மகாராஷ்டிரா பாஜக துணைத் தலைவர் சோமையா குறித்து வெளியான ஆடியோ வீடியோ விவகாரம், என்.டி.ஏ. கூட்டத்தில் மோடியின் பேச்சு உள்ளிட்டவைகள் குறித்து தி.மு.க மாநில செய்தித் தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷணி நமக்கு அளித்த பேட்டி;
அமலாக்கத்துறை ஊழல் செய்தவர்கள் வீட்டை தான் சோதனை செய்வார்கள். அவர்கள் நேர்மையாக தான் செயல்படுவார்கள் என்று ஒன்றிய அரசு கூறி வந்த நிலையில் மகாராஸ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க வை சேர்ந்த சோமையா பெண்ணிடம் அமலாக்கத்துறையை காரணமாக காட்டி தவறாக பேசிய ஆடியோ ஒன்று வந்திருக்கிறதே?
அமலாக்கத்துறை மீது மக்கள் மத்தியில் அச்சமும் மரியாதையும் இருந்தது. தவறு செய்யக்கூடாது, அதை தடுக்கும் அமைப்பு அது என ஒரு நிலைப்பாடு இருந்தது. ஆனால், அது மாதிரி எதுவும் தற்போது இல்லை. அமலாக்கத்துறை ஒரு பொழுதுபோக்கு துறையாக மாறி வருகிறது. அதுவும், தன்னிடம் இருக்கின்ற உச்சபட்ச கொடூரமான அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். செஸ் விளையாட்டில் சிப்பாய்களை நகர்த்துவது போல் பா.ஜ.க அமலாக்கத்துறையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாரையெல்லாம் நினைக்கிறார்களோ அவர்களை எல்லாம் டிக் செய்துவிட்டு அவர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையிடம் பா.ஜ.க சொல்கிறாரகள்.
அதுவும், அமலாக்கத்துறையை வைத்து கொண்டு பெண்களை அச்சுறுத்துவது என்பது மிகப் பெரிய கேவலமான செயல். மனிதாபிமானமற்ற செயல். பிரதமர் வெளிநாட்டில் சென்று எங்களுடைய டி.என்.ஏ.விலேயே ஜனநாயகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் டி.என்.ஏ.வில் இருப்பது வன்புணர்வு, வன்முறை, எதேச்சதிகாரம், மனித நேயமற்ற தன்மை தான் இருக்கிறது. அதற்கான சாட்சியாக தான் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் பேசியிருக்கிறார். அதைக் கண்டித்து யாரேனும் ஒரு வார்த்தை பேசி இருக்கிறார்களா.
மற்ற கட்சியில் இருக்கக்கூடிய எம்.பி, எம்.எல்.ஏக்கள் செய்யக்கூடிய ஊழலை இவர் தான் தட்டிக்கேட்பார் அதனால், இருக்கக்கூடிய சூழ்ச்சியாக இருக்கலாம் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்?
இப்போது ஒரு ஆடியோ கோப்புக்கள் அண்ணாமலை வெளியிடும் போது போலியானது என்று நாங்கள் சொன்னோம். அதுமாதிரி நினைத்து விட்டார்கள் போல். அதுவும் இது மாதிரி பொது வெளியில் சொல்லும் போது நிச்சயமாக அவர்கள் மீது இருக்கக்கூடிய தவறுதான். ஊழலை வெளியிடுவதால், இது சூழ்ச்சியாக இருக்கும் என்று இவர்கள் சொல்வதையல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவர்கள் என்ன சால்ஜாப்பு சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
அமலாக்கத்துறை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் செயல்படுகிறது என்று மக்கள் புரிதலோடு இருக்கிறார்களா?
மக்களை படிக்காத பாமரர்கள், இவர்களுக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் கொடுக்கின்ற தீர்ப்பு எல்லாம் சரியாக தான் இருக்கிறது. அதற்காக ஒன்றிய அரசை தேர்ந்தெடுத்தது சரியா என்று கேட்க கூடாது. ஒன்றிய அரசை தேர்ந்தெடுத்தது தவறு என்பதை தான் 9 வருடமாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்.
அமலாக்கத்துறையினர் காரணத்தோடு தான் சிறை வைப்பதும், வங்கி கணக்கை பார்ப்பதும் செயல்படுகிறது என்று சொல்கிறார்களே?
சிறையில் தான் வைத்திருக்கிறார்கள். இன்னும் விசாரணை நடக்கவில்லயே. இனிமேல் விசாரணை நடந்து அதன்பிறகு தான் அது நிரூபிக்கப்பட வேண்டும். டெல்லி துணை முதல்வரை எத்தனை மாதமாக சிறையில் வைத்திருக்கிறார்கள். அவருக்கு இன்னும் ஜாமீன் கூட கிடைக்கவில்லை. எனவே இந்த அதிகாரப் பீடங்களை எல்லாம் தன் கையில் வைத்திருக்கிறார்கள். அதற்கு கூடுதல் சாட்சிதான் தமிழ்நாட்டில் நடப்பவை எல்லாம். ஊழலுக்கு எதிரான கட்சி எங்களுடையது என்று பிரதமர் மோடி சொல்கிறார். அதெல்லாம் கிடையாது. ஊழல் செய்பவர்கள் எல்லாம் எங்கள் கட்சியில் வந்துவிடுங்கள், எதிர்ப்பக்கத்தில் போய்விட வேண்டாம் என்று தான் அவர் சொல்கிறார்.
அவ்வளவு ஏன் முதல் நாளில் அஜித் பவார் ரூ. 70,000 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று மோடி சொல்கிறார். அடுத்த நாளே, அவர் பா.ஜ.க.வுடன் சேர்ந்த போது அந்த 70000 கோடி ஊழல் எங்கே போனது. அவருக்கு எதற்கு துணை முதல்வர், நிதியமைச்சர் பதவி எல்லாம் கொடுக்கிறார்கள். அது மாதிரி தமிழக அமைச்சர்களிடம் இப்படியான பிரச்சனையை உண்டாக்குகிறார்கள்.
எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய கூட்டணியை முதலில் விதைத்தவரே நம்முடைய தமிழக முதல்வர் தான். அவருடைய பிறந்தநாளின் போது இந்த சிந்தனை தூண்டப்பட்டது. அவர் விதைத்த விதை தான் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அதை பார்த்து அச்சப்பட்டு இது மாதிரியான பிரச்சனையை உண்டாக்குகிறார்கள். பீகார் கூட்டம் அன்று செந்தில் பாலாஜி கைது நடந்தது. அது போல், பெங்களூர் கூட்டம் அன்று பொன்முடி விஷயம் நடந்தது. அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்பதை சொல்லிவிட்டார்கள் என்றால் மீண்டும் ஒரு அமலாக்கத்துறை நடவடிக்கை நடக்கும். இந்த திரைக்கதையை தான் பொது மக்கள் புரிந்து கொண்டார்கள்.
தேர்தல் அறிவிப்பு வரும் வரைக்கும் இவர்கள் இது மாதிரி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், இவர்கள் மீது சேற்றை வாரி இரைக்க வேண்டும், கலங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தவறு செய்ததை நிரூபித்து காண்பிக்க வேண்டும் என்பதை தான் எதிர்கட்சிகள் சொல்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த 9 வருடத்தில் 3000 வழக்குக்கு மேல் எதிர்கட்சி தலைவர்கள் மீது போட்டிருக்கிறார்கள். ஆனால், எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. ஒருவரை நடுராத்திரியில் இழுத்து கொண்டு போவது எவ்வளவு ஒரு கொடூரமான செயல். ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் அவருக்கான மரியாதையைத் தரவேண்டும். நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி இல்லை என்பது தான் நீதியின் முதல் பாடம். எனவே அவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான்.