மோடிக்குப் பள்ளி மாணவி கடிதம்
கடந்த சனிக்கிழமை (23/09/2017) அன்று ஹரியானா மாநிலம் சோனிபட் காவல் நிலையத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது. அதில் கோஹனா எனும் ஊரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தன் பள்ளியில் வேலை பார்க்கும் இரண்டு நபர்களால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் நகல், பிரதமர் மோடி, பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் உள்ளூர் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
'ஓம் பப்ளிக் ஸ்கூல்' எனப்படும் அந்த பள்ளியில் கிளர்க் கரம்பிர் மற்றும் அக்கவுண்டண்ட் சுக்பிர் தன்னைப் பல முறை பாலியல் ரீதியாக தொல்லைகள் செய்து வந்ததாகவும், அவர்கள் தன் தோழியையையும் அழைத்ததாகவும், ஆனால் தான் அதைத் தடுத்ததாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும், "அவர்கள் என்னை பள்ளி அலுவலகத்தில் வைத்து பாலியல் கொடுமை செய்தனர். அதே நாள் மாலை, ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கும் கொடுமையைத் தொடர்ந்தனர். இதனை என் குடும்பத்தார் யாருக்கும் கூறவில்லை. நான் ஒரு குக்கிராமத்தில் வாழும் பெண். என் அண்ணனிற்கு மட்டும் தெரிந்தால் என்னைக் கொலை செய்து விடுவான். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். என் தோழி கொடுத்த தைரியத்தில் தான் இவர்களை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார். இதனை முதலில் தன் வகுப்பு ஆசிரியரிடம் கூறியதாகவும் , அவர் பள்ளி முதல்வரிடம் கூறியதாகவும், ஆனால் பள்ளி முதல்வரோ இதனை அலட்சியமாக அணுகியதாகவும் கூறியுள்ளார். 'என்னைத் துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று முடிந்துள்ள அந்தக் கடிதத்தை எழுதியது யாரென இன்னும் தெரியவில்லை.
கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்தபொழுது, தங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுத்துள்ளார் பள்ளி முதல்வர். இதனைத் தொடர்ந்து காவல் துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் கைது செய்யவில்லை. 'அந்தப் பெண் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த நகரில் உள்ள ஹோட்டல்களில் விசாரிக்கிறோம். விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது' என்று டிஎஸ்பி முகேஷ் ஜகார் கூறியுள்ளார்.
இந்தியாவில் குழந்தைகளும், மாணவிகளும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் சண்டிகரைச் சேர்ந்த 10 வயது பெண் குழந்தை கற்பமானதாகவும் அதற்கு காரணம் அந்த குழந்தையின் மாமா என்று தெரிய வந்த செய்தி அதிர்ச்சியளித்தது. இந்தியாவில் ஒவ்வொரு 155 நிமிடங்களுக்கும் ஒரு 16 வயதுக்கு உட்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். ஒவ்வொரு 13 மணி நேரத்திற்கும் 10 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் குழந்தை பாதிக்கப்படுகிறது. இவற்றில் ஐம்பது சதவிகிதம் தவறுகள், அந்தக் பெண் குழந்தைகளுக்கு தெரிந்தவர் மற்றும் அவர்கள் நம்புவோர் மூலமாகவே நடைபெறுகிறது. இத்தகைய தவறுகள் செய்யும் அந்தக் கேவலமான மனிதர்கள் கடுமையாக தண்டிக்கப்பட கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றங்களே. ஆனால், சமீபத்தில் சென்னை போரூரில் மழலை ஹாசினியைக் கொடுமை செய்து உயிரைப் பறித்த தஸ்வந்த், குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுபோல, சமயங்களில் நீதியைத் தாண்டி அவர்கள் தப்பிவிடுவது துரதிர்ஷ்டம்.
சந்தோஷ்