எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் தன்ஷிகா!
சிறப்பு நேர்காணல்...
கபாலியில் 'பாப் கட்', பரதேசியில் முகத்தில் வறுமை வடியும் பெண், 'எங்கம்மா ராணி'யில் இரண்டு சிறுமிகளுக்குத் தாய், இப்படி, எப்பொழுதுமே 'நார்மல்' நாயகியாய் இருந்ததில்லை தன்ஷிகா. இம்முறை அவரை சந்தித்த பொழுது சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தார். 'கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ்' எல்லாம் இல்லாமல் உண்மையாகவே சுற்றுகிறார். தமிழரின் பாரம்பரிய பாதுகாப்புக் கலையின் மீது ஆர்வம் கொண்டு பயின்று வரும் தன்ஷிகாவின் பயிற்சியாளர் 'மாஸ்டர்' பாண்டியன் உடனிருந்தார். "இப்பொழுது பலரும் ஆர்வமுடன் சிலம்பம் கத்துக்குறாங்க. சினிமாவில முதலில் எம்.ஜி.யார் தான் சிலம்பக் காட்சிகளில் அதிகம் நடிச்சாரு...நடிகைகள்ல ஜெயலலிதா சிலம்பம் சுத்தி நடிச்சாங்க...இப்போ தன்ஷிகா ஆர்வமா கத்துக்குறாங்க. 'பேராண்மை' படத்துக்காக பயிற்சி பெற வந்தவங்க, இன்னும் தொடர்ந்து பயிற்சி செய்றாங்க" என்ற பாண்டியன் மாஸ்டரின் அறிமுகத்துடன் நமது உரையாடல் தொடங்கியது.

சிலம்பம், பாரம்பரியமிக்க ஒரு தமிழர் கலை, இதைக் கற்றுக்கொள்ளணும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போ வந்துச்சு? அதனால உங்களுக்குக் கிடைச்ச பயன்கள் என்ன?
ஷூட்டிங் இல்லாத நேரத்துல, நான் பெரும்பாலும் சிலம்பம் பயிற்சி தான் பண்ணுவேன். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி, இத பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் நிறைய கான்செண்ட்ரேஷன் வந்துருக்கு. எது பண்ணாலும் சரி நடிக்கிறதா இருந்தாலும், இல்லபக்கம் பக்கமா வசனங்கள் படிக்கிறதா இருந்தாலும் சரி, நான் அந்த வித்தியாசத்தைப் பாத்தேன். சிலம்பத்துல ஒரே நேரத்துல லெஃப்ட் ஹாண்ட், ரைட் ஹாண்ட் ரொட்டேஷன் பண்றோம். அத்தனை ஃபிங்கர் ஜாயிண்ட்சும் வேலை செய்யுது. அதனால லெஃப்ட் பிரைன், ரைட் பிரைன் இரண்டும் ஒரே நேரத்துல வேலை செய்யும். அதுனால ஃபிஸிக்கலாவும், மென்டலாவும் நெறைய மாற்றங்கள் உணர்ந்தேன். இப்போதெல்லாம் எத்தனை பக்க வசனங்கள் கொடுத்தாலும், உடனே நடித்து முடிக்கிறேன். இதெல்லாம் பண்றவுங்க ரொம்ப அக்ரஸ்ஸிவ் ஆவாங்கண்ணு சொல்லுவாங்க. ஆனா, நான் பொறுமையாகவும் பக்குவமாகவும் உணருகிறேன். கண்டிப்பா இப்போ இருக்குற சொசைட்டில பெண்களுக்கு பாதுகாப்பு கம்மியா இருக்கு. நிறைய பெண்கள் வேலைக்கு போறாங்க, நைட் ஷிப்ட் போறாங்க. அவுங்க ஒரு தற்காப்பு கலைய கத்துவச்சுக்கணும். சிலம்பம்னு இல்ல, எதாவது ஒரு தற்காப்பு கலைய கத்துவச்சுக்கணும். ஏன்னா ஒரு மோசமான சூழ்நிலை வரும்போது நமக்குக் கான்ஃபிடன்ஸ் இருக்காது, பதட்டம் வரும். அத முறியடிக்கிறதுக்கு நமக்கு கண்டிப்பா ஃபிஸிக்கல் ட்ரைனிங் தேவை. அட்லீஸ்ட் அங்க இருந்து ஓடுறதுக்காவது தெரியணும்.
நடிகைகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல சில தொல்லைகள் வரும், அப்படி வரும்போது இந்தக் கலைய பயன்படுத்தி யாருக்காவது ஒரு கிக் விட்டுருக்கீங்களா?
பொதுவா ஷூட்டிங் போகும்போது உங்கள சுத்தி நிறைய கூட்டம் வரும். நிறைய கிரௌட்ல நடக்க வேண்டியது வரும். அந்த சூழல்ல கூட நமக்கு நிறைய விஷயங்கள் நடக்கும். எல்லா பெண்களுக்கும் நடக்குற மாதிரிதான் எங்களுக்கும் நடக்கும். இருந்தாலும் கூட எங்களுக்கும் நடந்துருக்கு. நானும் யூஸ் பண்ணிருக்கேன். மாஸ்டர் சொல்லிருக்காரு தற்காப்பு கலைங்குறது நம்மை தற்காத்துக்குறதுக்கு தான், அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அத எங்க யூஸ் பண்ணணுமோ அங்க யூஸ் பண்ணனும்.

கபாலி ஷூட்டிங் ஸ்பாட்ல திடீர்னு ரஜினி கால்ல விழுந்தீங்களாமே, என்ன காரணம்? யாருக்கும் சொல்லாத அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்?
ஆமா, அத யாருக்கும் சொன்னதில்லை. அது என்னன்னா 'அப்பா'னு கூப்டுற அந்த 'கன் ஷாட்' சீன் வரும்ல, அத நாங்களெல்லாம் கம்போஸ் பண்ணிட்டு இருந்தோம். ரஜினி சார் வந்தார். ஸ்டண்ட் மாஸ்டர் அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணார். 'அப்டியா, அப்டியா'னு கேட்டுட்டு 'நான் என்ன செய்றேன்?'னு கேட்டாரு. 'நீங்க கைய பிடிச்சுட்டு முகத்தைப் பாத்துட்டே போகணும்'னு சொன்னாரு. 'ஓ அப்டியா'னு சொல்லிட்டு என்கிட்ட ஒன்னு சொன்னாரு. நான் அத சொல்லமாட்டேன்(சிரிக்கிறார்). அப்படி சொன்னவுடனே சாஸ்டாங்கமா கால்ல விழுந்திட்டேன். ஆனால், அவரு ரொம்ப ரொம்ப ஸ்போர்ட்டிவ். அந்த ஸ்பேஸ் கொடுத்தாரு எனக்கு. என்னால எதெல்லாம் சிறப்பா பண்ண முடியுமோ, அத்தனை விஷயங்களுக்கும் 'நல்லா பண்ணட்டும், நல்லா பண்ணட்டும்'னு ஒரு என்கரேஜ்மெண்ட். எல்லாரும் வளரணும்ங்குற மோட்டிவ் இன்னும் அவருக்குள்ள இருக்கு.
நீங்க பள்ளியில் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்தீங்க. பொதுவா சினிமான்னாலே குடும்பத்துல பயப்படுவாங்க. சினிமாவுல நடிகைகளுக்கு வேறு மாதிரியான பிரச்சனைகளும் இருக்குமென்று கூறுவார்கள். அந்த மாதிரி பிரச்சனைகள் நீங்க சந்திச்சிருக்கீங்களா?
எனக்குத் தெரிஞ்சு பெண்களுக்கு எல்லா இடங்கள்லயுமே பிரச்சனை இருக்கு. எல்லா துறையிலுமே பெண்களுக்கு பிரச்னை இருக்கு. அதுல இருந்து நம்மள எப்படி ஹோல்டு பண்ணிக்குறோம் அப்டிங்குறதுலதான் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி சினிமாவுல சர்வைவல் ஆகுறது ரொம்ப கஷ்டம். அது எனக்குமே தெரியும். நிறையபேர் கேட்டாங்க, 'நீங்க தமிழ் பெண்களை சினிமாவுக்கு வர என்கரேஜ் பண்ணுவிங்களா'னு. கண்டிப்பா பண்ணுவேன். அவுங்களும் கண்டிப்பா வரலாம், நாம எப்படி நடந்துக்குறோமோ அப்டித்தான் அவுங்களும் நடந்துக்குவாங்க.

சினிமாவுல நடிகைகள் சிலபேருக்கு அட்ஜஸ்மென்ட் பண்ணாதான் வாய்ப்புகளே கிடைக்கும்னு ஒரு பேச்சு இருக்கு. அது உண்மையா?
கண்டிப்பா இருக்கு. அது இல்லன்னுலாம் சொல்லிற முடியாது. அது இல்லாம வரும்பொழுது நம்ம ஹார்ட் ஒர்க் 200 பெர்சன்ட் தேவைப்படுது.
அந்த மாதிரியான விஷயங்கள் உங்க வளர்ச்சிக்கு தடையா இருக்கா?
ஆமா, என்னோட ஜர்னி பாத்தீங்கன்னா தெரியும். அதனாலதான் நான் இன்னும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் சிரமப்படுகிறேன். இத்தனை படங்கள் நடிச்சாலும் முதல் படம் போலதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கு. நம்மள நிரூபிக்கிறதுக்கு அந்த இடத்துல இன்னும் அதிகமா உழைக்க வேண்டியிருக்கு. நீங்க சொல்றது 100 பெர்சன்ட் உண்மை.
சந்திப்பு : ஃபெலிக்ஸ்
புகைப்படங்கள் : வினோத், பாலாஜி
தொகுப்பு : கமல்