Skip to main content

“திராவிடக் கருத்தியலும் தமிழ்த் தேசியமும் மாறானது அல்ல” - விளக்கிய சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ.

Published on 06/11/2024 | Edited on 06/11/2024
 mla sinthanaiselvan interview

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் வி.சி.க.  சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்

நீண்ட காலமாக பல்லக்கு தூக்கும் ஒரு நபர் இனிமேல் பல்லக்கு தூக்க முடியாது என்கிறார். அதற்கு மற்றொருவர் கொந்தளித்து எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதனால் பல்லக்கு தூக்கு என்று அந்த நபரை ஒடுக்குவதற்கான உரிமை பறிபோகிறது என்ற குரலில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லவேண்டும் என்பதை வியப்பாகவும் முரணாகவும் பார்க்கின்றேன். கஸ்தூரி தெலுங்கர்களைப் பற்றி பொதுவெளியில் அருவருப்பாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய அந்த சமூகத்தின் மீது மரியாதை இருந்தது. அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் முற்போக்கு சிந்தனையுடையவர்களாகத் தோன்றியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் உ.வே. சாமிநாதரின் பங்களிப்பை யாரும் தவிர்க்க முடியாது. இடதுசாரி இயக்கங்களில் பிராமணர்கள் தலைவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி இருந்த அந்த சமூகம் இப்போது ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகளிடமும் அர்ஜுன் சம்பத் கும்பலிடமும் அடைக்கலம் புகுந்துள்ளந்தனர். இது மிகவும் மோசமான நடவடிக்கை. இதனால் தற்போது அவர்கள் மீது வெறுப்பு உருவாகியிருக்கிறது. அதற்கு அவர்களே காரணமாக இருக்கின்றனர்.

பார்ப்பனர் என்ற சொல் தமிழ்ச் சொல். பார்ப்பனிய ஆதிக்கம் என்ற சொல்லை ஒரு சமூகத்தோடு தொடர்புடைய தத்துவமாகச் சுருக்க வேண்டாம் என்பதால் அதை சனாதனம் என்று சொல்கிறோம். இதை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் வி.சி.க. தலைவர் திருமாவளவன். பிராமணர்கள் என்பது வர்ணாசிரம அடுக்கைக் குறிக்கும் சொல். அதைச் சொன்னால் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் இருக்க வேண்டும். பிராமணர் என்ற சொல்லுக்கு வேறு வரையறையை அவர்கள் சொல்ல முடியுமா? சூத்திரர்கள், சத்திரியர்கள் இல்லாத உலகத்தில் பிராமணர்கள் இருக்க முடியுமா? வர்ணாசிரமம் தந்த ஆதிக்க சுகம் தற்போது கேள்விக்குள்ளாகும்போது ஏற்பட்ட பதற்றம்தான் அந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காரணம். இந்து ஒற்றுமை என்ற புதிய போர்வையில் பார்ப்பனியம் மீண்டும் களத்தில் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதனால்தான்  திராவிட கழகத்தின் மீது வெறுப்பைக் கக்கும் மேடையாக அது மாறியது. இந்து ஒற்றுமை என்று சொல்லுவது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவான புதிய கோட்பாடு. அதைப் புரிந்துகொண்டுதான் சனாதன எதிர்ப்பை மையப்படுத்துகின்றோம்.

மைக்கேல்பட்டி விவகாரத்தில் அங்கு மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்று  சி.பி.ஐ. வாக்கு மூலம் கொடுத்துவிட்டனர். ஆனால் இரண்டு வருடமாகத் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்தார்கள். கொடூரமான வன்முறை நடந்தது. இதுதான் சனாதனம். தேவையில்லாமல் அங்கு அவதூறுகளைப் பற்ற வைத்து ஒரு கும்பலை வைத்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். கோத்ரா ரயில் விபத்து விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இன்றுவரை இல்லை. அதற்கான தீர்ப்பு வரும் வரை பொறுமையாக இல்லாமல் இஸ்லாமியர்கள் மீது ஒரு வதந்தியைப் பரப்பி கொடூரமான வன்முறையை அவர்கள் மீது நடத்தினார்கள். அதற்கான கூறுகளைத்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால் சனாதன எதிர்ப்பிற்கான தேவை இன்றும் இருக்கிறது. அவர்கள் நடத்திய அந்த ஆர்பாப்பட்டம் சனாதன எதிர்ப்பிற்கான தேவை வலுவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

திராவிடம் என்ற கருத்தியலுக்கு எதிராக நா.த.க. கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். அவர்களின் முதன்மை முரண்பாட்டைத் திராவிட எதிர்ப்பு என்று வெளிப்படுத்துகின்றனர். அதே தொனியில் திராவிட எதிர்ப்பு  இந்து மக்கள் கட்சி சார்பில் அந்த மேடையில் வெளிப்பட்டது. திராவிடம் என்ற சொல்லைத்  தரம் தாழ்ந்து அந்த மேடையில் இருந்தவர்கள் பேசினார்கள். இந்தியா முழுமைக்கும் பரவி இருந்த மக்கள் நாகர்கள் என்ற மரபுக்கூறைக் கொண்டவர்கள் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அந்த தொல்குடிகள் சிந்துவெளி வரை பரவி இருந்தார்கள் என்று ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா உள்ளிட்ட ஆய்வாளர்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்கள். இந்தியா முழுக்க பரவி இருந்த அந்த மரபினர்கள் பேசிய தொன்மை மொழி தமிழ். அது பல்வேறு நிலவியலில் திரிந்தது. அந்த மொழிகளை ஆரிய மொழிகளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ஒரு பொதுப் பெயராகத் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது ஒரு கருத்தியல் அது ஆரியத்தை மறுக்கிற ஆரியரல்லாத சமூகத்தைச் சுட்டிக்காட்ட திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகப் பயன்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை முன்னெடுத்தவர்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தனர். தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழக்கத்தைத் தொடர்ந்து முன்னிறுத்தியவர் தந்தை பெரியார். தமிழர்கள் சாதிய வர்ணாசிரம கொள்கையால் பிரிந்துவிடக்கூடாது என்பதற்கு அடையாளமாகத் திருவள்ளுவரின் கருத்தை தி.மு.க. நாடெங்கும் பரப்பியது. பொங்கல் பண்டிகையை தி.மு.க. மீட்டுருவாக்கம் செய்து அதைத் தேசிய திருவிழாவாக மாற்றியது. திராவிடக் கருத்தியலும் தமிழ்த் தேசியமும் மாறானது அல்ல. ஆனால் சனாதன எதிர்ப்பை முதன்மை எதிர்ப்பாக முன்னிறுத்த வேண்டும் என்ற வரலாற்றுத் தேவை இருக்கிறது. அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு திராவிட எதிர்ப்பை முன்னிறுத்துவது என்பது சனாதன எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்கிற சூழ்ச்சி. திராவிடத்தை எதிர்ப்பவர்கள் கடைசியாக நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லுகிற பிராமணர்கள் களத்தில்தான் நிற்பார்கள். சாதி வேண்டாம் என்று முழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். சாதி வேண்டுமென்று என்று சொல்லி தங்களை இந்த சொல்லால் அழைக்க வேண்டாம் என்று புதிய போர்வையைக் கேட்கிற முறையாகத்தான் அது இருக்கிறது. அதனால் தமிழ்த் தேசியம் பேசுகிற நண்பர்களும் இன்று அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.