

 

election

 

2011 ஆம் ஆண்டு மட்டுமல்ல, 2018 ஆம் ஆண்டும் இதுபோல ஒரு தாக்குதலை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆனால், இப்போது என்னடாவென்றால் புதிய திட்டத்தைப் போல மோடி கதை சொல்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

 

 

மோடி உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்திலேயே காங்கிரஸ் தலைவர் ஒரு ட்வீட் செய்தார். அதில், சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த ராகுல், மோடிக்கு நாடக தின வாழ்த்துகளைத் தெரிவித்து கிண்டல் செய்திருந்தார்.

 

 

 

இந்த ட்வீட் வைரலாகியது. தனக்கு எதிரான விஷயங்களை திசைதிருப்ப மோடியும் பாஜகவும் செய்யும் அத்தனை முயற்சிகளும் காமெடியாகி அவர்களுக்கு எதிராகவே திரும்புகின்றன. காவலாளி என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்த மோடியை பணக்காரர்களின் காவலாளி என்றும், ஏழைகளின் பணத்தை திருடி பணக்காரர்களுக்குக் கொடுக்கும் திருடன் என்றும், திருடர்களை தப்பவிட்ட காவலாளி என்றும் பலவாறாக கிண்டலடித்தனர். உச்சபட்சமாக ராஜஸ்தானில் கிரிக்கெட் மைதானத்திலேயே காவலாளியே திருடன் என்று கோஷம் போடுகிற நிலை உருவானது.

 

 

 

இந்நிலையில்தான், ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கோ, விவசாயிகளுக்கோ ஒன்றையும் செய்யாத மோடி, தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அந்த அறிவிப்பும் எடுபடவில்லை. அதாவது, ஒரு விவசாயக் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 16 ரூபாய் 49 பைசா கொடுப்பதால் என்ன நன்மை. விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைக்கிறாரா மோடி என்று கிண்டல் செய்தார்கள்.

 

 

 

அதுமட்டுமின்றி, கார்பரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டு, அவர்களுக்கு 16 ரூபாய் கொடுத்து ஏமாற்ற நினைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

 

 

 

எந்தப் பக்கம் போனாலும் கேட்டைப் போடுறானுகளே என்று மயங்கியிருந்த மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் என்ற தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்தார். அந்த ஆயுதத்தையும் அன்பு என்ற ஆயுதத்தால், சமாதானம் என்ற ஆயுதத்தால் முறியடித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

 

 

 

இந்தியாவில் முதல்முறையாக சொந்த பிரதமரை கிண்டலடித்து, பாகிஸ்தான் பிரதமரின் சமாதான முயற்சியை இந்திய மக்கள் பாராட்டும் நிலை உருவாகி மோடியை வெறுப்பேற்றியது.

 

 

 

இப்படியெல்லாம் வெறுத்துப்போயிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்தியா முழுவதும் 5 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்க திட்டம் வகுத்திருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, இது சாத்தியமில்லை என்று பாஜக தலைவர்கள் பலவகையில் பிரச்சாரம் செய்தனர்.

 

election

 

ஆனால், இந்தத்திட்டம் சாத்தியம்தான் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார். அவருடைய பேட்டி ஏற்படுத்திய பதற்றம்தான் மோடியின் திடீர் அறிவிப்பின் பின்னணி. ஆனால், அவருடைய இந்த முயற்சியும் எடுபடவில்லை. ஏனென்றால், கடந்த முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் நாடு முழுவதும் கிராமப்புற ஏழைகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தபோதும் இப்படித்தான் சாத்தியமில்லை என்று பாஜக கூறியது. ஆனால், அந்தத்தி்டடம் நாடுமுழுவதும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், அந்தத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வேலையை பாஜக செய்கிறது என்பதே உண்மை.

 

 

 

ஏழைகளுக்கோ, விவசாயிகளுக்கோ எதையுமே செய்யாத மோடி அரசு, காங்கிரஸின் இந்த மாபெரும் வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து அஞ்சுவது இயல்புதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.