எமர்ஜென்சியைக் காட்டிலும் கொடூரமான சூழ்நிலைக்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை கொண்டு செல்கிறார்கள்...
ஒரு தொழிற்சாலையை மூடினால் முடியக்கூடிய பிரச்சனையை வேண்டுமென்றே ரணகளப்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்கிறார்கள். தமிழக மக்களை அழித்தாவது ஸ்டெர்லைட்டை காப்பாற்ற மோடி விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை மாநிலத்தை ஆளும் அடிமை அரசு செயல்படுத்தத் துணிந்துவிட்டது.
காவிரி டெல்டாவையும், தென் தமிழகத்தையும் கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்க மோடி முடிவு செய்துவிட்டார். 2019க்குள் அதை நிறைவேற்றவே, முதல்கட்டமாக தூத்துக்குடியை குஜராத்தின் அனில் அகர்வாலுக்கு எழுதிக்கொடுக்க முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.
காவிரி தண்ணீரைத் தடுத்து காவிரி விவசாயப்பகுதிகளை எண்ணெய் கிணறுகளாகவும், எரிவாயு குழாய்களாகவும் அம்பானி அதானிகளிடம் ஒப்படைக்கவே இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்கள்.
காஷ்மீரை அமைதிப்பூங்காவாக மாற்றுவோம் என்று சொல்லி, அந்த மாநிலத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நரகமாக்கி இருக்கிறார்கள். இப்போது தமிழகத்தின் மூன்று முக்கிய கடலோர மாவட்டங்களை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்ல ரகசிய ஏற்பாடாகவே இந்த கலவரத்தை பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.
அதன் ஒருபகுதியாகவே மூன்று மாவட்டங்களையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுபோக மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுவதாக கூறுகிறார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த போலீஸார் நடத்திய திட்டமிட்ட சதிகளை இளைஞர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்று தமிழ் இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்துவது மத்திய பாஜக அரசுக்கு புதிதல்லவா.
அதனால்தான், மூன்று மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க முடிவு செய்திருக்கிறது. இப்படித்தான் ஆளும் வர்க்கம் தீவிரவாதத்திற்கு வழி அமைக்கும் என்பது வரலாறு. மக்களுக்கு விருப்பமில்லாத நடவடிக்கைகளை அவர்கள் மீது திணிக்கும்போது இத்தகைய போராட்டங்கள் தவிர்க்க முடியாதது.
ஸ்டெர்லைட் மட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தில் துறைமுகம் கட்டுவதற்கான எதிர்ப்பையும், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களையும் ஒடுக்கவே இந்த சதி என கூறப்படுகிறது.
ஆனால், இந்த முயற்சிக்கு தமிழகம் ஒருபோதும் பலியாகாது.