அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், பொதுச்செயலாளர் தேந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன் ஜூன் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சில அறிவுரைகள் மட்டும் வழங்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர்கள் சிலர், தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்தது செல்லாது, மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற விதிகளும் அதிமுக பைலாவின்படி பொருந்தாது என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
''ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரன் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியதற்கு, ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’ என போஸ்டர்கள் ஒட்டியதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை ரசித்தார்கள். நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முயற்சிகள் நடந்திருக்கலாம்.
தர்மயுத்தம் நடத்தியதாக கூறிய ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் இணைந்த பிறகு தேனியில் பேசியபோது, பிரதமர் சொல்லித்தான் சேருகிறேன் என்று கூறியிருந்தார். ஜூன் 11ஆம் தேதி தங்கமணி, வேலுமணி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக பாதுகாத்துவிட்டதாக தோன்றுகிறது.
ஜூன் 12ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 250 பேரை தவிர அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் பொதுச்செயலாளர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜகவை விட்டு தனியாக இயங்க வேண்டும். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று இவர்கள் எடுத்திருக்கக்கூடிய முடிவு இன்னும் ஒரு சில மாதங்கள் ஓடும். அவ்வளவுதான். திமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளது. அதற்கான ஓட்டெடுப்பு வரும். ஆகையால் இப்போதிலிருந்தே சில பணிகளை செய்துகொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவி வேணும், வேண்டாம் என்ற வாதம், பிரதிவாதத்தை வைத்துக்கொண்டே வருகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் வேண்டும் என்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் வைத்துக்கொள்வோம் என்று முடிவு எடுப்பார்கள். பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என்று இவர்கள் நினைத்திருந்தால், முடிவு செய்திருந்தால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரியவர்கள் மீதும், போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக உள்ள பாஜகவை விட்டு தள்ளி நிற்க வேண்டும், பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்க வேண்டும் என்றுதானே சொன்னேன். பாஜகவால்தான் தோற்றோம் என்று அமைச்சர் சிவி சண்முகம் சொன்னார், பாஸ்கர் சொன்னார், மேலும் பலர் சொன்னார்கள். நான் சொன்னதைத்தானே அவர்களும் சொன்னார்கள். என் மீது நடவடிக்கை எடுத்தார்களே? ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்கின்றனர். அதில் பிரபு, ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சசிகலா இன்றைய நிலைமையில் தண்டனை குற்றவாளி. சிறையில் உள்ளார். அவரது தண்டனைக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க முடியும். தண்டனை பெற்ற குற்றவாளிகள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். அப்படிப் பார்க்கும்போது சசிகலா தலைமை பொறுப்புக்கு வருவது சாத்தியமில்லாதது''.