300 பூத்களில் அ.ம.மு.க.வுக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. பூத் ஏஜெண்ட்டுகள் கூடவா போடவில்லை' என வேதனை கலந்த சந்தேகத்தை ஊடகங்கள் முன் எழுப்பினார் டி.டி.வி.தினகரன். 1000 கோடி ரூபாயை ஒழுங்காக செலவழித்திருந்தால் இந்த சந்தேகம் வருமா என தினகரனிடம் கேட்கிறார்கள் சசிகலாவும் அவரது சொந்தங்களும்.
![ttv](http://image.nakkheeran.in/cdn/farfuture/jdCAc6ZbW1MQLpI_qBi_iqD9btjXE95ri2tQJtn5jlQ/1559208866/sites/default/files/inline-images/39_0.jpg)
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய அரசு சசிகலா வகையறாக்களை கண்கொத்தி பாம்பு போல கண்காணித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், தேர்தல் செலவுக்காக தினகரன் கேட்ட தொகையை இளவரசியின் மகன் விவேக் மூலம் ஒவ்வொரு கட்டமாக வழங்க ஏற்பாடு செய்தார் சசிகலா. குஜராத் மார்க்கெட்டில் வைரங்களை விற்றது மற்றும் தனக்கு தெரிந்த தொழிலதிபர்களிடம் வாங்கியது உள்பட ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். இடைத்தேர்தல் நடந்த ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு கட்டங்களாக தலா 5 "சி' தரப்பட்டுள்ளது. கடைசிக் கட்டத்தில் 15 "சி' கேட்டு வாங்கினாராம் தினகரன். தங்கதமிழ்செல்வன் போட்டியிட்ட தேனி தொகுதியின் கௌரவம் கருதி 25 "சி' அளவுக்குத் தாராளம் காட்டப்பட்டது. இதுபோக அ.ம.மு.க. சட்டமன்ற வேட்பாளர்கள் தங்கள் கையில் இருந்து ஐந்து கோடியும், நாடாளுமன்ற வேட்பாளர்கள் 10 கோடியும் செலவு செய்யவேண்டும் என்றும் சசியிடம் தினகரன் சொல்லியிருக்கிறார்.
![sasikala](http://image.nakkheeran.in/cdn/farfuture/oan55RRQK9IIJzdj9SbsH3M1aH_EUE4SRp-IQwpc1fE/1559208925/sites/default/files/inline-images/a%20sasi%20ttv_3.jpg)
இந்த பணவிநியோக விவரம் தினகரன், அவரது மனைவி அனுராதா, அவரது உதவியாளர் ஜனா தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. கொடுத்த வேட்பாளர்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் தினகரன் அமைத்திருந்தார். திருச்சி வேட்பாளரான சாருபாலா தொண்டை மான் 15 "சி'யில் 2 "சி'யை செலவழிக்கவில்லை எனத் தெரிந்து, அடியாள் படை அனுப்பி, அதை வசூலித்த தினகரன், பக்கத்திலுள்ள பெரம்பலூர் எம்.பி.வேட்பாளர் தொட்டியம் ராஜ சேகரும் அதேபோலத்தான் செயல்பட்டார் எனப் புகார் வந்தும் கண்டுகொள்ளவில்லை. வாக்காளர்களுக்கும் பெரியளவில் பட்டுவாடா நடக்கவில்லை. பூத் கமிட்டியில் இருந்தவர்களுக்கு தினமும் 1000 ரூபாய் என்பதுதான் முக்கிய செலவு. ஆனால், அ.ம.மு.க.வுக்குத் தொடர்பில்லாத பலர் பூத் ஏஜெண்டுகளாக இருந்தனர். தி.மு.க. உள்ளிட்ட வேறு கட்சியினரையும் பூத் ஏஜெண்டாக்கியதால்தான் அ.ம.மு.க.வுக்கு ஓட்டு விழவில்லை என்ற உண்மை தற்போது சசிகலா வரை சென்றுள்ளது.
![sasikala](http://image.nakkheeran.in/cdn/farfuture/IAkgeWHi1gAPRN6H_VynogGJNbdyGf2Wh5TrUCMG7S8/1559208976/sites/default/files/inline-images/a%20sasi%201_2.jpg)
தேர்தல் முடியும்வரை காத்திருந்த சசி தம்பி திவாகரனும் மற்ற சொந்தங்களும் தினகரனை எதிர்த்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். தினகரன் ஒரு செல்லாக்காசு என திவாகரன் கட்சியினர் பேசுகின்றனர். சசிகலா கொடுத்த ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்காமல் அமுக்கிவிட்டு, கட்சியினர் செலவிலேயே தேர்தல் பயணத்தை நடத்தியிருக்கிறார் தினகரன் என்கிறார்கள். தேர்தல் செலவுக்காக, தினகரனிடம் காசு பெற்றவர்கள் அவர்களுக்கு இருந்த சொந்த கடனை அடைத்து கொண்டார்கள் என்கிறார்கள் அ.ம.மு.கவினர். இதனால் ஜெயிலில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க தினகரன் தயங்குகிறாராம்.
தேர்தல் தோல்வியைத் தாண்டி, அ.ம.மு.க.வை அரசியல் சக்தியாக நிலை நிறுத்த முடியும் என தினகரன் நினைப்பதை சசிகலா நம்பத் தயாராக இல்லை. சசிகலா தன் பணத்தை விவேக் மூலம் மட்டும் செலவழிப்பதை மற்ற சொந்தங்கள் விரும்புவதில்லை. சசிகலா ஜெயிலில் உள்ள நிலையில், தினகரன் இல்லையென்றால், தங்கள் ஆதரவாளர்களை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இழுத்துவிடுவார்கள் என தினகரனுக்காக சிலர் சசியிடம் பரிந்து பேசியுள்ளனர். அதற்காகத்தானே பணம் கொடுத்தேன், அப்புறமும் ஏன் ஓட்டுவாங்கவில்லை' என்பது சசியின் கேள்வி. அவர்களின் சமூகம் இருந்த தென்மாவட்டங்களில் மட்டும் வாக்குகள் கிடைத்துள்ளன.
மற்ற இடங்களில் வெற்றி மீது நம்பிக்கை இல்லாததால் அ.ம.மு.க. வேட் பாளர்களும் செலவழிக்கவில்லை, ஆதரவாளர்களும் வாக்களிக்கவில்லை'' என்கிறார்கள் அ.ம.மு.க. நிர் வாகிகள். சசியும் தினகரனும் சந்திக்கும் போது இந்த ஆயிரம் கோடி விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.